கா.சி. தமிழ்க்குமரனின் 'ஊமைத் துயரம்' சிறுகதைகள் நூல் கண்ணோட்டம்
நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.
இந்த நூலை தனது அன்பிற்கினிய அப்பா அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்து ஆரம்பித்துள்ளார் கா.சி. தமிழ்க்குமரன். ஊமைத் துயரம் என்ற இந்த சிறுகதை நூலானது கரிசல் காட்டின் இன்றைய கோலத்தைப் படம் பிடித்துக் காட்டும் வகையான கதைகளையும் உள்ளடக்கியே வெளிவந்துள்ளது. பெரும்பாலும் தண்ணீர் இல்லாத கரிசல் காட்டில் விவசாயம் செய்து பிழைத்து வாழும் மக்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் வகையிலான சில கதைகள் இந்த நூலில் இடம்பிடித்துள்ளன. மொத்தத்தில் கரிசல்காட்டு விவசாயிகளின் மனங்களை வெளிப்படுத்தும் முறையிலேயே இக்கதைகள் பின்னப்பட்டுள்ளன. நூலாசிரியரின் 16 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளடக்கம் பெற்றுள்ளன.
கா.சி. தமிழ்க்குமரன் அவர்கள் தாய் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக பல சிறுகதைத் தொகுதிகளையும் ஒரு நாவலையும் வெளியிட்டு இலக்கிய உலகிற்கு வலுச் சேர்த்துள்ளார். இவர் கதை சொல்லும் கலையில் நன்கு தேர்ந்தவர் என்பதை இவரது கதைகள் உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
சிவகாசியைச் சேர்ந்த சா. தமிழ்ச்செல்வன் அவர்கள் கா.சி. தமிழ்க்குமரனின் சிறுகதைகள் குறித்து குறிப்பிடும் பொழுது, 'முதல் தொகுப்பின் அவருடைய எழுத்திலிருந்து இந்தக் கதைகள் ஒரு பாய்ச்சல் வேக முன்னேற்றம் கண்டுள்ளன. கதை சொல்லும் முறையிலும் மொழியிலும் வரவேற்க வேண்டிய முன்னேற்றம். வண்ணதாசன் கதைகளில் வருவது போல சின்னச் சின்ன அசைவுகள் நிகழ்வுகளையும் இக்கதைகளில் நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கின்றார்' என்று சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்.
இளைஞர்கள் கிராமங்களை விட்டு வெளியேறி வேறு பல வேலைகளுக்குப் போய்விட்ட நிலையில் விவசாயம் இன்று படிக்காத இளைஞர்கள் மற்றும் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் பிரச்சினை என்றாகிவிட்ட உண்மையை இவருடைய இக்கதைகள் வலியுறுத்தி நிற்கின்றன.
பேராசிரியர் முனைவர் த. கண்ணா கருப்பையா அவர்களின் பின்வரும் குறிப்பு இங்கு நோக்கத்தக்கது. 'கா.சி. தமிழ்க்குமரனின் ஊமைத் துயரம் என்ற சிறுகதைத் தொகுப்பானது 16 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதியாக அமைந்திருந்தாலும் அப்புனைவுகளின் தளம் என்பது கிராமத்து மண்ணியலின் மீதாகவே பயணித்துள்ளது. மேலதிகமாகவே மண்ணியல் சார்ந்த சூழலையும் மனிதர்களையும் குறிப்பாக முதியோர்களின் பாடுகளையும் அழுத்தமாகவே பதிவிட்டுள்ளார். முதுமையின் பாடுகளை எடுத்துக்காட்டும் பொழுது அவர்களுக்கான சமூக இடர்பாடுகளோடு அம்முதிய மனித உணர்வுகளின் பரிமாணங்களையும் பதிவிட்டிருப்பது சிறுகதையாளரின் கிராமிய ஈர்ப்பையும் கரிசனத்தையும் புரிந்துணர முடிகின்றது'
பொலி (பக்கம் 15) என்ற தலைப்பில் அமைந்த முதலாவது கதை மிகவும் அருமையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கதாசிரியர் என்பதற்கு அப்பால் விவசாயத்தை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி அட்டகாசமாக கதையைத் தொடங்க முடியும். வாசகரின் இரசனைக்காக இங்கே கதையின் தொடக்கப் பந்தியினை அப்படியே தருகின்றேன்.
