Tuesday, February 4, 2014

52. முள்மலர்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

முள்மலர்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 


முள்மலர்கள் என்ற பெயரில் இனியவன் இஸாருத்தீனின் இரண்டாவது கவிதைத் தொகுதி 138 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே மழை நதி கடல் என்ற தனது கன்னிக் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். முள்மலர்கள் கவிதைத் தொகுதியில் 33 கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒரு நல்ல கவிஞனோடு கை குலுக்குகிறேன் என்ற தலைப்பில் தனது வாழ்த்துரையை புதுக் கவிதைகளின் தாத்தா, மு. மேத்தா அவர்கள்   பின்வருமாறு முன்வைத்துள்ளார். 

''இலங்கைக் கவிஞர் இனியவன் இஸாறுதீன் தன் இதயத்தை திறந்து காட்டியிருக்கிறார். உயிர்த் துடிப்பாய் உணர்ச்சிப் பூச்சரமாய் உள்ளத்தின் வெள்ளப் பெருக்காய் இவரது கவிதைகள் காட்சியளிக்கின்றன. சொற்களின் சூரத்தனமும் இதில் இல்லை. கவித்துவத்தின் கஞ்சத்தனமும் இதில் இல்லை. யாப்பின் அதிகாரமும் இதில் இல்லை. புதுமையின் அகங்காரமும் இதில் இல்லை. அனுபவக் களஞ்சியமாக அறிவின் நதியோட்டமாக விளங்கும் ஒரு நல்ல கவிஞனோடு கைகுலுக்குகின்றேன். ஒரு நல்ல மனிதனை என் இதயத்துள் குடியமர்த்துகின்றேன். கவிதை பல பேரிடம் பொய்யாக இருக்கிறது. இவரிடமோ மெய்யாக இருக்கிறது.''

கவிஞர் வேதாந்தி என்று அழைக்கப்படும் சேகு இஸ்ஸதீன் அவர்கள் தனது விதந்துரையில் நம்பச் சொல்லுகிறேன் என்ற தலைப்பிட்டு, `கொக்குப் பறக்கும் - புறா பறக்கும் - குருவி பறக்கும் - குயில் பறக்கும் - நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். நான் ஏன் பறப்பேன்? என்று மார்தட்டி தனது எழுதுகோலில் ஈட்டி முனைகளைச் சொருகி இனியவன் இலாருத்தீன் முள் மலராய் மாறி முதுகெலும்புகளை நிமிர்த்தி வைக்கிறார்' என்கிறார்.

சமூக உணர்வினால் பாதிக்கப்பட்ட கவிஞர் என்ற தலைப்பிட்டு தனது அணிந்துரையை முன்வைத்துள்ளார் தென் கிழக்கு பல்கலைக் கழக மொழித் துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ். அவர் தனதுரையில் 'கிழக்கிலங்கை கவிவளம் நிரம்பிய பிரதேசம் வீட்டிலும், வெளியிலும், வயலிலும், வாய்க்கால் வழியிலும் மக்கள் கவி பாடிக் களிக்கும் பிரதேசம். இம்மண்ணின் மக்களுக்கு கவி ஒரு வரம். இந்தத் தொடர்ச்சி செந்தமிழ்க் கவிதையிலும் அவர்களுள் பலரை வல்லவராக்கியுள்ளது. அவ்வகையில் அட்டாளைச்சேனையில் பலருக்கும் அறிமுகமானவர் இனியவன் இஸாருத்தீன் எனும் கவிஞர். முள் மலர்கள் தொகுதி மூலம் முற்றிலும் சமூக விமர்சனக் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்' என்கிறார்.

உரிமையைத் தாருங்கள் (பக்கம் 39) என்ற கவிதையானது யதார்த்த வாழ்வில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் பற்றி பேசுகின்றது. முஸ்லிம்ளுக்கு எதிராக இடம்பெறுகின்ற நடத்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இக்கவிதையானது, எந்தப் பிரச்சனை வந்தாலும் அல்லாஹ்வை நாம் வணங்குவதை யாராலும் தடுக்க முடியாத ஈமான் (நம்பிக்கை) எமக்கிருக்கிறது என்பதை ஆழமாக எடுத்தியம்புகின்றது.

நாங்கள் தொழும் மஸ்ஜித்
நாங்கள் ஓதும் வேதம்
நாங்கள் அணியும் ஆடை
நாங்கள் உண்ணும் ஆகுமான உணவு
எல்லாவற்றையும் எங்களுக்கு எதிராய்
இகசியமாகவும் பரகசியமாகவும் சிதைக்கலாம்

ஆனால் தடுக்க முடியுமா உங்களால்?
அல்லாஹ்விடம் நாங்கள் 
பணிவதையும் கேட்பதையும் தியாகிப்பதையும்...

கரிப்புகை வாழ்வு (பக்கம் 46) என்ற கவிதையில் வாழ்க்கை பற்றிய தத்துவத்தை அழகாக வடித்திருக்கின்றார் கவிஞர். மகிழ்ச்சியை விட வாழ்க்கையில் துயரங்களே தலைவிரித்தாடுகின்றன என்பதை சிமிணி விளக்குக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசிக்கத்தக்கது. வறுமையில் வாடும்போது அணைக்க வேண்டிய கைகள் ஆணி அறைகின்றன என்று துயருருவதை கீழுள்ள வரிகள் எடுத்தியம்புகின்றன.

சிமிணி உடைந்த விளக்குபோல நம் வாழ்வு
வெளிச்சத்தை விட
கரிப்புகையே அதிகம்

ஆரத்தழுவி அணைக்க வேண்டிய கைகள்
ஆணி அறைகின்றன என்னில்
இல்லாமையால் நான்
தனிமையிலும் வெறுமையிலும் தவிக்கும் போது

இன்றைய உலகை இயக்க வைப்பதில் முக்கிய பங்கு கணனிக்குரியது. உலகத்தின் சுழற்சி கணனியில் தங்கியிருக்கின்றது என்று சொன்னால் மிகையில்லை. கணனியின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடுகையில் கணனியில் நான்கு மதங்களைப் பற்றிய தகவல்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் மனிதர்களைப் போல் மதத்துக்காக முரண்படுவதில்லை என்ற உண்மையை அழகாக கணினி (பக்கம் 59) என்ற கவிதை உணர்த்துகின்றது.

குர்ஆன் பைபில் பகவத்கீதை
எல்லாவற்றையும் உனக்குள்
நீ வைத்திருந்தாலும்
அவை ஒன்றை ஒன்று மதவெறியில்
அடித்துக்கொள்வதுமில்லை
அழித்துக்கொள்வதுமில்லை

நீ ஒரு விமானம்
கடவுச் சீட்டில்லாமலும்
பயணச் சீட்டில்லாமலும்
எல்லோரும் உனக்குள்ளேயே
உலகம் சுற்றிப் பார்க்கலாம்

சின்ன அரும்புகளும் சில கேள்விகளும் (பக்கம் 63) என்ற கவிதை யுத்தம் பற்றிப் பேசுகின்றது. சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் யுத்தம் பற்றிய கணிப்பு எப்படியிருக்கும் என்பதை கீழுள்ள வரிகள் விளக்கம் தருகின்றன. மக்களுக்கு எந்தவித நலன்களுமே இல்லாத ஒரு போராட்டத்தால் அவர்களின் இயல்பு வாழக்கை பாதிக்கபட்டு, விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டு வாழக்கைக் கோலமே மாறிவிட்டது. யுத்தத்துக்காக கோடிக் கணக்கில் பணம் செலவாகின. அந்த யுத்தம் பற்றிய சிறுவர்களின் கேள்வி வரிகள் இதோ.. 

இதுவரை 
உங்கள் போராயுதத்தால்
உரிமையையா வென்றீர்கள்?
உயிர்களைத்தானே 
கொன்றீர்கள்

கோடி கோடியாய்க் கொட்டிக் கிடந்த
மக்கள் பணத்தில்
கொலையாயுதங்கள்தானே
கொணர்ந்தீர்கள்...
அதில் என்ன எங்களுக்கு
கல்விக்கூடமா திறந்தீர்கள்?

இறுதிவலி (பக்கம் 102) என்ற கவிதையில் சிறுபான்மைச் சமூகம் அனுபவிக்கின்ற கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு காலத்துக்கும் ஏதாவது ஒரு சிறுபான்மை சமூகம் சின்னா பின்னமாக்கப்படுவதை கவிதையின் கீழுள்ள வரிகள் உணர்த்துகின்றன.

