Monday, February 26, 2018

119. உன் மொழியில் தழைக்கிறேன் - கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

உன் மொழியில் தழைக்கிறேன் -  கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

மருதமுனை ஹரீஷாவின் கன்னிக் கவிதைத் தொகுதியே ''உன் மொழியில் தழைக்கிறேன்'' என்ற கவிதைத் தொகுதியாகும். கல்முனை, தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனத்தின் இரண்டாவது வெளியீடாக 49 கவிதைகளை உள்ளடக்கி 64 பக்கங்களில் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கியதாக இந்த நூல் வெளிவந்துள்ளது. ஊடகவியலாளர், பத்திரிகையாளர் பி.எம்.எம்.ஏ. காதர் - எம்.எல். ஹவ்லத் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியும் ஊடகவியலாளர் சமீமின் மனைவியுமான இவர் தற்போது நூலகராகக் கடமையாற்றுகின்றார். இந்தப் பின்னணி இவரை ஒரு கவிதாயினியாக பரிணமிக்க வைக்காதிருந்தால்த்தான் அதிசயப்பட வேண்டியிருந்திருக்கும்.

1999 களில் தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தவர் மருதமுனை ஹரீஷா. கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள் என்று தேசியப் பத்திரிகைகள் பலவற்றிலும் தனது படைப்புக்களைத் தவளவிட்டவர். மட்டுமல்லாமல் சக்தி எப்.எம். மற்றும் பிறை எப்.எம். ஆகிய வானொலி அலைவரிசைகளினூடாகவும் தனது கவிதைகளை காற்றில் கலக்கச் செய்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ''தழைத்து வரும் பெண் மொழி'' என்ற தலைப்பில் இந்த நூல் பற்றிய தனது கருத்தை முன்வைத்துள்ளார். அவரது உரையில் ''மருதமுனை இலக்கிய மணம் கமழும் ஊர். கிழக்கின் மருத வாசலால்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வெளியே வருகிறது. புலவர் மணியின் பாரம்பரியத்தில் இருந்து இன்றைய இளம் கவிஞர்கள் வரை அது நீண்டு செல்கிறது. அந்த ஒற்றை முகம் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தது. ஹரீஷா எனும் பெண் மொழியாயும் இன்று தழைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

''மிக நெருக்கமான உறவின் இடைவெளி அதிகமாகிப் போக தொடர்ந்தும் அது நீளுமோ என்று அச்சமுற்றிருந்த பொழுதுகள்.. வாழ்வு எந்தவித சுவாரஸ்யங்களுமற்றது என்ற முடிவோடு கடத்த எத்தனித்த வாழ்வின் தொடக்க காலங்கள்.. இப்படி.. இப்படி.. வாழ்வின் சவால்களை முறியடிக்கத் தெரியாத அப்பாவித் தனமான குழந்தைத் தனமான எனக்குள்.. வாழ்வின் உச்சகட்ட சுவாரஸ்யங்களையும் ரசனைகளையும் பல பக்குவங்களையும் ஏற்படுத்தியது எனது குழந்தைகள்தான், அவர்கள் பேசிய மொழிதான். வீணி வழியும் அந்த வாயிலிருந்து வரும் மணத்தைப்போல அந்த மொழியும் எனக்குள் மணம் பரப்பியது. போனால் திரும்பி வர முடியாத அந்தக் குழந்தைப் பருவத்தையும், மொழியையும் ஏக்கங்களையும் அப்படியே அள்ளி எடுத்திருக்கின்றேன்'' என்று தன் கவிதை மொழி பற்றி மனந்திறக்கிறார் ஹரீஷா.

என் மனசு (பக்கம் 02) என்ற கவிதை மனசின் எல்லாவித செயற்பாடுகளையும் சொல்லி நிற்கின்றது. மனம் என்பது நிலையில்லாதது. சதாவும் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணமே இருக்கும். சோகமான சிந்தனைகள் அதிகரிக்கும்போது மனித மனம் விரக்தியடைகின்றது. இனிமையான சிந்தனைகள் ஏற்படும்போது பரவசமடைகின்றது.

எக்காளமிடும்.. எரிமலையாய் வெடிக்கும்.. கத்திக் கதறும்.. காகம் போல் கரையும்.. சேவல் போல் கூவும்.. கொக்கரிக்கும்.. கனைக்கும்.. ஓ.. வென்று அழும்.. அலறும் துடிக்கும்.. குதிரை போல கனைக்கும்.. பாய்ந்து ஓடும்.. பின் பறவை போல்.. சிறகு முளைத்துப் பறக்கும்.. வட்டமிடும்.. வாய் முளைக்கும்.. வார்த்தைகள் பேசும்.. வசனங்கள் எழுதும்.. வசீகரிக்கும்.. வசப்படாதவற்றுக்காய் ஏங்கும்.. இறுதியிலே சும்மா கிடக்கும்!

