Sunday, May 4, 2025

154. 'தப்பிப் பிழைத்த எண்ணங்கள்' கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

 154. 'தப்பிப் பிழைத்த எண்ணங்கள்' கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை


நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கேகாலை மாவட்டத்தின் இறம்புக்கனையைச் சேர்ந்த ஹப்ஸா பஹுமீரின் 'தப்பிப் பிழைத்த எண்ணங்கள்' என்ற கன்னிக் கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது. தனது பெற்றோர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த நூலானது, 107  பக்கங்களில் எளிமையான நூறு தலைப்புக்களில் அமைந்த சிறியதும் பெரியதுமான கவிதைகளை உள்ளடக்கியுள்ளது.

பாடசாலையில் விஞ்ஞானப் பாடம் கற்பிக்கும் ஆசிரியரான இவர், இந்தக் கவிதை நூலில் தனது வாழ்வியல் மற்றும் உலகியல் அனுபவங்கள் போன்றவற்றை மையமாகக்கொண்ட கருப்பொருட்களை வைத்தே நூறு தலைப்புக்களில் அமைந்த தனது கவிதைகளை கவிஞர் யாத்துள்ளார். 


இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள உயிரியல் ஆசிரியர், அமீன் பவாஸ் அவர்கள்  'சமகாலத்தில் தன் திறமைகளை நான்கு சுவர்களுக்குள் மறைக்காமல் துணிவு கொண்டு, பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரமாய், பாசறையில் தன் பா வண்ணத்தால் பிரகாசிக்கும் பாமா தேவி ஹப்ஸா பஹுமீரின் இந்தக் கன்னி முயற்சியைக் கண்டு மெய் சிலிர்க்கின்றேன். வாழ்வியல் அனுபவங்களில் தப்பிப் பிழைத்த எண்ணங்கள் அவ்வப்போது மகிழ்ந்த தருணங்களில் இதழோரம் பூத்துக் குலுங்கிடும் சிறு புன்னகையில் மனதையே நிறைத்து வாழ்வின் அந்தத்தை உணர வைக்கும் நினைவுகள் பல இங்கே எழுத்துக்களாக்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிதை என்பது யாதெனில் உள்ளத்தின் பிரதிபலிப்பாகும். உள்ளத்தில் பிரதிபலிப்பதையெல்லாம் எல்லோராலும் திறம்பட வெளிப்படுத்திட இயலுமா என்றால் நிச்சயம் முடியாது. கவிஞன் எனும் ஆளுமைக்கு உட்பட்டவனே தன் உள்ளத்தில் இருப்பதை எல்லாம், தன் உள்ளத்தில் நினைப்பதை எல்லாம் சொற்களாக்கி, வரிகளாக்கி, கவிகளாக்கி உயர்ந்து நிற்கின்றான். தன் உள்ளத்து உணர்வுகளை மட்டுமின்றி உலகையும் உள்வாங்கி தன் சீரியச் சிந்தனைகளால் அதனைக் கவிகளாக்கிக் கவிஞன் என்று மார்தட்டிப் பேருவகைகொள்கின்றான். அப்பேற்பட்ட பேருக்கும் புகழுக்கும் உரிய கவிஞன் என்னும் அடைமொழிக்குள் உட்பட்ட கவிஞர் ஹப்ஸா பஹுமீருக்கு தனது வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளார் தமிழ்நாட்டுக் கவிஞர் என். ஜாகிர் உஷேன் அவர்கள். நூலாசிரியர் பற்றிய சுருக்கமான பின்னட்டைக் குறிப்பை பிரான்ஸில் வசிக்கும் தமிழ் நெஞ்சம் சஞ்சிகையாசிரியர் அமீன் எழுதியுள்ளார்.

விஞ்ஞானப் பாட ஆசிரியராக இவர் இருந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றே  இவரைக் கவிதை புனைய வைத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம். கவிதையோடு மாத்திரம் இவர் நின்றுவிடாமல் சிறுகதை, கட்டுரை, பெண் ஆளுமை அறிமுகங்கள், சுயசரிதை, சிந்தனைக் கருத்துக்கள் போன்ற பல இலக்கிய வடிவங்களிலும் இவருடைய எழுத்துக்கள் பரவி நிற்கின்றன. பல தடைகளை உடைத்தும், பல தடைகளைத் தாண்டியும், பல்வேறு வகையான நிலைகளில் போராடியும் தன்னை ஒரு பெண் கவிஞராக முத்திரை குத்தி இலக்கிய வானில் உலா வருபவரை நாமும் பாராட்டியாக வேண்டும்.

இனி நூலாசிரியரின் பல்வேறு தலைப்புக்களில் அமைந்த கவிதைகளில் சில கவிதைகளை இங்கு இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

'இயற்கை அன்னை' (பக்கம் 23) என்ற கவிதையை வாசிக்கும் போது கோடையிலே திடீரென மழை வரும் போது எத்தனை மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோலவே மிகவும் இனிமையாக இருக்கின்றது. மழையை இயற்கை அன்னையின் செல்லக் கோபமாக பார்க்கும் கவிஞரின் கற்பனை அலாதியானது. அந்தக் கோபத்தை தணிக்க இலேசாக நனைவதாக கவிஞர் கூறியிருக்கும் பாங்கு மிகவும் இரசிக்கத்தக்கது. கீழுள்ள கவிதை வரிகள் இதனை நிதர்சனமாக்குகின்றன.


விண்ணில் வெள்ளை நிற ஒளி வீச

பஞ்சு மேகம் உலா வர 

வானமே அமைதிப் பூங்காவாக ஜொலித்தது..

