Sunday, February 1, 2015

77. உயிர் வலித்த கணம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

உயிர் வலித்த கணம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சுந்தர மூர்த்தி செந்தூரன் என்ற இயற் பெயரைக்கொண்ட வன்னியூர் செந்தூரனின் இரண்டாவது தொகுப்பாக மலர்ந்திருக்கிறது உயிர் வலித்த கணம் என்ற கவிதைத்தொகுதி. கிழக்கு பல்கலைக்கழக மாணவனான இவர் நிலவைத் தேடும் வானம் என்ற கவிதைத் தொகுதியை 2013 இல் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

66 பக்கங்களை உள்ளடக்கியதாக செந்தணல் வெளியீடாக வெளிவந்துள்ள உயிர் வலித்த கணம் என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் 29 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இதிலுள்ள இவரது அநேகமான கவிதைகள் யுத்த கால நிலவரங்களை எடுத்தியம்புகின்றன. ஒரு சில கவிதைகள் காதல் நினைவுகளை மீட்டிச் செல்வதுடன் சமூகப்பாங்கான கவிதைகளும் இதில் காணப்படுகின்றன. பரவலாக நோக்குமிடத்து கடந்து வந்த கற்பாதைகள் இவர் கவிதைகளுக்கு கருவாயிருக்கின்றன. பட்ட அடிகள் அடித்தளமிடுகின்றன.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் அவர்கள் தனதுரையில் ``பொதுவாக கவிதை வடிவங்களை செய்யுள், கவிதை, புதுக்கவிதை, பின்னவீனத்துவக் கவிதைகள் என்று வகைப்படுத்திக் கொள்கின்றனர் இன்றைய நவீன இலக்கிய வல்லுனர்கள். எப்படியிருந்த போதும் கவிதைகள் மொழிகளால் திரட்சியுறும் போது அவை வாசகர் நெஞ்சங்களில் ஒரு மிளிர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டும். அந்த மிளிர்ச்சியானது உளம் சார்ந்து ஆய்வு செய்யப்படும் ஒன்றாகவே இருந்துவிடப் போகின்றது. அதாவது குறித்த கவிதைகளை வாசிக்கின்றபோது ஒரு சிலிர்ப்பு அல்லது சிரிப்பு அல்லது வியப்பு அல்லது நெஞ்சை நெருட்டும் விம்மல் அல்லது ஒரு கேள்வி என்று பலவித அருட்டுணர்வுகளைத் தோற்றுவித்தாக வேண்டும். இதில் ஏதோ ஒன்று சம்பவிக்கவில்லை எனின் நாம் வாசித்தது ஒரு சம்பவத்திற்கான கட்டுரைப் பந்தி அமைப்பாகவே இருக்க வேண்டும். ...முல்லைத்தீவு மண் அரிய பல இலக்கிய ஜாம்பவான்களைத் தந்த இலக்கியப் பொழில் பூமி. அப்படியான வீர மண்ணிலிருந்து இன்று இளைய கவிஞர்கள் பலரும் முகிழ்ந்து எழுந்து வருகின்றார்கள். அவர்களுள் ஒருவராகவே வன்னியூர் செந்தூரனும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.'' என்று குறிப்பிடுகின்றார்.

மு/கற்சிலைமடு அ.த.க. பாடசாலை அதிபர் திரு சி. நாகேந்திரராஜா நட நட முன்னேறு நடை தளர்வின்றி... என்ற தலைப்பிட்டு தனது கருத்துரையை பின்வருமாறு முன்வைத்துள்ளார். ``வன்னியில் வாழ்ந்து போரில் மீண்ட மாந்தர் ஒவ்வொருவருக்கும் உயிரின் பெறுமதி நன்கு தெரிந்திருக்கும். அதிலும் உயிர் வலித்த கணங்கள் எத்தனையோ...??? கணக்கிட முடியாத, எழுதப்படாத கணங்களுள் ஒரு கணத்தை தன் பேனா முனைகளால் எம்மிடம் தருகிறான் செந்தூரன். வேர்களில் பாய்ச்சப்பட்ட வேல்களால் விருட்சம் இலை கொட்டிப்போக, நிழலின்றி நாணல்கள் துவண்டு நிற்கின்ற போதும் வேரிலிருந்து வழியும் ஈரத்தால் நாணல் சருகாகாது உயிர் வாழ்கிறது வேல்கள் வேர்களில். அதனால் வேதனையும் வலியும் வேர்களுக்கு மட்டுமே. வேல்களைப் பாய்ச்சியோர் யாராகிலும் விருட்சம் மொட்டையாகிப் போனபோது அவர்கள் வலியை அறிந்திருக்கவேயில்லை. மொட்டையாய் போனது விருட்சங்கள் மட்டுமல்ல... ஆக கவிஞர்கள் வலிகளை வரிகளால் வார்த்திருக்கிறார்கள். சமகாலக் கவிஞர்களின் இவ்வரவுகள் இன்று புதிய படைப்புக்கள், இவை நாளை வரலாற்று ஆவணங்கள். செந்தூரனின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் பேச வைக்கும்.''