இந்தக் கவிதையை வாசிக்கும் போது நான் எனது ''தென்றலின் வேகம்'' என்ற கவிதை நூலில் எழுதியுள்ள ''கண்ணீர்க் காவியம்'' என்ற தலைப்பிலமைந்த கவிதை நினைவுக்கு வருகிறது. பொதுவாக கவிஞர்கள் மென்மையான மனது படைத்தவர்கள் அதனால்த்தான் என்னவோ மனது ரணப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இப்படியான கவிதைகளை எழுதி சற்று ஆறுதலடைய முடிகிறது. ஹரீஷாவின் ''என் மனது'' கவிதையும் எனது ''கண்ணீர்க் காவியம்'' என்ற கவிதையும் ஒரே மன அதிர்வுகளைக் கொண்டு வெவ்வேறு மொழி நடையில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளாகும் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

காணவில்லை (பக்கம் 05) என்ற கவிதை மீனவ வாழ்க்கையின் சோக நிலையை தத்ரூபமாக காண்பிக்கின்றது. மீன் பிடிக்கச் சென்ற கணவரின் வருகையை ஆவலோடும், தவிப்போடும் எதிர்பார்க்கும் மனைவியின் ஆதங்கம் நாட்டுப்புறப் பாடல் சாயலில் இங்கு கவிதைiயாக பரிணமிக்கின்றது.

எண்ணிரெண்டு நாளாக
என்னவரைக் காணவில்லை
கடலுக்கு மீன் பிடிக்க
வலையோடு போனவரு

வாடியில வீடு கட்டி
வசதியோடு வாழவேணும்
என்று சொல்லிச் சென்றவரு
இதுவரைக்கும் காணவில்லை

கால் கடுக்கக் காத்திருக்கேன்
கண்ணிரெண்டும் பூத்திருக்கேன்
கடுங் கவலையில தோய்ந்திருக்கேன்
கண்டவங்க சொல்லிடுங்க

அழகுக் குறிப்புகள் (பக்கம் 28) என்ற கவிதை செல்ல மகளின் குறும்புத் தனங்களை அடியொட்டி எழுதப்பட்டிருக்கின்றது. மழலைகள் பேசுவதைக் கேட்டிருப்பதும் சுகம்.. அவர்களின் செயல்களை ரசிப்பதும் ஒரு சுகமே. அடுக்கி வைத்த துணிகளை இழுத்துப் போடுவது, சுவர்களில் கிறுக்குவது, விழுவது, அழுவது, எழுவது என்ற அனைத்து செயற்பாடுகளிலும் ஒரு குட்டிக் கவிதை ஒளிந்திருக்கின்றது. நூலாசிரியர் தன் இரு மகள்மாரைப் பற்றி எழுதிய கவிதைகளே இந்நூலில் அதிகமாக விரவிக் கிடக்கின்றன. அந்தக் குழந்தைச் செல்வங்கள் செய்கின்றவற்றின் வசந்த வருடல்கள் பின்வரும் கவிதை வரிகளில் காணப்படுகின்றன.

உன் சுண்டல்
மிக ருசியாக இருக்கும்
அழகாய்ப் பூத்திருந்த
முற்றத்துப் பூச்செடியின்
பூக்களைப் பறித்துச் சுண்டி - நீ
சிரட்டையில் வைக்கும் போது

மிக நேர்த்தியாய்
அடுக்கி வைத்த
ஆடைகளையெல்லாம்
அலங்கோலப்படுத்தி வைக்கும் போது
தனி அழகு தரும்
உடுப்பு அலுமாரி

வீட்டின்
வண்ணப் பூச்சைவிட
அந்த வண்ணத்தின் மேல்
நீ வரையும் ஓவியம்
ஒரு காவியமாயிருக்கும்

புன்முறுவல் தொலைத்த முற்றம் (பக்கம் 42) என்ற கவிதை தாய் தந்தையின் அருமையை நன்கு உணர்த்துகின்றது. இருந்த இடத்தை விட்டு வேறொரு வாடகை வீட்டுக்குச் சென்றுவிட்ட தாயையும் தந்தையையும் எண்ணி எழுதப்பட்ட கவிதையாக இது காணப்படுகின்றது. தாயின் அன்புக்கும், தந்தையின் அரவணைப்புக்கும் ஈடாக உலகில் எதுவுமில்லை என்பதை கீழ்வரும் கவிதை வரிகள் உணர்த்தி நிற்கின்றன.

எட்டிக் கடந்து வரும்.. பின் கம்பி வேலி.. கரள் பிடித்துக் கிடக்கிறது.. கொடியில் கழுவிக் காயப்போடும் ஆடைகள்.. நனைந்து தொப்பாகிப் போகிறது.. ஒவ்வொரு பாட்ட மழையிலும்.. கறிக் கோப்பையோடு.. உம்மாவை அழைத்து அழைத்து.. தொண்டை கிழிந்து போனது.. உம்மா வரவே இல்லை.. உம்மா வளர்த்த பூனைதான் வந்தது.. வாப்பாவின் செருமல் தரும்.. தைரியம்.. முற்றாக விலகிப் போனது.. இப்போதெல்லாம்.. என் முற்றத்தின் புன்முறுவல்.. தொலைந்து கிடக்கிறது.. எனக்கு அருகிலிருந்த நீங்கள்.. மிகத் தொலைவில்.. வாடகை வீட்டுக்குச் சென்றதிலிருந்து..

அழகியல் கவிதைகளை இலக்கிய உலகத்துக்குப் பரிசளித்திருக்கும் நூலாசிரியர் மருதமுனை ஹரீஷாவின் படைப்புக்கள் இன்னுமின்னும் தொடராக வெளிவர வேண்டுமென வாழ்த்துகின்றேன்!!!

நூல் - உன் மொழியில் தழைக்கிறேன்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - மருதமுனை ஹரீஷா
தொலைபேசி - 0773008048
வெளியீடு - தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம், கல்முனை
விலை - 300 ரூபாய்

No comments:

Post a Comment