ருஷ்தா லுக்மானின்
மௌன ஓசை கவிதை தொகுதி மீதான இரசனைக் குறிப்பு
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
ருஷ்தா லுக்மானின் பிறப்பிடம் கிழக்கிலங்கையின் காத்தான்குடியாகும். இந்த ஊரின் மண் வாசனையே இவரது படைப்புகளில் அதிலும் விசேடமாக கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றது. 'எழுதும் ஆற்றல் உள்ளவர்களுக்கு உணர்வு பெருக்கெடுத்தோடும் போது அவ்வெழுத்துக்கள் கவிதைகளாக பிரவாகம் எடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் பிரவாகமாகவே ருஷ்தா லுக்மானின் கவிதைகளைப் பார்க்கின்றேன். தன்னோடு வாழும் தந்தை பற்றியும், அவரை தந்தைக்கும் மேலாய் உற்ற நண்பராய் பார்க்கும் உணர்வினையும் தனது மன எழுச்சிக் கவிதையாக பதிவு செய்துள்ளார். தாயைப் பாடியுள்ள அவர் தாய் மண் என்று கிழக்கையும் பாடியுள்ளார்' என்று ருஷ்தா லுக்மானின் கவிதைகள் பற்றி முன்னாள் அரசாங்க தகவல் அதிகாரியான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள் தனது அணிந்துரையில் எழுதியுள்ளார். இந்த நூலின் பின்னட்டைக் குறிப்பை இவருடைய சகோதரியான லுதுபியா லுக்மான் எழுதியுள்ளார்.'மௌன ஓசை என்ற இந்த கவிதைத் தொகுதியில் சிந்தனைக்கும் உணர்வுக்கும் இடையே பாலமாகப் பதிந்திருக்கும் பல்வேறு அனுபவங்கள், மௌனித்திருந்த உணர்வுகள் என்பன பேசாமல் பேசுகின்றன' என்று ருஷ்தா லுக்மான் தனது கவிதைகள் குறித்து என்னுரையில் பதிவு செய்துள்ளார்.
தனது பாடசாலைக் காலத்திலேயே தமிழ் தினப் போட்டிகளில் கலந்து கொண்டு வலய மட்டம், மாகாண மட்டம், மற்றும் மாவட்ட மட்டங்களில் கவிதைப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்று கவிதைத் துறையில் தனக்கானதொரு தடத்தைப் பதிவு செய்துள்ளார் ருஷ்தா லுக்மான்.
இந்த நூல் ஆண்கள் உணராத பெண்களின் வலிகளையும், பெண்கள் உணராத ஆண்களின் சுமைகளையும், உறவுகளின் முகங்களையும், சமூகம் கவனிக்க மறந்த கடமைகளையும், தட்டிக் கேட்கப்படாத அநியாயங்களையும், இயற்கைக்கும் தனக்குமான பிரிக்க முடியாத காதலையும், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், முயற்சி, வீழ்ச்சி என பன்முகங்களையும் கண் முன்னே கொண்டு வந்து கவிதை வரிகளின் வழியாக வாசகர்களுக்குள் புதுப் பரிமாணத்தைத் தோற்றுவிக்கும் என்ற நூலாசிரியரின் கூற்றுக்கு இணங்க நாமும் இவருடைய கவிதைகளை எதிர்பார்க்கலாம். வாசகர்களின் இரசனைக்காக நூலாசிரியரின் சில கவிதைகளை இங்கே நாம் எடுத்து நோக்குவோம்.
'அவள் இருபதின் பின்' (பக்கம் 16) என்ற தலைப்பில் அமைந்த கவிதை பெண்களின் வாழ்க்கையில் கல்வியறிவு, தன்னம்பிக்கை, கனவு, எதிர்பார்ப்பு கொண்ட இளமைப் பருவத்திலிருந்து குடும்பப் பொறுப்புகளுக்குள் முற்றாக மாறிவிடுகின்ற நிலையை உருக்கமாகச் சித்தரிக்கிறது. இருபதுகளின் பின்னரான அவளின் உற்சாகம் சாந்தமாக மாறினாலும், அதில் ஒரு ஆழ்ந்த வலியும் அமைதியும் கலந்துள்ளது என்று குறிப்பிட்டு இப்பெண்களின் மௌனப் போராட்டத்தையும் அதனைத் தாங்கும் சக்தியையும் இக்கவிதை உணர்வுபூர்வமாக பிரதிபலிக்கிறது. கவிதையின் சில வரிகள் இதோ:-பேனா கறை படிந்த அவள் கரங்கள்
அடுப்பங்கறைக்கு சொந்தமாயிற்று!
