Sunday, April 8, 2018

123. ''கால் பட்டு உடைந்தது வானம்'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

''கால் பட்டு உடைந்தது வானம்'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்


''கால் பட்டு உடைந்தது வானம்'' என்ற கவிதைத் தொகுதி மூலம் ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்கிறார் எஸ்தர். இவர் மலையகத்தின் ஹட்டன் - டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். அதனால் தானோ என்னவோ சில கவிதைகளில் அப்பியிருக்கும் குளிர் இறுதியில் உஷ்ணக் காற்றை வெளியேற்றி நிறைவடைகிறது. ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் கலைமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் நிறைவுசெய்துள்ளார். சுமார் 15 வருடங்களாக எழுத்துத் துறையில் ஈடுபட்டுவரும் இவரது ''கால் பட்டு உடைந்தது வானம்'' என்ற கவிதைத் தொகுதியில், தனது எண்ணத்தில் பதிந்துள்ள நினைவுகளை கவிதைகளாக மொழிபெயர்த்துள்ளார். 

சென்னை - போதிவனம் பதிப்பகத்தினூடாக வெளிவந்துள்ள இந்த நூல் 136 பக்கங்களில் சிரியதும் பெரியதுமான 105 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. பெரும்பாலான கவிதைகள் தலைப்பிலிக் கவிதைகளாகவே காணப்படுகின்றன. கவிஞர் இங்கு தலைப்பிட்டுக் கவிதை எழுதவில்லை. தனது மனதில் சிறைப்பட்டவற்றை சுதந்திரமாக எழுதியுள்ளார். இந்தத் தொகுதியை தொடர்ந்து வாசித்துச் செல்கையில் கலீல் ஜிப்ரானின் ஷஷமுறிந்த சிறகுகள்|| கவிதை நூலை வாசிப்பது போன்ற உணர்வை இடையில் ஏற்படுத்திப் போவது இந்தத் தொகுதியின் சிறப்பம்சமாகும்.

நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள கோயமுத்தூர் அய்யப்ப மாதவன் நூலாசிரியரின் கவிதையுலகம் பற்றி பின்வருமாறு மனந்திறக்கிறார். ''எஸ்தர் கவிதைகளின் வழியாக, கவிதைப் பேச்சுகளின் வழியாக கவிஞனாகிய என்னைக் கண்டுகொண்டார். கவிதைகள் தவிரவும் பேருலகில் அவருக்குப் பிடித்தமானதாக வேறு இருப்பதற்கில்லை. ஏனெனில் எப்போதும் அவர் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதையாக எழுதிக்கொண்டிருக்கிறார். தன் வாழ்வை கவிதையாக்கிக் கொண்டிருக்கிறார். எஸ்தரின் விடியலும் அந்தியும் இரவும் கவிதைகளாகவே இருக்கின்றன. இவரது கவிதைகள் படித்து முடித்த பின்னரும் மனதைவிட்டு அகலாத கவிதைகளாய் விழித்திருக்கின்றன''

எஸ்தர் தனது கவிதை மீதான ஈடுபாட்டைப்பற்றி ''எவரும் அறியாத குகைகளின் உள்ளே உள்ள இருளின் அமைதியைப் போல அந்த எழுத்துகள் ஒருமாறுபட்ட தளத்தைச் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என சிந்தித்தேன். பேராதனை பல்கலைக்கழகம்தான்; என் போதிவனம். அங்கே உள்ள நூலகத்தில் நான் கட்டிய கூடுகளை கலைக்க விரும்பவில்லை. எப்போதும் தேடலும் வாசிப்பும் என்னை இறுகக் கட்டிக்கொள்ளும் புதுக் கணவனாய். நான் எழுத்துக்கு நேர்மையாக இருந்தேன். அவற்றை வாசித்தேன். எழுத ஆரம்பித்தேன். கவிதைகளும் என்னை விடுவதாக இல்லை'' என்று குறிப்பிடுகின்றார். அத்தோடு நூலுக்கான வாழ்த்துரையை தி/ சிவசக்தி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் இலக்கிய வித்தகர், தேசாபிமானி செ. ஞானராசா அவர்கள் வழங்கியுள்ளார்.

