Wednesday, April 6, 2011

02. உயிர்கசிவு - சிறுகதைத்தொகுதி

உயிர்கசிவு சிறுகதைத்தொகுதி பற்றிய விமர்சனம்


வாழ்க்கையினை பாடுகின்ற வானம்பாடி எழுத்தாளர் சுதாராஜ்!


இலக்கியம் மனித வாழ்க்கைக்கு இன்பத்தை தருகிறது. மனித உள்ளத்தில் புதுத்தெம்பையும், புத்துணர்ச்சியையும் ஒரு தெளிவையும் ஏற்படுத்துகின்றது. சிந்தனா சக்தி கொண்ட மனிதனின் வாழ்வில், தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை காத்திரமான முறையில் கருத்து ரீதியாக வெளிப்படுத்தும் முயற்சிக்கான ஊடகம், இந்த இலக்கியம் தான். இலக்கியம் காலத்தின் கண்ணாடி.


கற்பனை கலந்த யதார்த்தத்தை உணர்த்துவதுதான் இலக்கியம். எனவே ஒரு எழுத்தாளனின் எழுதுகோலுக்கு யதார்த்தங்களை படம்பிடித்துக் காட்டும் சக்தி உண்டு. தொலைந்து போன வாழ்வை தோண்டிக்கொடுப்பது இலக்கியம். எழுத்தாளனின் கண் ஒரு கெமரா.


கவிதைகளை விட சிறுகதைகளால், சொல்ல வந்த விடயங்களை நன்றாகவே சொல்ல முடிகிறது. அந்த வகையில் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் சுதாராஜ் பல சிறுகதைத் தொகுதிகளை வாசகர்களுக்கு முன்வைத்துள்ளார். 1970களில் எழுத்துலகத்துக்கு பிரவேசித்தவர் இவர். எழுத்தாளர் சுதாராஜ் அமைதியான தோற்றத்துடன் காணப்படும் ஆர்ப்பாட்டமில்லாத ஒருவர். அவரது நடத்தைகள் அவரது எழுத்துக்கு புறம்பாக இருக்காது. ஏனையவர்களின் துன்பங்களைக் கண்டு வருந்தும் மனமுடையவர் இவர். யதார்த்தத்தை பேசுகிற யாத்ரீகன், வாசிப்பவர்களை யோசிக்க, நேசிக்க வைக்கும் இந்த கதைஞருக்கு வார்த்தைகள் வாலாயப்பட்டதால் கருத்தானது கட்டிடங்கள் செய்வதற்கு கற்களைக் கொடுத்திருக்கிறது. கற்பனைகள் சொற்களைக் கொடுத்திருக்கிறது.

தனிமனித உயர்வுகளில் மட்டுமே நுழைந்திடாமல் சமூக அவலங்களை புடம் போட்டுக்காட்டும் இவரது கதைகள் மனதை செழுமைப்படுத்துவதுடன் மனநிலையையும் செதுக்குகின்றன. அருமையான, ஆழமான கருத்துக்களைக் கொண்டு அமைந்த நிஜங்களைப் படம் பிடித்துக்காட்டுகிறது இவரது சிறுகதைகள்.

ஒரு நாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள், தெரியாத பக்கங்கள், கொடுத்தல், மனித தரிசனங்கள், மனைவி மகாத்மியம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், இளமைக் கோலங்கள் என்ற நாவலையும் ஏற்கனவே இவர் வெளியிட்டுள்ளார்.

703 பக்கங்களில் வெளிவந்துள்ள உயிர்க் கசிவு என்ற இவரது சிறுகதைகளின் தொகுப்பு நூல் 60 சிறுகதைகளை உள்ளடக்கியதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. `ஒரு தேவதையின் குரல்' (பக்கம் 22) என்ற சிறுகதை அற்புதமானது. சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய இந்தச் சிறிய இலங்கையில் இனவேற்றுமை தலைதூக்கி, சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதே இந்தக் கதை. இவ்வாறு ஒரு தேவதையின் குரல் அல்ல... ஓராயிரம் தேவதைகளின் குரல்கள் ஒலிக்க வேண்டும்.