'கணபதி தெக்காட்டைப் பாத்துப் பாத்துப் பூரித்துப் போனான். என்ன போட்டாலும் வெளயும் பூந்துரைக் கரிசல். நச்சதுரமாய் நாலேக்கர். ரெண்டேக்கர் வீரியக் கம்பும் ரெண்டேக்கர் மக்காச் சோளப் பயிரும் சும்மா கன்னங்கரேர் என்று இருந்தது. எந்தக் காட்டுக்கு வேலைக்குப் போனாலும் வேலை முடிஞ்ச பிறகு பொழுது அடையும் நேரமாயிட்டாலும்கூட தெக்காட்டைப் பார்க்காமல் வீடு திரும்ப மாட்டான். வெதச்சு முடிச்சதில் இருந்து தெக்காட்டுமேல அப்படி ஒரு நம்பிக்கை. தன் வாழ்வில் வளம் சேர்க்க வரும் தனலட்சுமி இந்தக் காட்டில் தங்கியிருந்து வீடு வரப் போவதாய் ஒரு நம்பிக்கை. அவன் நெனப்பு மாதிரியே மத்த எல்லார் காட்டைக் காட்டிலும் ஒரு படி எச்சாய் இருந்தது தெக்காடு..'
இந்தக் கதையில் வரும் கணபதிக்கு தெக்காட்டுமேல் அப்படி ஒரு பிடிப்பு. அதனால்தான் தினமும் போய்த் தெக்காட்டைப் பார்த்து வருவான். ஆனால் அவனது வீட்டுக்காரிக்கோ கணபதி தெக்காட்டைத் தினமும் போய்ப் பார்ப்பதில் சற்று எரிச்சலாக இருந்தது. அதனால்தான் அவள்,
'தெனமும் போயி பாக்க நஞ்சையா கெட்டுப் போச்சு..? ஏன் நாலு நாளைக்கு ஒருக்கா போயி பாத்தா ஆகாதா? என்ற கேள்விக்கணையால் கணபதியைத் துளைத்தெடுத்தாள்.
இப்படி கதையில் வரும் கிராமிய மனம் கமழும் விவசாயச் சொல்லாடல்கள் மிகவும் அருமையாக வெளிப்பட்டு நிற்கின்றது. இந்தச் சொல்லாடல்களுக்காகவே கதையை மிகவும் ஆர்வமாய் வாசிக்கத் தோன்றுகின்றது.
'வேகமாய் வீசிய காற்றில் பயிர்கள் தரையை முத்தமிட்டு எழுந்து நின்று கண் சிமிட்டின. அவற்றைப் பிடித்து தொட்டு வருடிக் கொடுக்க வேண்டும்போல் ஆசைப்பட்டது மனசு வழக்கம் போல்' என்று இவருடைய கதையில் சொல்லப்படுவது போல வாசகராகிய எங்களுக்கும் பயிர்ச்செய்கை மேல் ஒரு வகையான பிடிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைகின்றது.
பொலி கதையின் இறுதிப் பகுதியில் மழை பொய்த்துப் போன பொழுது ஒன்றில் மிகவும் கவலையோடு இருந்த கணபதி தனது கோபத்தை அவனது மனைவிக்கு காட்டிவிட்டான். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய அரசாங்கம், கணபதியின் ஊர் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமையவில்லை என்ற காரணத்தைக்கூறி நிவாரணம் வழங்க முன் வரவில்லை என்ற விடயம் வாசகராகிய எம் மனதையும் கனக்கச் செய்கின்றது.
'கவலைய விடுய்யா கவுருமெண்டு துட்டு குடுக்குமுன்னா நாம வெதச்சோம். இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம் வெளஞ்சுட்டு போகுது. இதுக்குப் போயி மூஞ்சிய தொங்கப் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கே' என்ற மனைவியின் நம்பிக்கை வார்த்தையால் கணபதி ஆறுதலடைவதாய் கதை நிறைவடைகிறது.
