Wednesday, January 25, 2017

111. உன்னத வாழ்வு கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!

உன்னத வாழ்வு கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!

இலக்கிய வடிவங்களில் கவிதை அதிக கவனத்தைப் பெறுகின்றது. கவிதை மூலம் உணர்வுகள் வெளிப்படுத்தப்படும்போது வாசிப்பவர்களையும் அது சென்றடைகின்றது. தனி மனித, சமுதாய எழுச்சிகளைப் பாடி நிற்கும் கவிதைகள் காலத்தால் அழியாதவை. அந்த வகையில் ஓய்வு பெற்ற அதிபரான வெலிப்பன்னை அத்தாஸ் எழுதியுள்ள ''உன்னத வாழ்வு'' என்ற கவிதைத் தொகுதி சிறப்புக்குரியது.

இவர் இதுவரை உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள், மர்ஹூம் எம்.எம்.எம். யூசுப் நினைவு மலர், சிந்தனைப் பார்வைகள், பூவும் கனியும், தியாகம் ஆகிய ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார். ஆறாவது நூலான இத்தொகுதி 72 பக்கங்களில் மொடன் ஸ்டடி சென்றர் மூலம் வெளியீடு செய்யப்படுள்ளது.

இத்தொகுதி பற்றி கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஷகவிஞர் அத்தாஸ் அவர்கள் வாழ்வின் தரிசனங்களை உயிர்ப்போடு கவிதைகளாகப் படைத்துள்ளார். தாய், கல்வி, ஆசிரியர் என்பவற்றையும் தொட்டு கவிதைகள் ஊற்றெடுக்கின்றன. கவிதைகள் ஒரு வாசகனின் மனதில் பதிய வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு இவரது கவிதைகள் பயணிக்கின்றன|

நாம் இவ்வுலகிற்கு வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. நமது மரணத்திற்குப் பிறகு எதையும் கொண்டு போகப் போவதுமில்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நாம் பாவனை செய்யும் எல்லா பொருட்களையும் சொந்தம் கொண்டாடிக்கொள்கிறோம். ஏகபோக உரிமை கொண்டாடுகிறோம். ஏனையவர்கள் உதவி பெறுவதைத் தடுக்கின்றோம். ஆனால் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் இறைவன் மாத்திரமே. அவனது நாட்டம் இல்லாவிட்டால் நம்மிடம் எதுவுமே இல்லாமல் போகும் நிலமை உருவாகலாம். சர்வ வல்லமையும் பொருந்திய ஓரிறைவனுக்கு அனைத்தும் சொந்தம் என்பதை உரிமையாளன் இறைவன் (பக்கம் 01) கவிதை உணர்த்துகின்றது.

அனைத்தையும் படைத்தவன் இறைவன் ஒருவன்
அனைத்துக்கும் உரிமையாளன் அவனே ஆவான்
ஆயினும் நம்மவர் நமதெனத் தமதெனப்
பயமுறுத்தி ஒருவரையொருவர் பேசுவோர் ஆயினர்

அல் குர்ஆன் எமது வழிகாட்டியாகும். வாழ்க்கையின் அனைத்துத் தத்துவங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. பல்லாயிரம் வருடங்கள் கடந்தாலும் யாராலும் குர்ஆனைப் போலொரு சிறந்த அறிவுரையை யாராலும் சொல்லவும் முடியாது. சிந்திக்கவும் முடியாது. உலகத்தவர்களுக்கு இறைவனிடமிருந்து கிடைத்த அருட்கொடை. அல் குர்ஆனில் சொல்லப்பட்ட விடயங்கள் முக்காலத்துக்கும் பொருந்தும்படியாக அமைந்துள்ளமை அதன் சிறப்பம்சமாகும். அல் குர்ஆன் (பக்கம் 03) இல் அது பின்வருமாறு உறுதிப்படுத்தப்படுகின்றது.