இதுவரை
மதங்கொண்ட வேட்டைப் பற்களால்
சுவைக்கப்பட்ட மனிதம்
சக்கையாக்கப்பட்டு சிதைந்தது
சிறுபாண்மைச் சமூகம்

கானல்நீராகிப் போன காதல் பற்றி வெள்ளைக் காகிதம் (பக்கம் 110) என்ற கவிதை கூறி நிற்கின்றது. தடயங்கள் மட்டும் இருக்கின்ற ஒரு காதல் வலி இக்கவிதையில் மிக ஆழமாக சொல்லப்பட்டுள்ளது. தன் கனத்துப்போன மனசைப் பற்றிச் சிந்திக்காமல் ஊராரின் வாய்வார்த்தைகளைப் பற்றி சிந்தித்து காதலை இல்லாமலாக்கிக்கொண்ட காதலிக்கு, காதலன் எழுதும் வரிகளாக இவை காணப்படுகின்றன. 

ஒரு நாள்
பக்கத்து வீட்டாரின்
பார்வைக்குப் பயந்து
நீ
என் விழிகளை விட்டே
விரண்டோடி விட்டாய்

சிரிப்பதற்குக் கூட
சிலருடைய சம்மதம்
வேண்டும் உனக்கு

முள்மலர்கள் என்ற இத்தொகுதியில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்த விடயங்களையும், சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் கொண்டுள்ளது. ஒரு கவிஞன் சமூகம் பற்றிப் பேசாவிட்டால் அவன் கவிஞனாக இருக்கவே முடியாது. அந்த வகையில் தன் தேசத்தவருக்காக குரல் கொடுக்கும் கவிஞர் இஸாறுதீனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - முள்மலர்கள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - இனியவன் இஸாறுதீன்
தொலைபேசி - 0672278404
மின்னஞ்சல் - isarudeen@gmail.com
விலை - 400 ரூபாய்

51. விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


இலக்கியம் என்பது கற்பனை ஆற்றலையும், சிறந்த சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும். அதில் கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் என பல வடிவங்கள் காணப்படுகின்றன. கவிதை என்பது சொல்ல வந்த விடயத்தை சொற்ப வரிகளுக்குள் உள்ளடக்கி வெளிப்படுத்துவதாகும். சிறுகதை என்பது சொல்ல வந்த விடயத்தை தெளிவாக குறிப்பிட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு வெளிப்படுத்துவதாகும். அல்லது கதாசிரியரே கதை சொல்லியாக இருந்தும் சொல்ல முடியும்.

செல்வி சஹீலாவின் விதி வரைந்த பாதை என்ற சிறுகதைத் தொகுதி 67 பக்கங்களில் 10 சிறுகதைகளை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்துள்ளது. விதி வரைந்த பாதை, கலங்காதே கண்மணி, உன்னோடு வாழாவிட்டால், கருவோடு கருகிய தாலி, நிம்மதியாகவே வாழ்ந்திருப்பேன், பாவம் இந்தப் பாவை இவள், கறுப்பு ஜுன்,
தீயில் கருகிய மொட்டு, மனதைத் திறந்த மடல், அமாவாசை பௌர்ணமியாகிறது போன்ற
தலைப்பில் அமைந்த சிறுகதைகளே அவையாகும். புதிய எழுத்தாளர்கள் வரிசையில்
தற்போது இவரும் இணைந்து கொள்கின்றார். அட்டாளைச் சேனையைப்
பிறப்பிடமாகவும், கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தர்கா நகர்
தேசிய கல்வியியற் கல்லூரியின் முதன்மொழி தமிழ் கட்டுறு ஆசிரியப்
பயிலுனராகப் பயிற்சி பெற்று, தற்போது கிண்ணியா மத்திய கல்லூரியில்
ஆசிரியராகக் கடமையாற்றுபவர்.

கிண்ணியா தி/அல்ஹிறா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர் தனது பாடசாலைக் காலங்களில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும், தமிழ் மொழித் தினப் போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது கலை இலக்கிய
ஆற்றலை நன்கு வெளிப்படுத்தி பல பரிசில்களையும், சான்றிதழ்களையும் தனதாக்கிக் கொண்டவர். இவற்றுக்கு மேலாக கல்வியியற் கல்லூரி உள்ளகப் பயிற்சிக் காலத்தில்  கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறுகதை எழுத்தாளராக அறியப்படும் இவர் தினகரன் மற்றும் மித்திரன் வார வெளியீடுகளில் தொடராக எழுதி வந்துள்ளார்.

ஹனீபா சஹீலா தனதுரையில் ''வேர்கள் மண்ணுக்குள் வாழ்வது போல, நெஞ்சுக்குள் வலிகள் இருக்கும் வரை கலைப் படைப்புக்கள் வெளிவரத் துடிக்கும். சிறு சிறு
வலிகள் வரிகளை வரையத் தூண்டுகின்றன. சிறகுகளை விறகுகளாக்க முனைவோருக்கு முன் விறகுகளையும் சிறகுகளாக்கத் துடிக்கிறது என் மனது. சிறு வயதில்
வாசிப்பில் கொண்ட ஈடுபாடே என் விரல்களுக்குள் பேனையைச் சிக்க வைத்தது. சிக்கிய பேனா சிந்திய சில்லறைகளை சேமிக்கும் முயற்சியே இது'' என்கிறார்.

வெலிப்பன்னை ரஹ்மானிய்யா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் தேசமாணி
அல்ஹாஜ் ஏ.டப்ளியூ.எம். அஸார் அவர்கள் தனது ஆசியுரையில் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார். ''சமூகப் பிராணியான மனிதனின் சிந்தனைகளை ஒரு குறுகிய
வட்டத்திற்குள் மட்டும் நிறுத்திவிடாமல் பரந்தளவில் பயன்படுத்துவது
இன்றைய கால கட்டத்தில் குறைவே. ஆனால், இளம் எழுத்தாளரான இவர் சமூகத்தோடு
நெருக்கமாகி, சமூகத்தில் நடக்கும் உண்மைகளைத் தேடி சிறுகதைகளாகப்
புனைந்து, அதை நூலுருப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கதே. மே/மது/
வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மகா வித்தியாலயத்தில் கட்டுறுப் பயிற்சிக்காக
வந்த இவர், கற்பித்தல் நடவடிக்கையோடு  மட்டும் நின்றுவிடாமல் சிறுகதை,
கவிதை போன்ற எழுத்தாக்கங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதோடு அவற்றைத்
தொகுத்து நூலுருப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.''

அகம் சார்ந்த அழகான கதைகளுடன், சமூகம் சார்ந்த கதைகளும் இத்தொகுதியில்
உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஆரம்ப எழுத்தாளருக்குரிய
தன்மைகளைவிட்டும் தூரமாகி பல படைப்புக்களைப் படைத்தவர் போன்று அவர்
எழுதும் விதம் வாசகரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளச் செய்கின்றது. அவர்
இடைக்கிடை பயன்படுத்துகின்ற கவி வரிகளும், பழமொழிகளும் கதையின்
சுவாரஷ்யத்தை அதிகரிக்கின்றது.

முதல் சிறுகதையான விதி வரைந்த பாதை (பக்கம் 09) என்ற கதை, காதலைப் பற்றி
அழகாக பேசியிருக்கின்றது. காதலன் காதலை மறந்து போனதும், அவனது நண்பன் ஒரு
சகோதரனாய் இருந்து ஆறுதல் சொல்கின்றான். அந்த ஆறுதலில் சகோதரத்துவமும்,
நட்பும் மிக அழகாக காட்டப்பட்டிருக்கின்றது. இறுதியில் அந்தப் பெண் ஒரு
வைத்தியரைத் திருமணம் முடிக்கின்றாள். அவளது முன்னைய காதலன் காலத்தின்
கோலத்தால்  விபத்துக்குள்ளாகி, ஒரு காலையும் இழந்துவிடுகின்றான். ஒரு
நல்ல பெண்ணை இழந்துவிட்டதால் அவனது வாழ்க்கை விதி வரைந்த பாதை வழியே
செல்கின்றது.

கலங்காதே கண்மணி (பக்கம் 19) என்ற சிறுகதையும் தனது கருவாக காதலையே
கொண்டிருக்கின்றது. அண்ணால் ஏமாற்றப்ட்ட ஒரு பெண்ணுக்கு அவனது தம்பி
வாழ்வு கொடுப்பதாக கதையோட்டம் காணப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில்
பலரும் காதலை ஒரு பொழுதுபோக்காகவே கொண்டிருக்கின்றார்கள்.