விநாடிகள் விந்தையாகக் கடக்க 

நொடிப் பொழுதில் அமைதிப் பூங்கா

ஆக்ரோஷமாய் ஆடியது ஆகாயத்தில்!


காரிருள் சூழ பஞ்சு மேகம் பஞ்சாய் பறக்க

விண்ணைப் பிளந்து எமனின் வருகை

மின்னலாய் மின்ன சிரிப்பொலியும்

இடியாய் காலடி சத்தமும்

கணீர் கணீர் என ஒலிக்க 

மழையும் சோவெனப் பொழிந்தது!


நானோ வீட்டிற்குள் பூட்டப்பட்ட

ஒரு சிறகொடிந்த கிளியாய் ரசிக்கிறேன்

இயற்கை அன்னையின் கள்ளங்கபடமற்ற

செல்லக் கோபத்தை!


கொரோனா என்ற வார்த்தை இப்போதும் அடிநெஞ்சில் ஒரு வகையான கலக்கத்தை ஏற்படுத்தி நிற்கின்றது. அது தந்துவிட்டுப் போன காயங்கள் ஏராளம். மனிதகுலம் சந்தித்த பெரும் நோய்களில் உலகமே மிகவும் பயந்து அச்சமுற்ற ஒரு நோயாக கொரோனாவும் திகழ்கின்றது. முகக் கவசங்களும், தனிமைப்படுத்தலும், சைரன் ஒலியும், பிரேக்கிங் நியூஸ்களும் ஒரு வகையான பீதியை மக்கள் மனதில் உருவாக்கியிருந்த காலமது. அந்தப் பீதிக் காலத்தை நினைவுபடுத்துவதாக 'கொரோனா எனும் கொடுங்கோலன்' (பக்கம் 28) என்ற கவிதையின் பின்வரும் வரிகள் அமைந்துள்ளது.


ஒற்றைக் குடைக்குள் ஆண்ட அரசன்

அகிலம் எங்கும் தூற்றப்படக் கூடியவன்

அரசனின் பெயரைக் கேட்டாலே

ஆடிப்போகும் மாந்தர் கூட்டம்


வயது எல்லையின்றி தன் 

வசப்படுத்திக் கொண்டவன்..

வயது வந்த வயோதிபரையும்

கொஞ்சலுக்குரிய சிசுவையும்

காவுகொண்டவன்..

இளைஞர்கள் மாத்திரம்

விதி விலக்கோ?


'தியாகம்' (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த கவிதை தாய், தந்தை தன் பிள்ளைகளுக்காக செய்கின்ற தியாகங்களைப்பற்றி ஆழமாகச் சொல்லி நிற்கின்றது. தன்னையே உருக்கி தன் குழந்தைகளின் நலனுக்காக தாய் செய்கின்ற தியாகங்கள் காலம் காலமாக நாம் அறிந்ததே. அதேபோல குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகும் வரை ஒரு தந்தை மேற்கொள்ளும் தியாகம் பற்றியும் கவிஞர் தன் கவிதையில் மறவாமல் நினைவுபடுத்திக் குறிப்பிட்டுள்ளமை மிகச் சிறப்பு. கீழுள்ள கவிதையின் வரிகள் அதனை சிறப்பாக எடுத்தியம்புகின்றன.


நம் பிறப்பிற்குரிய தியாகி

நம்மை பத்து மாதம் கருவறையில் சுமந்தவள்

நமக்காய் அவளின் உறக்கத்தை விழுங்கியவள்

பசி தாகத்தை மறந்தவள்

தன் நேச உயிரை நினைத்து தினமும் உருகியவள்

தன் பாலை உதிரமாக்கி ஊட்டியவள்

அவளின் தியாகத்திற்கு ஈடு இணை ஏது!


தலையாய தியாகன் நம் வாழ்வில்

மண்ணில் உதிக்கும் வரை

தியாகியுடன் கருவறையும் சேர்த்து சுமந்தவன்

பட்சிகள் இரை தேட கூட்டை

விட்டுப் போக முன்பே

தன் உயிர் நேசங்களுக்காக தன் வீட்டை துறந்தவன்

இரா பகல் பாராது தன்னை வருத்தி உழைத்தவன்!


ஒரு விடயத்தின் மீது அதிகமாக ஈடுபாடு கொள்வதே போதை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின் மீது போதை கொள்கின்றார்கள். இன்று பெரும்பாலானவர்கள் கைத்தொலைபேசி மீது போதை கொண்டிருக்கிறார்கள். கைப்பேசி இல்லாமல் ஒரு நிமிடத்தையேனும் கழிக்க முடியாத ஒரு சூ(சு)ழலுக்குள் நாம் அனைவரும் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். சமூக வலைத்தளங்கள் தொட்டு அன்றாட செயற்பாடுகளின் போதும் கைப்பேசியே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பல வேளைகளில் ஒரு வழித்துணையாகவும் கைப்பேசி செயற்படுகின்றது. அளவுக்கு மீறிய வகையில் கைத்தொலைபேசி மீது மோகம் கொள்ளாமல் தமது குடும்பத்துக்காகவும் நேர காலத்தை செலவழிக்க வேண்டும் என்ற கருத்தையே 'போதை' (பக்கம் 97) என்ற கவிதை அருமையாகக் கூறி நிற்கின்றது.

இக்கவிதாயினியின் கவிப் பயணம் தொடரவும் மேலும் பல காத்திரமான தொகுதிகளை வெளியிடவும் பிரார்த்திப்பதுடன், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.


நூல் - தப்பிப் பிழைத்த எண்ணங்கள்

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - ஹப்ஸா பஹுமீர்

வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ. வெளியீட்டகம்

விலை - 500 ரூபாய்



நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment