Sunday, February 11, 2024

150. கவிமணி என். நஜ்முல் ஹுசைனின் ''வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 கவிமணி என். நஜ்முல் ஹுசைனின்

''வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்கள், பனித்தீ (1992), இனிவரும் நாட்களெல்லாம் (2017), நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள் (2017) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு கவிதை உலகில் முத்திரை பதித்தவர். கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்களின் நான்காவது நூல் வெளியீடாகவே "வேறாகா வேர்கள்" என்ற சிறுகதைத் தொகுதி ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. 


சிறுகதைகள் பற்றி வாசுதேவன் என்ற இந்திய அறிஞர், சிறுகதை என்பது சிறு கால அளவுக்குள் படித்து முடிக்கப்பட வேண்டியது என்றும், அதன் உருவம் சிறியதாக அமைந்திருக்கும் என்றும் கூறுகிறார். சிறுகதை ஒரு தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரமாகும். அதேபோல வாழ்க்கையின் ஒரு பகுதியை, கவலையை மறந்துவிட்டுக் கவனிப்பதாகவே சிறுகதை அமைந்துள்ளது. புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோ தர்மத்தைப் பொறுத்தது என்று சிறுகதையின் போக்கைப் பற்றி விளக்கியுள்ளார். கதைகள், கதைகூறல் ஆகியவற்றில் கதைக்கரு, கதைமாந்தர், விடய நோக்குநிலை என்பன முக்கிய கூறுகளாக அமைகின்றன.

மனிதத்தை நேசிக்கும் படைப்பாளிகளுக்கு மத்தியில் கவிமணி நஜ்முல் ஹுசைன் ஒரு நயகரா நீர் வீழ்ச்சி என்று நூலின் பின்னட்டையில் நூலாசிரியர் பற்றி இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்கள் குறிப்பிடுவது ஈழத்துக் கவிதை வரலாற்றில் கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் தவிர்க்க முடியாத ஒருவர் என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. 

நூலுக்கான அணிந்துரையை இந்திய நாட்டைச் சேர்ந்த பன்னுலாசிரியர், கவிஞர் ஏம்பல் தஜம்மல் முகம்மத் அவர்கள் வழங்கியுள்ளார்கள். அதேபோன்று நூலுக்கான வாழ்த்துரைகளை பிரபல திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், நூலாசிரியர், கலாபூஷணம் பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் கவிஞர் எம்.எஸ்.எம். ஜின்னா ஆகியோரும் வழங்கியுள்ளார்கள். அடுத்து கரிகாற்சோழன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் மூ. சிவலிங்கம் அவர்கள் 'கவிஞர் எழுதிய கதைகள்' என்ற தலைப்பில் நூலுக்கான நயவுரையை வழங்கியுள்ளார். அதேபோன்று ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ் தென்றல் அலி அக்பர் அவர்கள் நூலுக்கான வெளியிட்டுரையை வழங்கியுள்ளார்.

நூலாசிரியரின் கதைகள் யாவும் நேர்கொண்ட இலட்சியப் பார்வையாகவே தோன்றுகின்றன. எல்லாமே மனிதத்தைப் பாடும் கவிதைகளைப் போன்றே உள்ளன. மனிதாபிமானமே பேசு பொருளாக எல்லாக் கதைகளுக்குள்ளும் மின்னுகின்றன. மதத்தின் போதனைகளை, மார்க்கச் சிந்தனைகளை வாசகனிடம் திணிக்க வராமல் அதன் தத்துவார்த்தங்களை கதை மாந்தர்கள் ஊடாகவே சொல்லிப் போகின்றார் என்று நூலாசிரியரின் கதைகள் குறித்து மு. சிவலிங்கம் அவர்கள் தனது நயவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக நூலாசிரியர் வழங்கியுள்ள என்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'நான் சிறுவயதில் வாசித்த நூல்கள், சஞ்சிகைகள் போன்றன நாம் எப்போதுமே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும், நாங்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதை நிறையவே போதித்துள்ளன. அவையே எனது சிறுகதைகளில் பெரும்பாலான கருப்பொருள்களாக அமைகின்றன. எனது எழுத்துகள் எப்போதுமே எவரையும் தவறான பாதைகளில் அழைத்துச் சென்று விடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன். ஒரு சம்பவம் இப்படித்தான் நடந்தது என்பதைவிட இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பே சில கதைகளின் கருக்களாகும். கதையைப் படிப்பவர்கள், நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைப்பார்களாயின் அதனை எனது எழுத்தின் வெற்றியாகவே கருதுவேன்' என்று குறிப்பிடுகின்றார்.