வகுப்பறையில் போட்ட கூச்சலும் சத்தமும்
அடுப்பறையில் சாந்தமாயிற்று!
மைதானங்களில் ஓடி வெற்றி நடை போட்ட அவள் கால்கள்
விளக்குமாறோடு கொல்லைப் புறத்தில் கோலமிடுகிறது!
எதற்கும் துணிந்து எதிர்த்துப் பேசிய நாவும்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு சாந்தமாயிற்று!
சொல் பேச்சு கேட்காது செல் பேச்சு பழகிட்டு
ஓயாத கண்ணிற்கு ஒன்றுமே விளங்காது
வெளி விளையாட்டு தெரியாது வீட்டு வேலை ஓடாது
கைபேசி கதை பேச அதுவே உலகமாயிற்று!
செல்போன் சிறைக்குள் சிக்கித் தவிக்கின்றனர்
திசை மாறிய சிட்டுக்கள்!
தன் வேலை நிறைவேற தன்நிலை மறந்து
செல்போனைக் கொடுத்துவிட்டு செல்லமாய் தடவிவிட்டு
பிள்ளை தடம் புரள தலைப்பிடும் நீ எல்லாம்
தாயாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டாய்
பத்து மாதம் சுமப்பவள் தாய் அல்ல - மாறாக
பக்குவமாய் சுமப்பவளே தாய்!
'அவன் இருந்தும் நான் விதவை' (பக்கம் 37) என்ற தலைப்பில் அமைந்த கவிதையை வாசிக்கும் போதே ஒரு வகையான மனவேதனை ஏற்படுகின்றது. கணவனின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் ஏங்கும் ஒரு மனைவியின் ஏக்கமும் துன்பமும் தனிமையின் தவிப்பாக இக்கவிதையில் வெளிப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு உணவும் உடையும் ஆபரணமும் கொடுத்துவிட்டால் அவள் இன்பமாக இருப்பதாய் பலரும் எண்ணுகிறார்கள். அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களை இயந்திரங்களாக அணுகுபவர்கள் பலர். அத்தகைய பெண்கள் வெளியுலகுக்கு தாம் மகிழ்ச்சியாய் இருப்பதாகக் காட்டிகொண்டு உள்ளுக்குள் குமுறுவார்கள். அத்தகைய பெண்ணின் மனப்பாரத்தைப் பகிரும் இக்கவிதையின் வரிகள் இதோ:-
இரவானால் தூங்குவதிலும்
விடிந்ததும் வேலைக்கு கிளம்புவதிலும்
உன் காலம் ஓடுகிறது!
இதற்கிடையில் அர்த்தமே இல்லாமல்
உன் வாழ்வில் நான் எதற்கு?
நீயோ வேலை என்று சொல்லி
என்னை வாடவிட்டு வெளிநாடு பறந்து விட்டாய்
நானோ உன்னை மட்டுமே எண்ணியெண்ணி
ஒவ்வொரு நிமிடத்திலும்
நிகழ்காலத்திற்காய் செத்துப் பிழைக்கிறேன்!
நான் உன் மனைவி..
உன் உயிரின் பாதி..
உன் விலா எலும்பின் மீதி..
உன் இரவின் போர்வை!
நான் கேட்பதெல்லாம் உன் வாழ்நாளின்
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே
அந்த நிமிடங்களிலும்கூட உன் மடியில்
என் தலை சாய்த்து உன் விரல்கள் என் தலை கோத
என் கரங்கள் உன்னை இறுகப்பிடித்து
கதை பேச வேண்டும்!
'மௌன ஓசை' கவிதைத் தொகுதி நூலாசிரியரின் கன்னி முயற்சியாகும். இதில் அதிகமாக அகம்சார் கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன. தொடர்ந்து வெளியிடும் கவிதை நூல்களில் சமூகம்சார் கவிதைகள், காத்திரமான கருப்பொருட்களை உள்ளடக்கி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்போடு நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
நூல் - மௌன ஓசை
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ருஷ்தா லுக்மான்
தொலைபேசி - 0778389567
வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ. வெளியீட்டகம்
விலை - 600 ரூபாய்
நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்





No comments:
Post a Comment