பக்கம் 17 இல் உள்ள கவிதையானது தோட்டத் தெரிலாளர்களின் துயர் சூழ்ந்த வாழ்க்கையை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றது. லயத்துக் காம்பறா எனப்படுகின்ற சிறிய அறைகளில் தங்களது வாழ்நாளைக் கழித்துக் கொண்டும், நாட்டின் முதுகெலும்பாக இருந்தபோதும் கவனிப்பாரற்ற சமூகமாக வாழ்ந்து வருவதுமான ஒரு பரம்பரையின் சோகம் இக் கவிதை வரிகளில் தெளிவான இழையோடுகின்றது. அதேபோல இக்கவிதையில் படிமங்கள், குறியீடுகள் பொருத்தமான விதத்திலும், நயக்கத்தக்க முறையிலும் அமையப் பெற்றிருக்கின்றமை பாராட்டுக்குரியது. கவிதை வரிகள் இதோ:-

சில்லறைகள் நிரம்பிய
உண்டியலை உடைக்கும் ஆர்வமாய்
தீபாவளி ஆசைகள்
லயத்து ஜன்னல்களில் 
சாயமிழந்து தொங்குகிறது
லயத்து தகரக் கூரை
ஓயாத மழையில் அழுகிறது
தொழிலாளியின் துயர் கண்டு
இருளும் தீபாவளி!

பக்கம் 65 இல் உள்ள கவிதையானது காதல் மொழிகள் பேசுவதாக எழுதப்பட்டுள்ளது. கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் இதயத்தின் ஓரத்தில் சிறு வலி ஏற்படும் என்பது திண்ணம். கவிதையின் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரைக்கும் இயற்கை குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜல்லிக்கட்டுக் காளையாய்
முரட்டாட்டமாக மோதுகிறது
உன் கண்கள்..
நீலக் கடலை உறைகொள்ள வைக்கும்
மௌனம்..
பாறையின் இடுக்கில் சிக்கியிருக்கிறது
அவரவரின் ஆசைகள்..
பொறுக்கிக் கொண்டே நடக்கிறேன்
நெய்தல் பூமியில் நீ உதிர்த்த வார்த்தைகளை..
அலையில் ஒதுங்கிய
பெறுமதியற்ற சிப்பிகளைச் சேகரிக்கும்
பெறுமதியான சிறுமியாய் வாழ்வு..
எரிக்கும் வெயிலிலே
கொழுந்துக் கூடை சுமந்து களைத்தவளாய்
பெருமூச்சாய் சரிகிறது
வாழ்வு..
இயற்கையைப் பார்த்து அணிந்துகொள்கிறேன்
வடிவமற்ற வாழ்வை!