"வேறாகா வேர்கள்" என்ற இந்த நூல் 87 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. அவனில்லாமல் நானில்லை, நிலைக் கண்ணாடி, எனக்குக் கிடைக்கும், இப்படி செஞ்சிட்டீங்களே, இதயக் கன்னிக்கு பர்தா போடு, நடந்தது என்ன?, மீண்டும் டயானா, அருமையான என்விலப், வேறாகா வேர்கள், ஏன் சொல்லவில்லை?, தீர்க்கமான முடிவு, யார் அநாதை?, உயிர் காப்பான் தோழன், எந்த சீட் வேண்டும்?, கொடுத்து வைத்தவன், அசோகன் பிறந்தான், புதிய திருப்பம், யாருக்குப் பாராட்டு, உடைந்த சைக்கிள், கொள்ளைக்காரர்கள், உதாசீனம், கல்யாணமாம் கல்யாணம், உழைத்து வாழ வேண்டும் என்ற தலைப்புக்களில் அமைந்த சிறியதும் பெரியதுமான 23 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளடங்கியுள்ளன.

இனி மேலே தரப்பட்டுள்ள தலைப்புக்களில் உள்ள நூலாசிரியரின் சிறுகதைகளில் சிலவற்றை வாசகர்களது இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

எனக்கு கிடைக்கும் (பக்கம் 10) என்ற சிறுகதையானது தவறவிடப்பட்ட ஒரு பவுன் தங்க நாணயத்தைப் பற்றிப் பேசுகிறது. வழமையாக சில்லறைகளை யாசகமளிக்கும் நசீர் தவறுதலாக தங்க நாணயத்தை யாசகர் ஒருவருக்குக் கொடுக்கிறான். பிரிதொரு நாளில் அதே வழியாகச் செல்கையில் அந்த யாசகர் நசீரை இடைமறிக்கிறான். அவசரமாகப் போய்க் கொண்டிருந்த நசீர் அவனைத் திட்டிவிடுகிறான். உள்ளம் கேட்காமல் மீண்டும் யாசகம் கொடுக்க முனைகையில் முன்பு கொடுத்த அந்தத் தங்க நாணயத்தை யாசகன் நசீரிடம் திருப்பிக் கொடுக்கிறான். என்றாலும் நசீர் கொடுத்தது கொடுத்தது தான் என்று நினைக்கிறான். வறுமையிலும் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மிக அழகாக விளக்குகிறது இந்தக் கதை.

இதயக்கனிக்கு பர்தா போடு (பக்கம் 17) என்ற கதையில் ஒரு பெண்ணினைத்தால் எத்தகைய செயலையும் இலகுவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபணம் ஆக்கி இருக்கிறார் கதாசிரியர். ரவுடித்தனம் கொண்ட ஒரு இளைஞனாக வலம் வரும் பாரூக் எல்லோரிடமும் கப்பம் கேட்டு மிரட்டி அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடாத்தி வந்தான். ஆனாலும் ஊர்ப் பொது வேலைகளுக்கு உதவி செய்வான். கொண்டால் பாவம் தின்றால் போச்சு என்ற கூற்றுக்கிணங்க செயல்பட்டு வருபவன். பெண்களைக் கேலி செய்வதிலும் பாரூக் பின் நிற்கவில்லை. அவ்வாறு கேலி செய்யப்பட்ட பெண்களில் ஒருத்தியான பாஹிரா பர்தா இட்டு தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டாலும் பாரூக்கை மணமுடிக்க விருப்பப்படுகிறாள். இதை அறிந்த பாரூக்கின் மனம் துணுக்குறுகிறது. தன்னை நம்பும் பெண்ணுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் மனந்திருந்தி பாஹிராவுடன் தன் வாழ்க்கையை மிகவும் அழகாக நடாத்திச் செல்கிறான்.