உன்னோடு வாழாவிட்டால் (பக்கம் 24) என்ற சிறுகதை, ஆழமான அன்பை
வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. தனது தோழியினூடாக காதலைச்
சொல்கிறாள் சஜி. ஆனால் பர்ஸாத் அவளது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனது
கல்யாணமும் நிச்சயமான பிறகு சஜி தனது தூய காதலை நிரூபிப்பதற்காக
தண்டவாளத்தில் இறந்து கிடந்தாள். தனிமையாக கிடந்த அவளது கையை மாத்திரம்
கண்டதும் பர்ஸாத் அந்த கை மீது முத்தமிடுகின்றான். அந்த சம்பவம் வாசகரின்
உள்ளத்தை அப்படியே கசியச் செய்துவிடுகின்றது.

கருவோடு கருகிய தாலி (பக்கம் 29) என்ற சிறுகதை இல்லாமல் போன நமது
கலாசாரத்தை பறைசாற்றுகின்றது. அதாவது ஒருவரின் மனது என்ன பாடுபடுகிறது
என்பதைப் புரிந்துகொள்ளாமல் பலர் அடுத்தவரை புண்படுத்துகின்றனர். அவர்களை
கண்டவாறு பேசி இதயத்தை துளைத்து அதில் அலாதி இன்பம் அடைகின்றனர். அதிலும்
குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் என்றால் அதனைச் சொல்லவும் தேவையில்லை.
அவ்வாறானதொரு சமூகப் பிரச்சனையை கதாசிரியர் இந்தக் கதையில்
வெளிப்படுத்தியிருக்கின்றார். காலப்போக்கில் அவள் கருத்தரிக்கின்றாள்.
அந்தச் சந்தோஷமான செய்தியை கணவனுக்கு தொலைபேசி வழியாக சொல்கின்றாள்.
அவளைப் பார்க்க ஆவலுடன் வரும் கணவன் விபத்துக்குள்ளாகிறான். அந்தச்
செய்தியை அறிந்த அவள் மயங்கி கீழே வீழுந்து வயிறு அடிபடுகின்றது. அதனால்
கருவும் கலைகின்றது. தற்போது இருவரும் இன்றி அவள் படும் துயரை இந்தக்
கதையிலே துல்லியமாக பதிய வைத்திருக்கின்றார்.

நூலாசிரியர் ஹனீபா சஹீலாவின் முயற்சிகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டியது
ஏனைய எழுத்தாளர்களின் கடமையாகும். இளம் வயதிலேயே பல திறமைகளைக் கொண்டுள்ள நூலாசிரியர் சஹீலாவை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - விதி வரைந்த பாதை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஹனீபா சஹீலா
விலை - 200 ரூபாய்

Thursday, October 31, 2013

50. நினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

நினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே 2010 இல் மனதில் உறுதி வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.

நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி போரின் கொடுமைகள், மக்கள் அதனால் பட்ட அவதிகள், யுத்தம் அழித்துச் சென்ற செல்வங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருப்பதானது, போர் மக்களின் மனதில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணரக்கூடியதாக இருக்கின்றது. எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த போரின் போது இறந்தன? எத்தனை நபர்கள் காணாமல் போயுள்ளனர்? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடையே இல்லாத சூழலில் இந்தத் தொகுதியானது சிலருக்கு, சிறந்த ஆறுதலாகக்கூட இருக்கலாம் என்ற அளவுக்கு அதில் சித்தரிக்கப்பட்டுள்ள விடயங்கள் மனதைக் கவர்கின்றன.

சொந்தமில்லா பந்தங்கள் (பக்கம் 01) என்ற முதல் கதையின் தலைப்பே கதையை சொல்லிவிடுகின்றது. எந்த விதத்திலும் இரத்த சொந்தமே இல்லாத பிள்ளைகள் ஒரு பெண்மணியிடம் தஞ்சம் புகுகின்றன. அரக்கப்பரக்க அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் சாப்பிடுவதைக் கண்டு அப்பெண்ணின் இதயம் மிகவும் துன்பப்படுகின்றது. முகாமில் வாழ்ந்த அந்தப் பெண்ணுக்கு மீண்டும் தன் சொந்த இடத்தில் குடியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவளுடன் இருக்கும் இந்த மூன்று குழந்தைகளையும் அவள் அழைத்துப் போகலாம். ஆனாலும் தனக்கு ஏதாவது நடந்தால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று சிந்திக்கும் அவள் மூன்றாவது குழந்தையை மாத்திரம் தூக்கிக் கொண்டு மற்ற பிள்ளைகளிடமிருந்து துன்பத்துடன் விடைபெறுகிறாள். மற்ற இருவரும் அந்த அம்மம்மாவை குத்திட்டுப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதுதான் கதையின் பிரதான அம்சம்.

யாரை நொந்து என்ன பயன்? எல்லாம் என் தலைவிதி.

தலைவிதி என்றால் அதை ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் சேர்த்துத்தான் இறைவன் எழுதுவானோ?

இந்த முட்கம்பி வேலிக்குள் சிறைப்பட்டிருக்கும் அனைவருக்குமே ஒரே தலையெழுத்து தானோ?| என்று இந்தக் கதையின் தொடக்கத்தில் கதாசிரியர் எழுதியிருக்கும் வரிகள் வலியை சுமந்து நிற்கின்றன.

திருப்பம் (பக்கம் 09) என்ற கதை கணவனை இழந்த பெண்ணின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. சந்திரமதி என்ற பெண்ணின் கணவன் அவளது கண் முன்னிலையிலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரைவிட்ட பின் அவளது வாழ்வு எப்படி பிரச்சனைகளுடன் கழிகிறது என்பதை அழகாக எழுதியுள்ளார் கதையாசிரியர். முகாமிலிருந்து வெளியேறிய பிறகு ஊறுகாய் போத்தல் விற்று தன் வருமானத்தைப் பார்க்கிறாள் அந்தப் பெண்.

ஒரு ஆண் துணையுமின்றி சைக்கிளில் அவள் போய் அவற்றை விற்பனை செய்வதைக் கண்டு சந்திரமதியின் தாயின் உள்ளம் தவிக்கிறது. சந்திரமதிக்கு மறுமணம் செய்து வைக்க முனைகிறாள் அந்தத் தாய். ஆனாலும் சந்திரமதியின் மனது அதற்கு இடம்கொடுக்கவில்லை. அவளது கணவனோடு அவள் வாழ்ந்த நாட்களை அவள் இன்னும் மறக்கவில்லை. ஆதலால் மறுமணம் என்ற பேச்சையே பேச வேண்டாம் எனத் தாய்க்கு உறுதியுடன் கூறுகிறாள். எனினும் அவளை குறிவைத்த பல கண்களை அவள் தினமும் காண்கிறாள். அவர்களிடமிருந்து தப்பித்து தன் மூன்று குழந்தைகளையும் அவள் இனி எப்படி வளர்ப்பாள்? என்ற கேள்வி வாசகருக்கு எழுகின்றது. ஆனாலும் அந்த வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராய் அவள் துணிவுடன் செயற்படுகிறாள் என்பது பெரும் ஆறுதலைத் தருகின்றது.

நினைவு நல்லது வேண்டும் (பக்கம் 17) என்ற மகுடக் கதையானது சாந்தினி என்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகத்தை எடுத்தியம்புகின்றது. அவளது கழுத்தில் பட்ட ஷெல் துண்டொன்று காலப்போக்கில் அவளுக்கு தாங்க முடியாத வலியைக் கொடுக்கின்றது. கொழும்புக்குப் போய்த்தான், அதற்குரிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. அதற்காக அவளிடம் செலவுக்குப் பணமுமில்லை. போய் வருவதற்கான துணையுமில்லை. அதனால் தமக்கென்றிருக்கும் காணியை விற்று தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு சாந்தினியும், அவளது தாயும் கொழும்புக்கு வருகின்றனர். ஆனால் மொழிப் பிரச்சனையும், ஆட்களைத் தெரியாத பயமும் அவர்களை ஆட்கொள்கிறது. இறுதியில் ஒருவாறு வைத்தியசாலையை அடைந்து சாந்தினி அங்கே அனுமதிக்கப்படுகின்றாள். அங்கு தாதியாக தொழில் புரியும் ஒரு சிங்களப் பெண் மற்றவர்களை விழுந்து விழுந்து கவனித்தாலும், சாந்தினியைக் கண்டதும் கடுகடுப்பாகவே பேசுகிறாள். சாந்தினிக்கு இதுவொரு பெரும் மனக்குழப்பத்தைக் கொடுக்கின்றது.

