Wednesday, April 6, 2011

03. வான் அலைகளில் தேன் துளிகள்

வான் அலைகளில் தேன் துளிகள்



வான் அலைகளில் தேன் துளிகள் - விமர்சனப்பார்வை


வான் அலைகளில் தேன் துளிகள் ஒரு பாடல் தொகுப்பு. அல்ஹாஜ் N.M. நூர்தீன் தனது 05 தசாப்த கால படைப்புக்களை சிரமம் பாராது வாசகர் மனசை கொள்ளை கொள்ள வழங்கியிருக்கிறார்.

தனது திறமையால் உருவாகிய இனிமையான பாடல்களை பிறர் பாடிய போது அது தனக்கு எத்தனை பரவசமாக இருந்தது என்பதை `... அவர்கள் அன்று பாடிப் பரவசமூட்டிய, மறக்க முடியாத சொற்பிரவாகங்களை இசையோடு பிசைந்து இன்ப இனிப்புகளாய் நுகர்ந்த நாட்களை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். அவற்றுள் சிலவற்றை, தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற இங்கே அடக்கியுள்ளேன்'என அவர் குறிப்பிடுவதிலிருந்து புலப்படுகிறது.




இப்புத்தகத்தின் முதல் பாடலாக காணப்படுகின்ற `வாழ்க நம் தாய்நாடு' என்பது இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இயற்றப்பட்டதாகும். யாப்பிலக்கணம் கற்றுத் தெளியாத பள்ளிப்பருவத்தில் தன் உள்ளத்தில் துள்ளி எழுந்த நாட்டின் மீதான அக்கறையில் பாடிய பாடல்கள் சக்கரையாய் இருப்பதில் வியப்புதான்.



நூர்தீனின் இளமைக்காலமானது, இலக்கிய வித்தகராக திகழ்ந்த தனது தந்தையான இஸ்லாமிய அறிஞரின் வாழ்வுச் சூழலின் பின்னணியாக அமைந்திருந்தமை அவர் பெற்ற வரம் என்றே கூறலாம்.



நூர்தீன் அவர்களின் பாடல் திறமையை தீனுல் இஸ்லாம், அருவி, தமிழன், தினகரன், சிந்தாமணி இத்தியாதி... போன்ற பத்திரிகைகள் நன்கறியும். இசையுடன் பாடுதல் பற்றின சர்ச்சையை நூர்தீன் பின்வருமாறு தீர்த்துச் செல்கிறார்.



`முஸ்லிம்களிடையே, பாடல்களை இசையுடன் பாடுதலில் பலதரப்பட்ட கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அந்த வேற்றுக்கருத்துக்களை வெளியிடும் உள்ளங்களும் ஒரு தடவையாவது தனது எண்ணத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டே இருக்கும். இசை ரசனையுடன் பாடியே இருக்கும் என்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பது எனது அபிப்பிராயம்'



இக்கருத்து இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் தர்க்கத்துக்கு உரியதாயிருந்த போதும் தனது பாடல்கள் மூலம் தன் கருத்தை எவ்வாறு நிலை நாட்ட முனைந்துள்ளார் என்பது சுவையான அம்சமாகும். இஸ்லாத்தின் மாண்புமிகு விழுமியங்களை உள்வாங்கி அவற்றை வாழ்வின் ஒவ்வொரு துடிப்பிலும் கடைபிடித்து ஒழுக வேண்டும் என்பது தொழுகை, நோன்பு, ஸக்காத் போன்ற பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



நயந்து எழுதப்பட்ட இவர் பாடல்களை வியந்து பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தன் வாழ்த்துரையில் `...பாடல்களைத் தாமே இயற்றி, அவற்றிற்கு மெட்டமைத்து, இசையமைத்து பல சந்தர்ப்பங்களில் சொந்தக் குரலிலேயே அவற்றை இசைத்து கேட்டு இன்புறுவோரை பரவசப்படுத்தும் இவரது ஆற்றலையிட்டு நான் வியப்படைவதுண்டு' என்றும்,



பாராளுமன்ற ஆலோசகர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் `...வாய்விட்டு வகுப்பறையில் பாடிய அவரை, பொன் பட்டுப் போர்த்தி வாழ்த்துவேன் என, அன்று நான் கனவு கண்டேனா? இல்லவே இல்லை. அதிசயம். ஆனால் நிகழ்ந்து விட்டது!' என்கிறார். மேலும் அல்ஹாஜ் என். எம். அமீன், யூ.எல். அலியார், மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ், எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோரும் தத்தமது அணிந்துரைகளில் வாழ்த்துப் பா(பூ)க்களை தூவுகின்றனர்.