பொய்யாம் உலகின் இயல்புதனை
வகுத்துத் தொகுத்துச் சொல்வதுடன்
பொருளும் வளமும் பெறும் வழிகள்
பண்பாய் உணர்த்திடும் அல்குர்ஆன்

நேரிய சீரிய வழிதனில்
நேராய் நடந்து வாழ்க்கை தனில்
சித்தி நமக்குக் கிடைத்திட்டால்
சுவனமே பரிசு எனும் அல்குர்ஆன்

ஆதிக்க சக்தி (பக்கம் 09) இயற்கை அனர்த்தங்களை மிகத் தெளிவாகவும், தத்ரூபமாகவும் சொல்லியிருக்கின்றது. இயற்கைக்கு நாம் மாறு செய்தால் இயற்கையே நம்மை தண்டித்துவிடும் என்பது கண்கூடு. காடழிப்பு, மணல் அகழ்வு, பாரிய வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றால் இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து செயற்கைத்தனம் மேலோங்கி காணப்படுகின்றது. மனிதனின் மனம் தீயவற்றின்பால் நாட்டம் கொள்கையில் இறைவன் இதுபோன்ற சோதனைகளைத் தருகின்றான் என்று கவிஞர் அத்தாஸ் கவிதையில் பின்வருமாறு கூறுகின்றார்.

ஆதிக்க வல்லமை உள்ளான் ஏகன் கருணையாளன்
இறையோன் அழிவை எங்கும் எதிலும் திணித்திட முயலான்
மறைவழி தவிர்ந்து தீநெறி ஒழுகும் மக்களை நன்னெறியில்
மாண்புறச் செய்திட அதிர்வலையாய் அழிவைத் தந்திடுவான்

உயர்ந்த பூமி மயானம் (பக்கம் 25) என்ற கவிதை இறைவனிடம் யாவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றது. உலகத்தில் வாழும்போதுதான் நல்லவன் - கெட்டவன், படித்தவன் - பாமரன், ஏழை – பணக்காரன் என்று எல்லா வகையிலும் மனிதன் பிரிவினைப்படுகின்றான். ஆனால் இறந்தபிறகு எப்படி வாழ்ந்த மனிதனாயிருந்தாலும் அவன்; சடலம் என்றே அழைக்கப்படுவான். பணக்காரனுக்கு இன்ன சுடுகாடு, படிக்காதவனுக்கு இன்ன சுடுகாடு என்று சுடுகாடுகள் வரையறுக்கப்படுவதில்லை. யாராக இருந்தாலும் ஆறடி நிலமே இறுதியில் சொந்தமாகிறது. ஆதலால் மயானம் என்பது பயங்கர இடமல்ல. அது மதிக்கத்தக்கது என கவிதையில் கூறப்படுகின்றது.

வாழ்க்கை நெறி காட்டும்
உயர்ந்த பூமி
உன்னத பூமி
அமைதி நிலவும் மயானம்

சுகபோகம் வேண்டாம் (பக்கம் 53) என்ற கவிதை ஆடம்பரமாக வாழும் மானிடர்க்கு அறிவுரை சொல்லுவதாக அமைந்திருக்கின்றது. பகட்டுக்கும் பெருமைக்கும் ஆளாகி மற்றவர்களை மதிக்காமல், இறைவனை நினைக்காமல் பல பணக்காரர்கள் வாழ்கின்றார்கள். இல்லாதவர்களை ஏளனம் செய்தும், ஏசி விரட்டியும் தம்மைத் தாமே பணக்காரர்கள் என்பதை நிரூபிக்க முயல்கின்றார்கள். அங்கவீனர்கள், நோயாளிகள், வறியவர்களுக்கு அவர்கள் தம் செல்வத்திலிருந்து கொடுத்து உதவி செய்தால் அது கொடுத்தவர்களின் மறுமை மோட்சத்துக்கு காரணமாகவும், உதவியைப் பெற்றவர்களுக்கு வாழ்வை சுபீட்சமாக்கும் வழியாகவும் இருக்கும். கீழுள்ள வரிகள் இதை நிதர்சனமாக்குகின்றன.

அங்கவீனர், உண்மை நோயாளி, வறியோர்
எங்கும் இனங்கண்டு உதவுதல் அத்தியவசியம்
பணம் உள்ளோர் சுகபோகம் விட்டொழித்து
குணம் காட்டி உதவிகளைப் புரிந்து நிற்பீரே

நேர்த்தியான வடிவமைப்பு, எழுத்துப் பிழைகள் இன்மை என்பன ஒரு நூலின் தரத்தை நிர்ணயிக்கின்றன. நூலாசிரியர் இந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்துவது அவரது எதிர்கால வெளியீடுகளுக்கு வலு சேர்க்கும். ஆன்மீகம், சமூகம் சார்ந்த கவிதைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கவிஞர் அத்தாஸின் இலக்கிய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகின்றேன்!!!

நூல் - உன்னத வாழ்வு
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - வெலிப்பன்னை அத்தாஸ்
வெளியீடு - மொடர்ன் ஸ்டடி சென்றர்
விலை - 250

No comments:

Post a Comment