நடந்தது என்ன (பக்கம் 22) என்ற கதையானது தவறான புரிந்துணர்வின் விளைவை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. தனது தங்கையான நசீமாவுக்கு, நசீர் மிக அழகிய முறையில் திருமணம் செய்து வைக்கிறான். எனினும் ஓரிரு மாதங்களில் அவளது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. காரணம் மாமியார் - மருமகள் பிரச்சனை என்று சொல்லப்படுகிறது. இறுதியில் நசீராவுக்கு மாமியார் நஞ்சூட்டிக் கொள்ளப்பார்த்ததாக தனது தாய் சொல்லிய போது நசீர பதறிப் போகிறான்;. தங்கையின் விவாகரத்துக்காக விண்ணப்பிப்பதற்குச் செல்லும்போதுதான் தனது வைத்திய நண்பனைச் சந்திக்கிறான். இறுதியில் ஃபுட் பாய்சன் என்பதே 'பொய்சன்' - நஞ்சு என்று தவறாக விளங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து திகைத்து நிற்கிறான். 

உயிர் காப்பான் தோழன் (பக்கம் 46) என்ற கதையில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. தனது உயிர் நண்பனான ஜெகனின் நோய்த் தன்மை பற்றி பதறிக் கொண்டிருக்கிறான் சுரேஷ். சுரேஷின் புகைப் பழக்கத்தினால் ஏற்பட்டதே ஜெகனின் நுரையீரல் பாதிப்பு என்று வைத்தியர் கூறியதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைகிறான். புகைப்பிடிப்பவரைவிட அதனை சுவாசிப்பவரே அதிகம் பாதிப்படைவர் என்பதை இக்கதை மூலம் மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார் நூலாசிரியர்.

உடைந்த சைக்கிள் (பக்கம் 71) என்ற கதையானது நடுத்தர பெற்றோரின் பொருளாதார நிலையை கண் முன்னால் கொண்டு வருகிறது. தனது நான்கு வயது மகனுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறான் நியாஸ். அது தற்போது உடைந்து உள்ளதால் அதை பழைய இரும்பு சேகரிப்பவரிடம் கொடுத்து ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்கிறான். இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான மின்சார கார் ஒன்றை தனது மகனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது அவனது தற்போதைய தேவையாக இருந்தது. ஆனால் பழைய இரும்பு சேகரிப்பவனோ முந்நூறு ரூபாய் தருவதாக கூறி அந்த சைக்கிளைக் கேட்கிறான். மேலும் தனது மகனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவனது நீண்ட நாள் ஆசையை அவன் சொன்னதும் நியாஸின் மனைவி அந்த சைக்கிளை இலவசமாகவே கொடுக்குமாறு தனது கணவனுக்குக் கூறுவதோடு அதைத் திருத்தி அமைக்க ஐந்நூறு ரூபாவையும் சேர்த்தே கொடுக்குமாறும் கூறுகிறார். இரு தரப்பு பிரச்சினைகளை தீர்த்து வைத்து வாசகர்கள் எளிதாக உணரும் வண்ணம் இக்கதை நகர்த்தப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கதையுமே ஒன்றுக்கொன்று வேறுபட்ட கருக்களைச் சுமந்துள்ளமை மிகவும் சிறப்பு அலுப்புப் தட்டாத பாணியும் கதையின் இறுதி முடிவும் அடுத்த கதையை வாசிக்கத் தூண்டுவனவாக அமைந்துள்ளது. நூலாசிரியரிடமிருந்து இன்னும் இன்னும் பல சிறுகதைகளையும் பல படைப்புகளையும் இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!


நூல் - வேறாகா வேர்கள்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியரியர் - என். நஜ்முல் ஹுசைன்

வெளியீடு - ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்

விலை - 650 ரூபாய்



வெலிகம ரிம்ஸா முஹம்மத்


குறிப்பு:- 

இந்த நூலுக்கான பத்திரிகை விமர்சனம் தினகரன் பத்திரிகையின் செந்தூரம் இதழில் இரண்டு கிழமைகளாகத் தொடர்ந்து வெளிவந்தது. 

நூல் விமர்சனத்தின் முதலாம் பகுதி 2024.01.28 செந்தூரம் இதழிலும் இதன் மிகுதிப் பகுதி 2024.02.11 செந்தூரம் இதழிலும் வெளிவந்தது. 




No comments:

Post a Comment