விசேடமாக பாடல்களின் முடிவில் திருநபி (ஸல்) அவர்களினால் மொழியப்பட்ட ஹதீஸ்கள் உள்ளடக்கியிருப்பது சிறப்பம்சமாகும். இளம்பிறை இலக்கிய மன்றத்தினால் வெளியிடப்பட்ட வான் அலைகளில் தேன் துளிகள் என்ற இந்தப் புத்தகத்துடன் நிற்காமல் இன்னும் பலவற்றை வெளியிட வாழ்த்துகிறோம்!!!



நூலின் பெயர் - வான் அலைகளில் தேன் துளிகள் (பாடல்)
நூலாசிரியர் - அல்ஹாஜ் என்.எம். நூர்தீன்
வெளியீடு - இளம்பிறை இசை மன்றம்
முகவரி - A 58, Sir Henry De Mel Mw, Colombo - 02.
விலை – 150/=



.....................................................................................



இசைக்கோ நூர்தீன் பற்றிய சில குறிப்புக்கள்



மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசித்து வரும் நெய்னா முஹம்மது நூர்தீன் அவர்கள் சுமார் அரை நூற்றாண்டுகளாக இலக்கியப்பணிக்குள் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகிறார். கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் M/S Noorsons (Pvt) Ltd, M/S Noorsons Furniture Hirers, Al Samit Interna’l ஆகிய நிறுவனங்களுக்கு தலைவராகவும் இருக்கிறார்.



ஊடல் கொண்ட இதயங்களுக்கு தன் பாடல் மூலம் ஆறுதல் தந்தவர். தேடல் உள்ள நெஞ்சங்களுக்காக தன் எழுத்து மூலம் மாறுதல் சொன்னவர். கடந்த ஐந்து தசாப்தங்களாக வீச்சுடன் கூடிய இலக்கியம் யாக்கும் நூர்தீன், கலைஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் போன்ற பன்முகங்கொண்டவர்.



இலங்கை திருநாடு சுதந்திரம் கண்டது முதல் இற்றை வரை ஏறத்தாழ 2000 பாடல்களை எழுதி மெட்டமைத்து பாடியும் உள்ளார். கலாபூஷணம் புன்னியாமீன் தொகுத்த இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 08லும் இவர் பற்றிய அறிமுகம் காணப்படுகிறது.



'வான் அலைகளில் தேன் துளிகள்' என்ற இவரது புத்தகம், பாடல் மீது இவர் கொண்டுள்ள ஈடுபாட்டை பறைசாற்றி நிற்கிறது. இலக்கிய அரங்குகள், முழுமையும் தெரிந்த ஒரு கலைஞனாகவே இவரை ஏற்றுக்கொண்டுள்ளது.



பாடல்கள் தவிர 30 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவை தீனுல் இஸ்லாம், அருவி, மாணவர் மலர், தமிழன், தினகரன், சிந்தாமணி, தினபதி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமாகி உள்ளதுடன், சக்தி, மலேசிய, சிங்கப்பூர் வான் அலைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.



ஏழு இறுவட்டுக்களை (CD) வெளியிட்டுள்ளதுடன் சென்னை ரெக்கோடிங் கம்பனிக்காக பாடியுள்ள நூர்தீன் வெளிநாடுகளிலும், தாயகத்திலும் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்.



வானொலியில் இசைச்சித்திரம், நாடகம், கவிதை, இஸ்லாமிய கீதம், பொப்பிசை போன்ற நிகழ்ச்சிகளையும் தந்துள்ளார். மீலாத், ஹஜ், நோன்பு தினங்களில் இடம்பெறும் விசேட அரங்குகளில் பாடல்களை பாடியவர். டேன் (DAN) தெலைக்காட்சியிலும் இவரது பேட்டி இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



'வானலைகளில் தேன் துளிகள்' என்ற அவரது நூலில் '...அரசியல் கலப்பற்ற சமுதாய உணர்வோடு என் வாழ்நாளில் சில பகுதியை கலைச்சேவைக்கும், மதச்சேவைக்கும் தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டும் என்ற இந்த ஏழையின் குறிக்கோளை அல்லாஹூதஆலா பொருந்தச் செய்வானாக...' என்று கூறியதிலிருந்து அறநெறியில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்று புலப்புடுகிறது.



இவர் பெற்ற விருதுகள் சில...



1. இசைத்திலகம்
2. இசைக்கோ
3. மூஸிக்நூரி
4. சாமஸ்ரீ இசைவாணன்
5. இசைக்கலாநிதி
6. இசைப்பேராசிரியர்
7. கலாபூஷணம்

கொழும்பு இளம்பிறை இசை மன்றத்தின் தலைவராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியின் தலைவராகவும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளராகவும் இருந்து கலைச்சேவைகளை நல்கி வரும் இவரிடமிருந்து இன்னும் பல கலைச்சேவைகளை இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது!!!

No comments:

Post a Comment