அதாவது அந்தத் தாதியின் கணவன் யுத்த பூமியில் இறந்துவிட்டான். அந்த கோபத்தையே அவள் சாந்தினிக்கு காட்டுகிறாள் என்று அறிந்தபோது மிகவும் வருத்தப்படுகிறாள் சாந்தினி. சாந்தினியும் தன் இரு தம்பிகளை யுத்தத்தில் இழந்தவள்தான் என்று அந்தத் தாதி பின்பு அறிகின்றாள். அதற்குப்பிறகு அவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகின்றது என்பதையும், யார் யாரோ செய்த தவறுகள் யார் யாரையெல்லாமோ பாதிக்கின்றது என்ற உண்மையையும் இக்கதை உணர்த்தி நிற்கின்றது.

விழித்திரு (பக்கம் 63) என்ற கதை பிருந்தா என்ற ஒரு சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வல்லுறவு பற்றிச் சொல்லுகின்றது. தனது தந்தை இறந்தவுடன், தனது தாயான மாலினியை திருமணம் செய்து கொள்வதால் பிருந்தா என்ற ஒரு சிறுமிக்கு சித்தப்பாவாகின்றார் சிவநேசன். இவர் ஆரம்பத்திலேயே போரினால் ஒரு காலை இழந்தவர். அதனால் வெளியில் சென்று வேலை செய்ய முடியாது என்பதால் வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். மாலினியும் தூர இடத்துக்கு கூலி வேலைக்கு செல்வதால் கணவனின் பொறுப்பிலேயே பிள்ளைகளை விட்டுச் செல்வது வழக்கம். முதலில் எந்தவித சலனங்களும் இல்லாதிருந்தபோதும், பிருந்தா பதின்மூன்று வயதில் பருவமடைந்த பின்பு சிவநேசனின் நடவடிக்கைகள் மாறிப் போகின்றது. சொந்தத் தகப்பன்களே இக்காலத்தில் பிள்ளைகளை வேட்டையாடும்போது சித்தப்பா எம்மாத்திரம்? வேலியே பயிரை மேய்கின்றது.

இது பற்றி தாயிடம் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகின்றான் சித்தப்பன். சில நாட்களுக்குள் தனது மகள் கர்ப்பமான விடயத்தை மாலினி அறிந்து துடிக்கின்றாள். பின்பு இரவு முழுவதும் யோசித்துவிட்டு பிருந்தாவின் கருவைக் கலைப்பதற்காக மாலினி பிருந்தாவை அழைத்துச் செல்கின்றாள். தனக்கு என்ன நடந்தது? ஏன் தாய் இங்கே அழைத்து வந்தாள் என்றுகூட தெரியாமல் பிருந்தா யோசிக்கின்றாள். அவ்விடத்தில் பப்பாசிக்குழாய், சைக்கிள் சில்லுக்கம்பி ஆகியவற்றின் மூலம் மூடத்தனமான வைத்திய முறை நடக்கின்றது. சிறிது நேரத்தில் பிருந்தா என்ற சின்னப் பூ இறந்துவிடுகின்றது.

போர் தந்துவிட்டுப் போன காயங்கள் ஏராளம். அவற்றை சொல்லில் வடிக்க முடியாது. ஆனாலும் சமூகம் எதிர்கொண்ட சோகங்களை தன் பேனாவால் கதையாக்கித் தந்திருக்கும் ப. விஷ்ணுவர்தினி பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - நினைவு நல்லது வேண்டும்
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ப. விஷ்ணுவர்த்தினி
விலை - 250 ரூபாய்
வெளியீடு - ஜீவநதி வெளியீடு

49. நினைவுகள் அழிவதில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய எனது பார்வை

நினைவுகள் அழிவதில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய எனது பார்வை

1957 இல் எழுத ஆரம்பித்தவர் திரு நீர்வை பொன்னையன் அவர்கள். இவரது முதல் சிறுகதை பாசம் என்பதாகும். இக் கதையானது ஈழநாடு வாரப் பதிப்பில் பிரசுரமாகியுள்ளது. அதனையடுத்து  மேடும் பள்ளமும்  என்ற கதை கலைச் செல்வி இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். 1957 இல் எழுத ஆரம்பித்த திரு நீர்வை பொன்னையன் அவர்கள் 2012 வரையான 65 வருட காலப் பகுதிகளில் 91 சிறுகதைகளை எழுதியுள்ளார்.

1961 இல் வெளியிடப்பட்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் என்பதாகும். உதயம், பாதை, வேட்கை, ஜென்மம், நிமிர்வு, காலவெள்ளம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நினைவுகள் அழிவதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுதியானது இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வெளிவந்துள்ள திரு நீர்வை பொன்னையன் அவர்களின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதியாகும்.

உழைக்கும் தொழிலாளியான விவசாய மக்களது வர்க்கப் போராட்டங்களை அடிநாதமாகக் கொண்டும், எமது தாயகத்திலுள்ள பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தினதும், தமிழ்ப் போராட்டக் குழுக்களதும் பாசிச நடவடிக்கைகளையும், அழிப்புக்களையும் அம்பலப்படுத்தி எதிர்ப்புக் குரல் எழுப்பியும் இவரது படைப்புக்கள்  யாவும் புனையப்பட்டுள்ளன. இவர் தனியல்லன். சுரண்டலையும், சூறையாடலையும் தகர்த்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தை நிர்மாணிப்பதற்காகப் போராடி வருகின்ற முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் முக்கிய மூத்த உறுப்பினர் ஆவார்.

சிறுகதைகளை நல்ல முறையில் படைக்க வேண்டும் என்றால் தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்களின் கதைகளை நாம் வாசித்திருக்க வேண்டும். அவ்வாறு வாசித்திருந்தால்தான் இளந்தலைமுறையினர் காத்திரமான கதைகளைப் படைக்க இயலும். அவ்வாறானதொரு காத்திரமான தொகுதிகளின் ஆசிரியர் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் விளங்குகின்றார்கள்.

நினைவுகள் அழிவதில்லை என்ற இத்தொகுதியில் பத்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன. நீர்வை பொன்னையன் அவர்கள் தன் இளமை வயது தொடக்கம் தனக்கென்ற தனிக் கொள்கையுடன் வாழ்ந்தவர், வாழ்ந்து வருபவர் என்பதை அவரது பல சிறுகதைகள் சுட்டி நிற்கின்றன. தலைசிறந்த ஒரு தலைவராக, மனித நேயம் மிக்க ஒரு மனிதராக அவர் இன்றும் எம்மத்தியில் காணப்படுகின்றார். அவரது கதைகளில் வரும் பாத்திரப் படைப்புக்கள் கூட, கோழைகளாக வாழாமல் துணிச்சல் மிக்க வீரர்களாக வாழ வேண்டும் என்ற அச்சமின்மையை வாசகர்களிடம் தோற்றுவிக்கின்றது.

நினைவுகள் அழிவதில்லை என்ற முதல் கதையானது ஒரு ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையிலான உரையாடலாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. கதையின் வர்ணனைகளில் அலாதி சிறப்புக்கள் காணப்படுகின்றன. முதலாவது மொழிநடை. அடுத்து உவமானங்கள். மொழிநடைகள் ஏனையவர்களின் சிறுகதைகளிலிருந்து மாறுபட்டதாக காணப்படுகின்றது.  அதாவது இந்திய சிறுகதைகளை வாசிக்கும் உணர்வை இக்கதை ஏற்படுத்துகின்றது. நமஸ்கார் பாபுஜி என்ற முதல் சொல்லாடலே அக்கருத்தை வலியுறுத்திவிடுகின்றது. அதுபோல ஷகடலலையாய் நீண்டு வளர்ந்த கூந்தல்| என்ற உவமானம் சற்று வித்தியாசமான ரசனையை தோற்றுவிக்கின்றது. கார்மேகக் கூந்தல் என்பதுதான் வழமையான உவமானமாக இருப்பதால் மனதில் இது பதிந்துவிட்டதெனலாம். மெல்லிய காதல் உணர்வுகள் இக்கதையில் இழியோடியபோதும் கூட, இறுதியில் தோழமை உணர்வினால் அது இல்லாமல் போவதை உணர முடிகின்றது.
குருஷேத்திரம் என்ற கதை மிகவும் நயக்கத்தக்கதாகவும், ஹாஸ்ய உணர்வு கலந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. கந்த புராணப் படிப்புப் போட்டி ஒன்றிற்காக இரண்டு தரப்பினர் கலந்து கொள்கின்றனர்.