பக்கம் 68 இல் உள்ள கவிதை ஆழமான அன்பின் அவஸ்தைகளையும், இன்பங்களையும் அள்ளித் தெளித்திருக்கின்றது. வாசிக்கும் புத்தகத்தை மூடும்போது உன்னையே அடையாளமாக வைக்கின்றேன் என்ற வரியில் இதயம் ஏந்திய காதல் வார்த்தை வழியே வெளிப்பட்டு நிற்கின்றதை அவதானிக்கலாம். நதியில் விழுந்த இலை எவ்வித பாரமுமின்றி நீந்திச் செல்வது போன்று அன்பானவனின் காதலால் தன் வாழ்வும் நகர்வதாக இக்கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளங்கையில் அள்ளித்தர 
என்னையும் என் எழுத்தையும் தவிர வேறேதுமில்லை
எப்போதுமே உன் வீட்டு ஜன்னல்களில் 
பச்சையத்தைப் பார்க்கிறேன்
நதியில் விழுந்த இலையாய் 
கனமற்று நகர்கிறேன்
ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டுப் 
பாதியில் உன்னையே 
அடையாளமாக வைத்துவிட்டுப் போகிறேன் 
அவ்வப்போது 
கருக்கட்டிய மேகம் 
என் நதியைத் தேடி பெய்துகொண்டிருக்கிறது
முனங்கும் காற்றும் 
உன் பிரியத்தைப் பேசுகிறது பாரேன்
பெருத்த கரும்பாறைகளை 
நாளும் பொழுதும் வேர்கள் கன்னமிடும் வித்தையை 
பாறைகள் அறிந்திட வாய்ப்பில்லை
உன் தலைமுறைத் தாடியின் வியர்வையாய் நிற்காமல் 
நகர்ந்துகொண்டேயிருக்கும் உன் வார்த்தை
எல்லைகளே இல்லாத உன் உடலில் 
என் காதலை அள்ளி இரைக்கிறாய் 
கனவு ஆந்தைகள் கொத்தித் தின்று விழித்திருக்க!

பக்கம் 72 இல் உள்ள கவிதையானது வீரத்தை பறைசாற்றும் தொனியில் எழுதப்பட்டுள்ளது. இன்று எல்லோரும் அநியாயங்களைப் பார்த்துப் பார்த்து பழகிவிட்டார்கள். எதிர்த்துக் குரல் கொடுக்காமல் தம் பாட்டுக்கு நகர்ந்துவிடுகின்றார்கள். கண் முன்னே நடக்கும் அநியாங்களைக்கூட தட்டிக்கேட்க மறுத்துவிடுகின்றார்கள். மென்மையானவர்களாக இருந்ததெல்லாம் போதும்.. இனிமேல் வீறுகொண்டு நமக்காகவும் சிந்திக்க வேண்டும். அதேபோல நம்மைபோல துயரத்தால் பீடிக்கப்பட்டு வாழ்வோருக்காகவும் கண்ணீர் சிந்த வேண்டும் என்பதாய் ஆக்ரோஷமாக நூலாசிரியர் கூறியிருப்பது அவர் பிறர் மீது கொண்டுள்ள அக்கரையை எடுத்துக் காட்டுகின்றது,

பூக்களின் மென்மையைப் பார்த்து
எவர்கள் மென்மையானார்கள்
முட்களைக் குத்தி
முள்ளின் வலிமையையேனும் அடைவோம்

தேனை ருசிக்கும் உங்கள் நாக்கு
கொஞ்சம் தேனியின் 
கொடுக்குகளையும் 
அறியவேண்டுமல்லவா

முட்கள் குத்தி ரத்தம் வழிந்திடும்போது
நீங்கள் இழந்த மண்ணையும் நினையுங்கள்
சிரியாவின் இரத்தத்தையும் 
நினைத்துக்கொள்ளுங்கள்

முகப் புத்தகம் வாயிலாக பலரை அறிந்துகொண்டு, அவர்களுடன் சிநேக பூர்வமான உறவை வளர்த்துக் கொண்டுள்ள நூலாசிரியர் எஸ்தர், சமூகம் குறித்த தனது பரந்த மனப்பான்மையை மென்மேலும் கவிதை வாயிலாக வெளிக்காட்ட வேண்டும். துன்பமுற்றோரின் கண்ணீர் துடைப்பதற்கு கவிதை என்ற கைகுட்டையை ஏந்தி வர வேண்டும். இன்னும் பல காத்திரமான கவிதை நூல்களை இலக்கிய உலகுக்கு எஸ்தர் பரிசளிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - கால் பட்டு உடைந்தது வானம்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ்தர்
வெளியீடு - போதிவனம் பதிப்பகம்
விலை - 120 இந்திய ரூபாய்

No comments:

Post a Comment