நூலுக்கான வாழ்த்துரைகளை கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு மு. இரவீந்திரனும், பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், எழுத்தாளருமான ரிம்ஸா முஹம்மதும் வழங்கியுள்ளார்கள்.

நூலாசிரியர் வன்னியூர் செந்தூரன் தனதுரையில் ``அவலம் சுமந்த மண்ணில் தினம் அழுகின்ற, துயரம் சுமக்கின்ற கனமான மனக் கவலைகளோடு வாழுகின்ற எம்மவர்க்கு என் கவிகள் ஓர் திடமூட்டி வலுச் சேர்க்கும் என நம்புகிறேன். கலைகளின் அரசியான கவிதையை கற்பனையின் ஊற்றில் வடிவெடுப்பன என சிலர் சொல்லுவார்கள். ஆனால் அவற்றையும் தாண்டி வாழ்க்கை சொல்லுகின்ற பாடங்கள், வலிகள் கற்றுத் தருகின்ற அனுபவங்கள் ஆனது  சமூகத்திற்கு பயனுள்ள சிறந்த கவிப் படைப்பாளிகளை உருவாக்கும் என்பது என் கருத்து. மரணத்தின் வலியை உணர்ந்தவனாலேயே அதன் நிலை பற்றிப் பேச முடியும். எதிர்கால சந்ததிக்கும் ஏதோவோர் நல்ல கருத்துக்களைச் சொல்ல முடியும். உண்மையிலேயே அந்த இரத்தக் கறை படிந்த தொலையாத நினைவுககள் மறையாத கறையாகி இன்றும் மனதை அரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இவற்றை இலக்கியப் பதிவாக்கும் போது ஓரளவாவது மனச் சுமை குறையும் என நம்புகிறேன்.'' என்கிறார்.

இனி இவரது கவிதைகளுள் ஒரு சிலவற்றை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

யாரது நடுநிசியில் (பக்கம் 18) என்ற கவிதை மர்ம உலகத்துள் அழைத்துச் செல்வது போன்ற உணர்வை உருவாக்கிவிடுகின்றது. ஆவிகள் அலைகின்ற அமானுஷ்ய உலகத்தை உணர்த்துமாற்போல கவிதைப் பாங்கு அமைந்துள்ளது. மரத்தடியில் காதலும் நடக்கின்றது, கதைச் சத்தமும் கேட்கிறது ஆனால் உருவம் இல்லை என்று சொல்வதினூடாக இதை உணர முடிகின்றது. அவர் கவிதையை கையாண்டுள்ள விதம் வியப்பு தருகின்றது.

ஆலம் மரத்தடியில்
காதலும் நடக்குது
கதைச் சத்தமும் கேட்குது
ஆட்களின் உருவமில்லை
அலையுதோ ஆவிகள் ?

சிரிப்பொலிகள் சிலநேரம்
அழுகை ஓலம் சிலநேரம்
அன்றைய பதுங்கு குழியோரம்
அடிக்கடி வருகுது சாமத்தில்
அலையுதோ ஆவிகள்?

அழியா நிமிடங்கள் (பக்கம் 21) என்ற கவிதை போரினால் ஏற்பட்ட இழப்பைப் பற்றி பேசுகின்றது. கூரையில் நெருப்பும், வீட்டுக்குள் பிணங்களுமாய் கழிந்த காலங்களின்  வலி இக்கவிதையிலே தெரிகின்றது. மழலைகள் தம் செல்லப் பிராணிகள் இறந்ததற்காய் அழுகின்றனர். ஆனால் தன் தாய் தந்தையர் சந்தியடியில் வைத்து குண்டு துளைத்து இறந்ததை எப்படித்த தாங்குவர்? என்று வாசகர்களிடம் கேள்வி கேட்கிறார் கவிஞர் செந்தூரன்.

குண்டு மழை நனைக்க
கந்தகக் காற்று தாலாட்ட
சோக கீதம் ராகமிசைக்க
இரத்த நதியில் குளித்து
சாவு வாசல் தினம் தொட்டோம்

பானையிலே உணவு
அடுப்பிலே நெருப்பு
அடுக்களையில் கண்டிடலாம்
கூரையில் நெருப்பு
வீட்டுக்குள் பிணங்கள்
போர் மழையில் கண்டோமே

சுவரில் துளைச்ச குண்டு
மைபூச அது மறஞ்சிடும்
மனசில் விதைச்ச சோகமும்
மண்ணுள் போன மாணிக்க
மழலைகளின் ஏக்கங்களும்
எதை பூச மறையுமிங்கு...?