முதல் தரப்பினர் பல வருடங்களாக அந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருபவர்கள். இரண்டாவது கூட்டத்தினருக்கு இந்த முறை அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சந்தர்ப்ப வசத்தால் கிடைக்கின்றது. கிடாய் விசுவன் பெரிய தைரியசாலி போல போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்கின்றார். ஏனையோருக்கு அச்சம். என்ன நடக்கப்போகிறதோ என்ற அவஸ்தையில் அவர்கள் தவித்திருக்க விசுவன் ஒரே ஒரு விடயத்தைத்தான் எதிரணியிடம் கேட்கின்றான். அதாவது, 'என்னையா? சீ இப்படியா பாட்டை வாசிக்கிறது? அந்தப் பாட்டைத் திருப்பி வாசியும்' என்கின்றார். இதுவரை காலமும் முதலிடம் பிடித்து வந்த குழுவினர் திகைக்கின்றனர். அவர்களுக்கு வியர்த்துவிடுகிறது. வெற்றிப் புன்னகையுடன் விசுவன் தன் நண்பர்களை நோக்கி வருகின்றான்.

இத்தனைக்கும் விசுவன் ஒரு எழுத்துத் தானும் படித்தவனில்லை என்பதை ஷஒருவரி கூட உனக்கு வாசிக்கத் தெரியாது. அப்படிப்பட்ட உன்னாலை இதை எப்படி சாதிக்க முடிஞ்சுது?| என்ற நண்பர்களின் கேள்வி மூலம் கதாசிரியர் வாசகருக்கு உணர்த்துகின்றார். வெற்றி எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு விசுவன் இவ்வாறு விடையளிக்கின்றான். ஷஅவை கையாண்ட யுக்தியைத்தான் நான் அவையளுக்கெதிராய் பாவிச்சன்|.

இன்றைய சூழ்நிலையில் மக்கள் நீதி நேர்மை, கடமை என்ற எல்லாவற்றையும் மறந்து விட்டிருக்கிறார்கள். அன்பு, பிணைப்பு என்பதற்கெல்லாம் இன்று சக்தியே இல்லாமல் போய்விட்டது. பணம்தான் அனைத்து தரப்பினரையும் ஆட்சி செய்கின்றது. நீதி என்ற கதையும் அவ்வாறு அநீதி இழைக்கப்பட்ட ஒரு விடயம் பற்றியே பேசுகிறது.

பேதிரிஸ் முதலாளியின் மதுக்கடைக்கும், பேரம்பலம் முதலாளியின் நகைக் கடைக்கும் இடைநடுவே ஐந்தடி நீளமும், மூன்றடி அகலமும் கொண்ட ஒரு பரப்பில் வேலு என்பவன் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றான். முதலாளிமார் இருவருக்கும் வேலுவை எப்படியாவது இவ்விடத்திலிருந்து அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணம். பலவாறு முயற்சி செய்தும் அது கைகூடவில்லை. தருணம் பார்த்து அவர்கள் காத்;திருக்கின்றனர். ஒருநாள் மழை பொழியும் நேரம். பேதிரிஸ் முதலாளி வேலுவை அழைத்து தனது கடையின் பெயர்ப் பலகை சரிந்துள்ளதாகவும், அதை சரிசெய்துதரும் படியும் கூறுகின்றார். அதற்கு வேலு தற்போது மழை பெய்கிறது என்பதால் கூரை ஈரலிப்பாக இருக்கும் என்பதாகவும், தான் நாளைக்கு அதை சரி செய்து விடுவதாகவும் கூறுகின்றான். அதிகார வர்க்கம் எல்லா இடங்களிலும் இருக்கின்றதுதானே. இப்போதே பலகையை சரி செய்து விடுமாறும், இல்லையேல் வேறு வழியை, தான் பார்ப்பதாகவும் பேதிரிஸ் முதலாளி மிகவும் கடுப்பாக கூறியதால், வேலு வேறு வழியின்றி கூரைக்கு மேல் ஏறுகின்றான். சற்று நேரத்தில் மின்சாரம் தாக்கியதால் கதறிக்கதறி வேலு இறந்துவிடுகின்றான்.

இதை அறிந்த வேலுவின் மகன் மாதவன் பொலிஸில் முறைப்பாடு செய்யும் போது அவனுக்கு நஷ்டஈடு தருவதாக பொலிஸ் அதிகாரி பேதிரிஸ் முதலாளிக்கு சார்பாக பேசுகின்றார். கதையின் இறுதிக் கட்டம் மனதை சல்லடையாக்குகின்றது. நெஞ்சுக்குள் வலியெடுக்கின்றது.

'நகைக் கடையை உடைத்துத் திருட முயன்ற செருப்பு தைக்கும் தொழிலாளி வேலு மின்சாரம் தாக்கி மரணம்' என பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் செய்திப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இந்தக் கதை என்னை மிகவும் பாதித்தது. யதார்த்தங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்பதை கதாசிரியர் நன்கு உணர்த்தியிருக்கின்றார்.

இன்றைய மாணவர்கள் மட்டுமல்ல அக்காலத்து மாணவர்களும் சேட்டை மிகுந்தவர்கள் என்பதை அவன் என்ற கதை சொல்கின்றது. வீரசிங்கம் என்ற மாணவன் வகுப்பில் குழப்படியாயிருந்து பின்பு பொலிஸ் அதிகாரியாக ஆன கதையை சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள். வளரும் பயிரை முளையில் தெரியும் என்றாலும் காலம் யார் யாரை எப்படி மாற்றும் என்பது யாருக்கும் தெரியாது. நன்றாக படித்தவர்கள் திருடர்களாக இருக்கின்றார்கள். குறும்புத்தனமாக இருந்தவர்கள் பொறுப்பான பதவியில் இருக்கின்றார்கள். எனவே யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை இக்கதை வலியுறுத்துகின்றது.

வெளிநாட்டு மோகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கதையை அக்கரைப் பச்சை என்ற சிறுகதை விளக்குகின்றது. மிகவும் கஷ்டப்பட்டு, கடன்பட்டு மகனை கனடாவுக்கு அனுப்பி வைக்கின்றார் தேவநாயகம். பிறகு மகனின் அன்பு வற்புறுத்தலால் அவரும், மனைவியும், ஒரே மகளும் கனடாவுக்கு செல்கின்றனர். மகள் அங்குள்ள சுப்பர்மார்க்கட் ஒன்றில் தொழில் புரிகின்றாள். சில காலத்தின் பின் கனடா அரசாங்கத்தில் அகதிக் காசு வாங்குவதற்காக மூவரையும் தன் காரில் அழைத்துச் செல்கின்றான் மகன். தந்தை தேவநாயகம் அந்த அகதிக் காசை பிச்சைக் காசாகவே எண்ணுகின்றார். மனம் ரணமாகின்றது. வெட்கம் அவரை பிடுங்கித் தின்கின்றது. மனைவியும், மகளும் மீண்டும் சொந்த நாட்டுக்கு வருவதில் அக்கறை காட்டாதிருக்கவே தேவநாயகம் மீண்டும் தாயகம் திரும்பி விடுகின்றார். வீட்டுத் திறப்பு முன்வீட்டு ஓடிட்டரிடம் இருக்கின்றது. அவர் வெளியில் சென்றிருப்பதால் தேவநாயகம் ஒடிட்டர் வரும் வரை காத்திருக்கின்றார். அப்போது எதிர்பாராத விதமாக தேவநாயகத்தின் சகோதரியும், அவளது கணவனும் வருகின்றனர். அவர்கள் கூறிய கூற்றிலிருந்து, தன்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள் என்ற உண்மை தேவநாயகத்துக்கு விளங்குகின்றது.

அதாவது தேவநாயகத்தின் மனைவியின் பெயரில் இருந்த காணியை, அவள் தேவநாயகத்துக்கு தெரியாமல் ஓடிட்டருக்கு விற்றுவிட்டாள். தற்போது அவளும், மகளும் கனடாவில் மகனுடன் இருக்கின்றனர். அவர்களது வெளிநாட்டு மோகம் தேவநாயகத்தை அநாதையாக்கி விடுகின்றது. உழைப்பை நம்பி வாழும் அவரது சகோதரியும், மச்சானும் இவரை அழைக்கின்றனர். அவர்களுடன் தேவநாயகம் புறப்படுவதாக கதை நிறைவடைகின்றது.