`கால்கள்' (பக்கம் 256) என்ற கதை, வறுமையில் வாடும் குடும்பம் பற்றியது. சோற்றைக் கண்டு பத்து நாட்களுக்கும் மேலாகிற நிலையில் சோறு சாப்பிட வேண்டும் என்ற அந்த சிறுவனின் ஆசை, கண்ணீரை வரவைத்த உருக்கமான கதையாகும்.

ஆனந்த விகடனில் பரிசு பெற்ற `அடைக்கலம்' (பக்கம் 307) என்ற கதை ஜீவகாரூண்யம் பற்றி பேசுகிறது. இதே தொகுதியில் அமைந்திருக்கும் `மெய்ப்பொருள்' (பக்கம் 321) என்ற கதை ஏழ்மையின் காரணமாக இன்னும் மணமுடிக்காத மூன்று சகோதரிகள் பற்றியது. அகிலா (40 வயது), சாந்தா, அம்பிகா (35 வயது) என்ற வயதடிப்படையில் இருக்கும் சகோரிகளில் முதலாமவளை அவளது இருபதாவது வயதில் சதானந்தன் என்றொருவன் காதலிக்கிறான். ஆனால் அவன் பிரான்ஸிருந்து வந்த பிறகு 35 வயதுடைய அம்பிகாவை மணமுடிக்க விரும்புவதாய் கூறுகிறான். இது அகிலாவை மட்டுமல்ல. நம் எல்லோருடைய இதயத்திலும் தீ மூட்டுகிற, மனதை சுட்டெரிக்கிற ஒரு விடயம். நரை தட்டும் முடியை வைத்துக்கொண்டும் சில ஆண்வர்க்கத்துக்கு இளமையான பெண் கேட்கிறது என்று வைகிறார்.

எழுத்தாளர் சுதாராஜ் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும், சவால்களும், அனுபவங்களும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு சிறந்த ஆதர்சனங்களாகும். சமூகத்தில் ஏற்படுகிற அநீதிகளுக்கு சாட்டையடி கொடுத்து மனித நேயத்தைப் பாடுகிறது இந்த வானம்பாடி.

`சில யதார்த்தங்களைச் சொல்வது சிலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். எனினும் என்னால் சொல்லாமலே இருக்க முடியவில்லை' என்று சொல்லும் சுதாராஜ், நேரில் சந்திக்கும் மிகவும் பணிவாகக் கதைத்தார். பின்னர்தான் அவர் ஒரு பொறியியலாளர் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.

உண்மையில் மேடைப் பேச்சுக்களில் `மானிடத்தை நேசிக்கிறோம்' என கதையளப்பவர்கள் தம்மை மனிதநேயம் மிக்கவர்களாக இனங்காட்ட பிரயத்தனப்படுகிறார்கள். இவர்கள் சொற்களில் மாத்திரம் இல்லாமல் வாழ்விலும் மனிதத்தை கடைப்பிடிக்க வேண்டும். மிக அடக்கமாக காட்சி தரும் சுதாராஜ் போன்றோர் மனிதர்களையும் இலக்கியத்தையும் மதிப்பவர்களாய் இருப்பது நிதர்சனம்.

கலைத்துறையில் கற்றவர்கள் ஷகளை|த்துறையில் நிற்கும் போது, கணிதத்துறையில் கற்ற இவரின் எழுத்துக்கள் சாதிக்கும். போதிக்கும். வாழ்வின் வசந்தங்களையும், வறுமையையும் காட்டி நெஞ்சை வருடி திருடி செல்கின்றன இவரது படைப்புக்கள்.

செல்லரித்த கருத்துக்களோடு கைகோர்க்காத இவரது கதைகளை படிக்கையில் நெஞ்சில் புல்லரிக்கிறது. இவரது கதைகளின் செழுமை மிக்க செய்நேர்த்தி இவரது தனித்துவத்தை பறைசாற்றுகிறது.

இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சுதாராஜ் போன்ற காத்திரமானவர்களின் படைப்புக்களைக் கற்காமல் எழுத்துத் துறையில் காலூன்றுவது கடினமே. கர்வமே இல்லாத இந்த கதைஞருக்கு காலத்தின் பொன்னாடை காத்துக்கொண்டிருக்கிறது. திரு சுதாராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உயிர்க்கசிவு (சிறுகதைத் தொகுதி)
நூலாசிரியர் - சுதாராஜ்
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மின்னஞ்சல் முகவரி - rajsiva50@gmail.com
விலை – 1500/=

No comments:

Post a Comment