இப்படியும் இன்று (பக்கம் 26) என்ற கவிதை தற்காலத்தில் ஏற்ப்டும் சில காதல்கள் பற்றி சிறப்பாக எடுத்தியம்புகின்றது. தெய்வீகமாக நேசிக்கப்பட்ட காதல்கள் இன்று உணர்ச்சிகளின் உந்துதலாக மாறியிருக்கின்றது. பவ்வியமாக பார்க்கப்பட்ட காதல்கள் பள்ளியறைக் காதல்களாக ஆக்கப்பட்டிருக்கும் அசிங்கம் ஒருசிலரால் இன்று நடந்தேறுகின்றது, அத்தகையவர்களால் கற்புக்கான பெறுமதி காணாமல் போயிருக்கிறது. இத்தகைய விடயங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் பின்வரமாறு..

நாகரீகம் சிகரத்தில் பெண்
நாணம் பள்ளத்தில்
தமிழ் மானம் பதியுது
பாவாடை கட்டையாகுது

கைபேசிக் காதலால்
காசிழந்தார் காளையர்கள்
காலவோட்டக் காதலால்
கற்பிழந்தார் சில காரிகையர்

ஒருத்தியின் பதறல் (பக்கம் 64) என்ற கவிதையிலும் போர் தந்து சோகம் பற்றியே சொல்லப்பட்டிருக்கின்றது. சைக்கிளை விற்று மூன்று கிலோ அரிசி வாங்கியும், மோதிரத்தை விற்று ஒரு தேங்காய் வாங்கியும் பிழைப்பை ஓட்டும் துயரமான வாழ்க்கை போர்ச் சூழலில் வாழ்ந்த அந்த மக்களுக்கிருந்தது. சேர்த்து வைத்த சொத்துப் பத்துக்கள் வீணாக தீக்கிரையாகின. சாமம் சாமமாக இடம்பெறும் இத்தகைய கொடுமையால் நாளை விடிவதற்கு முன் எத்தனை உயிர்கள் வீணாக மாய்ந்திருக்குமோ என்று ஏக்கம் கொள்வதாக அமைந்த அக்கவிதையின் சில வரிகள் இதோ..

மரணம் தின்ற
மரணியா நிமிடங்கள்
மறையாத கறையாகி
மனதை அறிக்கும் துயர்

துள்ளித் திரிந்த குழவிகள்
துருத்துருவாய் ஆன கதை
பள்ளிக் கட்டடங்கள்
மனித இறைச்சிக் கடைகள்

சேலைப்பை மண்மூட்டைகளும்
கூரைமரக் கட்டுகளும்
மண்மூடிக் கவசத்துடன்
அக்கால வசந்த மாளிகையாய்

மோட்டார் சைக்கிள் விற்று
மூன்று கிலோ அரிசி வாங்கினோம்
மாத்து மோதிரத்தை விற்று
தேங்காய் ஒன்றும் வாங்கினோம்

காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை என்பதற்கேற்ப இந்த கவிதை நூலிலும் என்னவளே... (பக்கம் 66) என்ற கவிதை இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கவிதையில் பள்ளிக்காதல் பற்றிய நினைவுகள் இழையோடுகின்றது.

ஆதிமுதல் அந்தம் வரை
அழகு நிறை அணங்கே
சோதியாய் உணர்வெழுப்பும்
சொர்க்க மலர்த்தேனே

அந்தி அரும்பும் வேளை
அன்னமுன் விழிவேலை
எந்தன் மீது எறிவாய்
எழில் சிந்தும் மானே

பள்ளியில் படிக்கும் போதே
பக்கப் பார்வை வீசுவேன்
பாவையுன் நினைவில் மூழ்கி
பாரிலென் நினைவை மறப்பேன்

காலம் தந்த சந்தோஷங்களும், காலத்தால் தரப்பட்ட காயங்களும் சிலரை சந்தர்ப்ப் கவிஞர்களாக மாற்றியிருந்தாலும், அடிப்படையில் இரசனை உள்ள அனைவருமே கவிஞர்கள்தான். தாம் பார்த்து, கேட்டு ரசித்தவற்றை தம் உணர்வுகள் வழியாக, கவிதைகளினூடாக சொல்லி முடிக்கும் திறனில்தான் கவிஞன் முழுமையடைகின்றான்.

அந்த வகையில் வன்னியூர் செந்தூரன், சமூகத்தின் இருப்பு நிலை குறித்த கவிதைகளையும், இறந்த கால நினைவுகளையும் தத்ரூபமாக சொல்லி வாசகர் மனதை கவர்ந்து விடுகின்றார். எதிர்காலத்தில் கவிதைத் துறையில் மட்டுமல்லாது சிறுகதை, நாவல், சிறுவர் பாடல், சிறுவர் கதைகள் யாவற்றிலும் அக்கரை செலுத்தி பல்துறைப் படைப்பாளியாக மிளிர வேண்டும் என்று வினயமாக வேண்டிக்கொள்கின்றேன். இவரது இலக்கியப்பணி சிறப்புப் பெற முழுமனதுடன் இவரை வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - உயிர் வலித்த கணம்
நூலின் வகை - கவிதை 
நூலாசிரியர் - வன்னியூர் செந்தூரன்
ஈமெயில் - vanniyoorsenthuran@gmail.com
வெளியீடு - செந்தணல் வெளியீடு
விலை - 240 ரூபாய்

No comments:

Post a Comment