இன்று இவ்வாறான பல சம்பவங்கள் நிகழ்கின்றன. எல்லா விடயங்களும் இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுவதில்லை. சமூக அவலங்கள் இவ்வாறு வெளிப்படுமானால் அதுவே சிறந்த சிறுகதைகளுக்கு உதாரணமாகும். திரு நீர்வை பொன்னையன் அவர்கள் இன்னும் பல நூல்களை வெளியிட வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நூலின் பெயர் - நினைவுகள் அழிவதில்லை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - நீர்வை பொன்னையன்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
விலை - 200 ரூபாய் 

Tuesday, September 3, 2013

48. குதிரைகளும் பறக்கும் என்ற சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

குதிரைகளும் பறக்கும் என்ற சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சட்டத்தரணி பதுளை சேனாதிராஜா அவர்களின் 'குதிரைகளும் பறக்கும்' என்ற கன்னிச் சிறுகதைத் தொகுதி 127 பக்கங்களில் 12 சிறுகதைகளை உள்ளடக்கி கொடகே பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது.

குதிரைகளும் பறக்கும், குறியீடுகள், நிலா இல்லாத பௌர்ணமிகள், கோணல் சித்திரங்கள், அட்டைகள், முற்றுப்புள்ளி, சலனம், கனவுகளுக்கு விடுமுறை, இன்னொரு ஹிரோஷிமா, இட்லரின் இடைவேளை, பிளெக் மெஜிக், நகர்வு ஆகிய 12 கதைகள் இதில் காணப்படுகின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் கற்பனைகள் கலக்காதபடி மிகத் தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டும், அவர்களின் வறுமை நிலையை புடம்போட்டுக் காட்டக் கூடியதாகவும் இச்சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


குதிரைகளும் பறக்கும் என்ற முதல் கதை தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகளை தலை நகரங்களில் வீட்டு வேலைக்கு விடும் விடயம் பற்றிப் பேசுகிறது. அதில் கார்மேகம் என்பவனுடைய மகள் கோமதி அவள் வேலை செய்யும் வீட்டிலுள்ள தங்க நகையை திருடிவிட்டதாக அந்த வீட்டு எஜமானி குற்றம் சுமத்துகின்றாள். ஏழைகள் என்பதால் எதையும் பேசி மனதைப் புண்ணாக்கும் எஜமானர்களின் சுயரூபம் தெளிவாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

'ஓ பச்சக் கொழந்தயா இவ? பச்சக் கொழந்தக்கி ஒரிஜினல் நகைய எடுத்து ஒழிச்சு வச்சிக்கிட்டு கொண்டு போக தெரயுமா?' என்ற வீட்டு எஜமானி கேட்கும் கேள்வியில் எத்தனை இளக்காரம் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

'அம்மா.. ஒங்க கதைய நிப்பாட்டுங்க. நாங்க ஏழைகள்தான். எவனையும் ஏமாத்தி பொழப்ப நடத்தல. முடிஞ்ச மட்டும் நேர்மையாக இருக்கோம். பசி பட்டினியா இருந்தாலும் எங்கயும் நாம ஓடிப் போகல' என்று கார்மேகம் சொல்வதிலருந்து கோமதியினதும், கார்மேகத்தினதும் மனது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

கதை இறுதியில் தனது கணவரிடம் கொடுத்திருந்ததையும், அதை மறந்துவிட்டுத்தான் கோமதியை சந்தேகப்பட்டாள் என்றும் கதாசிரியர் உண்மையை வெளிக்காட்டுகின்றார்.

அட்டைகள் என்ற சிறுகதையானது களுத்தறை மாவட்டத்தின் மத்துகம டவுனுக்கு அருகேயுள்ள கிராமப்பற பாடசாலையின் அவலத்தை மிகச் சரியாக சுட்டிக்காட்டுகிறதெனலாம். ஆப்தீனும், இமாமும் காரில் பிரயாணத்தை மேற்கொள்கின்றனர்.

வழியில் ஒரு மூதாட்டியிடம் விசாரித்ததும் இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும் என மூதாட்டி சொல்கிறார். சற்று நேரத்தில் ஒரு கடைக்காரரிடம் நியுபோட் வத்த எங்கே இருக்கிறது? என்று கேட்டபோது அவன் இடத்தை கூறிவிட்டு ஒரு கட்டத்துக்கு மேல் காரில் பயணிக்க முடியாது என்று சொல்கிறான்.

கொஞ்சதூரம் காரில் செல்லும்போது பாதையில் நிரம்பியிருந்த நீர்நிலைகளிலும், குழிகளிலும் காரின் சில்லுகள் தடம் புரள்கின்றன. இமாம் ஆப்தீனிடம், 'இதுக்கு மேல போனா கார பஞ்சிகாவத்தக்கி குடுக்கோணும்' என்று சொல்லியிருக்கும் பதில் நகைச் சுவையாக இருப்பதுடன் பாதையின் சீரற்ற தன்மையையும் கண்முன் நிறுத்துகிறது.

அதுபோல ஆப்தீன், இமாம் ஆகியோரின் பிரதேச வழக்கில் அமைந்த பேச்சை நூலாசிரியர் அழகாக சொல்லியிருக்கும் பாங்கு அவர் பல்வேறுபட்ட மக்களுடனும் பழகுகின்றார் என்பதைக் காட்டி நிற்கிறது.

மழை நீர் மண்ணை பிரட்டிக் கொண்டிக்கும் நிலையை பால்தேத்தண்ணி போன்ற நிறம் என்ற உவமானத்துடன் சொல்லியிருப்பது ரசிப்புக்குரியது.

சப்பாத்துக்களில் நீர், சகதி எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு இருவரும் ஒருவாறு மலையுச்சியை அடைகின்றனர். அப்போது சாரம், பத்திக் சட்டை அணிந்து விரைவாக வரும் ஒருவரிடம் 'ஸ்கூல் எங்க இருக்கி?' எனக் கேட்டதும் அவர் இடத்தைக் காட்டிவிட்டு ஏன் என்று கேட்கின்றார். ஆப்தீனுக்கு அவரது கேள்வி வியப்பாக இருக்க பதிக் சட்டைக்காரர் அதற்கான விளக்கத்தை தானே சொல்கிறார்.அதாவது மழைக்காலம் என்றபடியால் அட்டைகள் நிறைய வருகின்றன. ஆதலால் ஸ்கூல் முடப்பட்டுள்ளது என்றதோடு அவசரமாக விடைபெற்றுக்கொள்கின்றார். இமாமுக்கும், ஆப்தீனுக்கும் பெரிய அதிர்ச்சி. அங்கே சிறியதொரு மாரியம்மன் கோவிலும், சில மனிதர்களும் காணப்படுகின்றனர். அவர்களிடம் பாடசாலையின் நிலை பற்றி விசாரித்தபோது அவர்கள் இப்பாடசாலை குறித்த தமது அதிருப்தியை வெளியிடுகின்றனர். கல்வி கந்தோருகள், அரசியல் வாதிகள் என்று சொன்னாலும் இதற்கொரு தீர்வில்லை எனவும், அதிபர் விரும்பிய நேரம் பாடசாலை மூடம்படும் என்றும் ஊர்வாசிகள் கூறுகின்றனர். அதிபரின் வீடு எங்கே என ஆப்தீன் கேட்டதற்கு தூரத்தில் காணப்பட்ட கெசட், சீடி போன்றவற்றை விற்கும் கடையை அதிபர் நடத்துவதாகவும், பாடசாலை பையன்களை உதவியாக வைத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

என்ன அதிசயம். பத்திக் சட்டை போட்டவரை காட்டி 'ஐயா அந்தா போறாரு. ஸ்கூல் பிரின்சிபலு' என்று சொல்கின்றனர். இவற்றையெல்லாம் கண்காணித்துவிட்டு ஆப்தீன் சென்று ஒரு கிழமையில் அதிபரை தற்காலிகமாக சேவை நிறுத்தம் செய்யபட்டுள்ளதாக 'மேல் மாகான கல்வி அதிகாரி ஆப்தீன்' என கையெழுத்திட்டு அதிபருக்கு கடிதம் அனுப்புகிறார். விசாரணையின் போது அதிபர் பை நிறைய ரம்புட்டான் கொண்டு வந்து ஆப்தீனுக்குக் கொடுக்கப்போய் அதன் காரணமாக நிரந்தர சேவை நிறுத்தம் பெற்றதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அட்டைகள் ஒரு மனிதனின் இரத்தத்தை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதே போலத்தான் இந்த அதிபரைப் போன்ற சில அட்டைகளும் மாணவர்களின் நல்ல எதிர்காலத்தை உறிஞ்சி விடுகின்றன. அதிபருக்கு கிடைத்த தண்டனையானது பாடசாலைகளில் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு ஒரு சாட்டையடியாகவும். பாடமாகவும் அமைந்துள்ளது. அதிபர்கள் பொறுப்பின்றி இவ்வாறு நடந்து கொள்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைகின்றது. சமூகத்தில் இன்று அநீதமாக நடக்கும் இது போன்ற விடயங்களை கதாசிரியர் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

இட்லரின் இடைவேளை என்ற கதை சமூகத்தினர் நன்கு அறிந்திருக்க வேண்டிய முக்கியமானதொரு விடயம் பற்றிப் பேச முனைகிறது. முத்து என்பவனே இந்தக் கதையில் வரும் இட்லர் ஆவான். இட்லர் எத்தனைப் பேரின் வாழ்வை சிதைத்தவன் என்பதை வரலாறுகள் இயம்பி நிற்கின்றன.
முத்து என்பவன் மலையக சமுதாயத்தில் உலாவும் ஒரு விஷக்கிருமி. என்னவென்றால் மலையகத்தில் வாழும் குடும்பத்தில் உள்ள சிறுமியர்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் தொழில் அவனுடையது. பொய், புரட்டல்களைக் கூறி ஆசை வார்த்தைகளைக் காட்டி நகர்ப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு கொண்டுபோய் விடுவான். எனினும் அதன் பிறகு அந்த வீடுகளில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களைக் கூட அந்த வீட்டு எஜமானிடம் இருந்து காசு பெற்றுவிட்டால் அதனை மறைத்துவிடும் பேர்வழி அவன். அப்படிப்பட்டதொரு கொள்கை உடைய அவன் தனது மகளை உயர்தரம் வரை படிக்க வைக்கின்றமை கதைப் போக்கின் வளர்ச்சிக் கட்டமாகும். எனினும் ஒருநாள் அவன் எதிர்பாராத விதமாக மகளின் உபதேசத்துக்கு ஆளாகின்றான். மகளும், மனைவியும் இந்த இழிதொழிலை விட்டுவிடுமாறு கெஞ்சுகின்றனர். அதன் காரணமாக கொஞ்ச காலத்துக்கு இந்த தொழிலை விட்டுவிட்டு பிறகு தொடரலாம் என்று முத்து எண்ணுகிறான். இதைத்தான் இட்லரின் இடைவேளை என்ற கதை சொல்லி நிற்கிறது.

இப்படியாக பல உண்மை நிகழ்வுகளை வாசர்கள் அறியும் பொருட்டும், விழிப்புணர்வூட்டும் வகையிலும் சிறுகதைகளாக எழுதியுள்ள சேனாதிராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் பல படைப்புக்களைத் தந்து வெற்றி பெற மீண்டும் எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - குதிரைகளும் பறக்கும்
நூலாசிரியர் - பதுளை சேனாதிராஜா
ஈமெயில் - gsenathy06@gmail.com
வெளியீடு - கொடகே பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

47. ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விசித்திரமான மனித மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் மனிதனின் போக்கையே மாற்றும் சக்தி வாய்ந்தது. மந்திர தந்திரங்களால் அதற்கு தீர்வு காணப்போய் மாட்டிக் கொண்ட வரலாறுகளும் இதற்குச் சான்று. ஒரு உளவியலாளரின் ஆலோசனைகள் இதற்கு புறம்பானவை. அவை பெரும்பாலும் மனிதனின் ஆழ் மனதை சம்பந்தப்படுத்தி நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்து வைத்தியம் செய்வதால் அந்த வைத்தியம் சாத்தியப்பாடானதாக அமைகின்றது.

நாடறிந்த எழுத்தாளர் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களால் அத்தகையதொரு உளவியலாளரைப் பற்றிய ஒரு புத்தகம் அண்மையில் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றது. ஒரு ஈரு நெஞ்சனின் உளவியல் உலா என்ற தலைப்பிட்டு அல்ஹாஜ் யு.எல்.எம். நௌபர் அவர்களைப் பற்றியே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

உளவியலாளர் ஆன்மீகவாதியாகவும், இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர் மேற்கொள்ளும் வைத்தியங்கள் அளப்பரிய சாதனைகளை தொட்டு விடுவதும் உண்மை. அந்த அடிப்படையில் நௌபர் அவர்களும் தனக்கு அல்லாஹ் கொடுத்த மன வலிமையின் பிரகாரம் பலருக்கு தன்னால் இயன்ற அளப்பரிய சேவைகளைச் செய்து வருகின்றார்.

நௌபர் அவர்களின் உளவியல் சம்பந்தமான முழு விபரங்களும் இந்தத் தொகுதியல் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, அவரது வைத்தியத்தின் மூலம் குணமாகியவர்களின் கருத்துக்களும் இந்தத் தொகுதியில் உள்வாங்கப்பட்டுள்ளமை கூடுதல் சிறப்பு எனலாம்.

சிந்தனை வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இந்தூல் 550 பக்கங்களை உள்ளடக்கி உளவியல் துறை சார்ந்த மேற்படிப்புகளில் நௌபர் அவர்கள் பெற்ற சான்றிதழ்களும் சான்றாதாரமாக இதில் அச்சாகியிருக்கின்றதுடன் முக்கியமான புகைப்படங்களும் இதில் காணப்படுகின்றன.

ஷஉளவியல் அல்லது மனோதத்துவம் என்பது மனிதனின் மன செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் பற்றி ஆய்வு செய்யும் ஓர் இயலாகும். இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளோரை உளவியலாளர்கள் என அழைக்கிறோம். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்சானிகள் என அழைக்கப்படுவர்| (பக்கம் 54) என உளவியலாளர்கள் பற்றியும், உலகில் தலை சிறந்த உளவியல் அறிஞர்கள்; பற்றியும் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் தனது பரந்துபட்ட தேடல்களை எமக்கு வழங்கியிருக்கின்றார். எனவே அல்ஹாஜ் நௌபர் அவர்களின் ஆளுமைகள் பற்றி அலசுவது பொருத்தம் என எண்ணுகிறேன்.

நௌபர் அவர்கள் தனது பேணுதலான இறை பக்தியின் மூலமும், தன்னுடைய உளவியல் ஆற்றல்களை வளர்த்துக்கொண்டவர். சின்ன வயதிலிருந்தே பிரார்த்தனை மூலம் அல்hஹ்விடம் எதனையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. எந்தளவுக்கென்றால் தான் சிறுவனாக இருந்தபோது முதல் தவணையில் அவர் வகுப்பில் இரண்டாவது நிலை பெறுகிறார். அடுத்த தவணையில் முதல் நிலை பெற வேண்டும் என நினைப்பது சர்வ சாதாரணமான விடயம். ஆனால் இதில் பொதிந்துள்ள ஆச்சரியம் என்வென்றால் அவர் தனக்கு இன்ன இன்ன பாடங்களில் இத்தனை புள்ளிகள் வர வேண்டும், சராசரி நிலைப் புள்ளி இத்தனைதான் இருக்க வேண்டும் என்று கேட்டு பிரார்த்தித்தார். என்ன ஆச்சரியம் அடுத்த தவணையில் தான் கேட்ட அதே புள்ளிகள் அச்சு அசலாக அதே அளவில் வந்திருந்ததை இறைவன் அருள் இல்லாமல் வேறென்ன என்பது?

சிலபொழுதுகளில் அவர் காணும் கனவுகள் உண்மையாகவே நிகழ்ந்திருக்கின்றன. சில நிகழ்வுகள் அவரது உள்ளத்தில் தானாகவே உதித்திருக்கின்றன. அவை பற்றிய விடயங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. கௌரவ ரணில் அவர்கள் பிரதமராகி இரண்டு வருடங்களுக்குள் ஆட்சி கவிழ்ந்து விடும், சுனாமிப் பேரலை பற்றிய எதிர்வு கூறல் போன்றவற்றை நௌபர் அவர்கள் முன்கூட்டியே கூறி இருக்கின்றார். அவை நடந்து முடிந்த விடயம் என்பதும் நாமறிந்ததே. அத்துடன் கர்ப்ப கால உபாதை, முள்ளந்தண்டு பாதிப்பு, தெளிவற்ற கண்பார்வை, பித்தப்பைக் கல், இதயத்தில் துளை, வயிற்றுப் புண் இன்னும் பல நோய்கள் என்று வந்தவர்களுக்கு துஆ பிரார்த்தனை மூலம் சிகிச்சையளித்து குணமாக்கிய அதிசய ஆன்மீக சக்தி நௌபர் அவர்களிடம் இருக்கின்றது.

இலங்கையில் நமது இஸ்லாமிய சமூகத்தில் பக்தியை மாத்திரம் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்டு, இல்லாதவர்களுக்கு உதவி வரும் நௌபர் அவர்களை ஈருநெஞ்சன் என புன்னியாமீன் அவர்கள் விளித்திருப்பது சாலப் பொருத்தம். நௌபர் அவர்களைப் பற்றி அறியத் தந்த கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களையும், பிறர் நலனையே தன்னலனாகக் கொண்டு வாழ்ந்து வரும் மகான் அல்ஹாஜ் நௌபர் அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்று பிரார்திக்கிறேன்!!!

நூலின் பெயர் - ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா
நூலாசிரியர் - கலாபூஷணம் புன்னியாமீன்
தொலைபேசி - 0812493749
வெளியீடு - சிந்தனை வட்டம்
விலை - 880 ரூபாய்

Friday, July 5, 2013

46. பூவும் கனியும் சிறுவர் நூலுக்கான இரசனைக் குறிப்பு

பூவும் கனியும் சிறுவர் நூலுக்கான இரசனைக் குறிப்பு

வெலிப்பன்னை அத்தாஸ் அவர்கள் ஒரு ஆசிரியராக, அதிபராக இருந்தவர். முதன் முதலில் தாரகை என்ற வாராந்தப் பத்திரிகையிலேயே இவரது முதலாவது ஆக்கமான 'முஸ்லிம்களுக்கு மதக்கல்வி புகுத்துதலில் மாற்றம் வேண்டும்' என்ற கட்டுரை 1961 இல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல வருடங்களாக கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார்.

1968 இல் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள், 1985 இல் எம்.எம்.எம். யூசுப் நினைவுகள் (தொகுப்பு நூல்), 2003 இல் சிந்தனைப் பார்வைகள் ஆகிய 03 நூல்கள் இவரால் எழுதி வெயிடப்பட்டுள்ளன. 2013 இல் இவர் எழுதிய பூவும் கனியும் என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது.

முதலில் புத்தகத்தை பிரித்தால் அதனுள்ளிருக்கும் வசீகரத்தன்மை மனதை ஈர்த்து விடுகிறது. வர்ணத் தாள்களில் அச்சாக்கப்பட்டிருக்கும் கவிதைகளை வாசிப்பதற்கு அது உறுதுணை புரிகிறது என்பது உண்மை. 


சிறுவர்களிடம் இறை அச்சத்தை, இறை பக்தியை வளர்க்க வேண்டியது பெற்றோர்கள் மாத்திரமல்ல. உங்களை, எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கும் அது கடமையான விடயம். விசேடமாக சிறுவர் இலக்கியத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தனது முதல் பாடலாக அல்லாஹ் என்ற தலைப்பிட்டு அத்தாஸ் அவர்கள் எழுதியிருப்பது, அல்லாஹ்வே முதன்மையானவன் என்பதை குழந்தைகளுக்கும் ஏன் பெரியவர்களுக்கும் உணர்த்தி நிற்கின்றது.

இணையில்லா ஒருவனே அல்லாஹ்
இகம் தனைப் படைத்தவன் அல்லாஹ்
இறைவன் அவனே அல்லாஹ்
இனிதே வணங்குவோம் அல்லாஹ் 

என அந்தக் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கு அடுத்தாக அவனது தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே நாம் நேசிக்கின்றோம். உத்தம நபி என்ற பெயரில் அமைந்திருக்கும் இரண்டாவது கவிதை அத்தாஸ் அவர்கள், குழந்தைகளின் மனதை இஸ்லாத்தின் பால் திசை திருப்புவது பற்றி உணர்ந்தவர் என்பதை எமக்கு காட்டி நிற்கின்றது. அந்தப் பாடலின் சில வரிகள் இதோ..

அல்லாஹ் அருளிய வேதம் தனை
அகிலத்தாருக்கு சொன்ன நபி
அல்குர்ஆனில் மொழிந்தபடி
வாழ்வில் செயலில் காட்டும் நபி

அகிலத்தை படைத்த அல்லாஹ் அதில் எமக்கு உற்ற துணையாக, பாதுகாப்பு அரணாக படைத்திருப்பது நமது தாயைத்தான். அதனால்தான் தாயின் பாதத்தின் கீழ் சுவனம் உள்ளது என்ற மேன்மையை எமக்கு அல்லாஹ் அறிவித்திருக்கின்றான். தூய நேசம் கொண்ட தாயின் புகழை மூன்றாவது பாடலில் பதிய வைத்திருக்கிறார் நூலாசிரியர்.

தந்தையின் நிழலில் வளரும் குழந்தைகள் தரணியில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அவ்வாறின்றி தான்தோன்றித்தனமாக வளர்ந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஆனால் தாயும், தந்தையும் முதுமைப் பருவத்தை அடைந்ததும் எத்தனைப் பேர் அன்பாக, ஆதரவாக அவர்களைக் கவனிக்கின்றார்கள்? இன்றைய சமுதாயம் பணம், பட்டம், பதவி என்பவற்றில்தான் அதிக அக்கறை காட்டுகின்றதே தவிர பாசத்தில் அல்ல. தந்தையின் பாசம் என்றால் என்ன என்பதை எனது அப்பா என்ற பாடலில் நூலாசிரியர் பின்வருமாறு சொல்லியிருக்கின்றார்.

எங்கள் அப்பா நல்லவர்
எல்லாம் சொல்லித் தருபவர்
எங்கும் கூட்டிச் செல்பவர்
எவரும் விரும்பும் உயர்ந்தவர்

சின்ன வயதிலிருந்து இன்றுவரை ராஜா ராணி கதைகள் கேட்பது சுவையான அனுபவம். அந்த அனுபவத்தை எமக்கு குழந்தைப் பருவத்திலே ஊட்டியவர்கள் எமது பாட்டி, பாட்டன். எனவே பாட்டி பற்றிய பாடலையும் எழுத மறக்கவில்லை நூலாசிரியர். 

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவிதைக்கு அப்பால் மிருகங்கள், இயற்கைக் காட்சிகள், மாம்பழம், வெள்ளைக் கொக்கு என்று சிறுவர்கள் விரும்பும் விடயங்கள் பற்றி எழுதியிருக்கும் அத்தாஸ் அவர்கள் பாடல்களுக்குரிய சிறிய படங்களையும் தந்திருப்பது சிறப்பம்சம் என கருதுகிறேன். எழுத்துக்களைவிட படங்கள் மனதில் பதிவதால் பாடலை சிறுவர்கள் வாசித்துணர அது வழிகோலும். 
காகம் என்ற பாடலில் அமைந்துள்ள சில வரிகள் பின்வருமாறு

நாடு நகர் எங்கும் நீ
கூடி வாழ்தல் காண்கின்றோம்
குடும்ப நன்மை அதுவன்றோ
கூட மாந்தர் அறிவாரோ

இந்த வரிகளில் ஒரு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்து பொதிந்திருக்கின்றது. இதை காகத்தின் மூலம் கவிஞர் உணர்த்தியிருக்கின்றார். ஆறறிவு பெற்ற மனிதர்களிடம் இல்லாத பண்புகள் காகத்திடம் காணப்படுகின்றது. இயற்கை நமக்கு பல பாடங்களை கற்பித்து தருகின்றது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும். 

நவமணி, தினகரன், தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் சிறுவர் பகுதியில் வெளிவந்த பாடல்களே இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது கவிஞரின் சிறுவர் இலக்கியப் புலமைக்கு சான்று பகர்வதாக அமைகின்றது. 

சிறுவர் இலக்கியத்தில் ஈடுபவர்கள் வெகு சிலரே. ஏனெனில் சிறுவர்களின் மனதைக்கவரும் படியாக, சிறுவர்களுக்கு புரியும் படியாக எழுதுவது சவாலான விடயம். எனினும் தன்னாலான இலக்கியத் தொண்டுகளை புரிவதற்கு ஏற்ற மனமுடையவர்களால் தான் நல்ல படைப்புக்களைத் தர முடிகிறது. அந்த வகையில் சிறுவர் இலக்கியம் படைக்க முற்பட்டிருக்கும் வெலிப்பன்னை அத்தாஸ் அவர்களின் இலக்கிய ஆளுமை மென்மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - பூவும் கனியும் 
நூலின் வகை - சிறுவர் பாடல்
நூலாசிரியர் - வெலிப்பன்னை அத்தாஸ் 
முகவரி - 41A, Mudlim Road, Welippenna.
வெளியீடு - மொடன் ஸ்டடி சென்டர்
விலை - 150 ரூபாய்