கரிசக்காட்டு நிலத்தில் பயிர் செய்கின்ற ஒரு சாதாரண விவசாயி எதிர்கொள்ளும் துன்ப, துயரங்கள், கஷ்டங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை 'பொலி' என்ற இக்கதையில் மிகவும் சிறப்பாக முன்வைக்கப்பட்டுள்ளன.
பக்கம் 33 இல் அமைந்துள்ள 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்ற சிறுகதை மனதை கணக்கச் செய்கின்ற ஒரு கதையாகும். இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று மூன்று குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்தாலும் லட்சுமிப் பாட்டி, தனது வயதான காலத்தில் கிராமத்திலுள்ள பழைய நீளமான கல் வீட்டில் தனியாக வாழ்வது மனதுக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது.
தொழிலுக்காக கனடா நாட்டுக்குச் சென்ற மூத்த மகன் வெள்ளைக்காரியான வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்தான். இளைய மகனும் ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து காஷ்மீரிலேயே தஞ்சமடைந்தான். லட்சுமிப் பாட்டியின் கடைக்குட்டியான அருமை மகளும் திருமணமுடித்து பெங்களூரிலேயே வசித்து வந்தாள்.
கடைசிப் பிள்ளைகள் இருவரும் அண்ணன் கனடாவிலிருந்து விடுமுறையில் வரும் நாளைப் பார்த்தே ஒரு மாத விடுமுறையில் தாயைப் பார்ப்பதற்காக வீடு வந்து சேர்வார்கள். மூத்தவனுக்கு குகன், லயா ஆகிய இரண்டு பிள்ளைகள், இளையவனுக்கு சூர்யா என்ற ஒரு மகன், கடைக்குட்டி மகளுக்கு மேகலை என்ற ஒரு மகள். இந்த மூன்று குடும்பமும் பிள்ளை குட்டிகளோடு வீடு வந்திறங்கியதும் ஊரே அடங்கிப் போகும்.
இந்தக் கதையில் சொல்லப்படுவது போல விடுமுறையில் வந்த பிள்ளைகளின் செல்வங்களான குகன், சூர்யா ஆகிய பேரப் பிள்ளைகள் லட்சுமிப் பாட்டியின் வீட்டில் முன் கட்டுக்கும் பின் கட்டுக்குமாய் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை நினைத்துப் பார்க்கும்போது எனது மனதும் சந்தோசத்தில் குதூகலிக்கின்றது.
லட்சுமிப் பாட்டியின் மூத்தவனுக்கு குகனும் லயாவும். லயா பிறந்த போது, 'அம்மா உங்களைப் போலவே உங்க பேத்தி இருக்காம்மா..' என்று மூத்தவன் சொன்னபோது லட்சுமிப் பாட்டிக்கு கண்ணில் நீர் தழும்பியது. மூத்தவன் அம்மாவின் லட்சுமி என்ற பெயரில் உள்ள 'ல' என்ற முதல் எழுத்தைத் தேர்ந்தெடுத்தே 'லயா' என்று தனது மகளுக்குப் பெயர் வைத்துள்ளான் என்பதை மிகவும் பெருமையாக சொல்லிக்கொள்வான்.
'என்ன பெரியாத்தா.. பேரப்பிள்ளைக வந்திருக்காப் போல இருக்கு..'
லட்சுமிப் பாட்டிக்கு முகம் கொள்ளாச் சிரிப்பு. கிடைத்தற்கரிய பேறு பெற்றார்போல் அவ்வளவு ஆனந்தம். மனசெல்லாம் பூரித்துப் போய்,
'ஆமாத்தா நேத்துத்தான் வந்தாக.. ஒண்ணுக்குள்ள ஒண்ணு ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்குறாகல்ல. அதான் துள்ளித் திரியுறாக..'
கேட்டவள் உடனிருந்தவளிடம், 'அந்தப் பிள்ளைகளைக் காட்டிலும் இந்தக் கெழவியப் பாரேன்.. ஆனந்தத்துல பூரிச்சுப்போய்க் கெடக்குது.. மொகத்தப்பாரு அம்புட்டுச் செவந்து போய்க்கெடக்கு..'
'பின்ன இவ்வளவு காலமா இதே பேச்சுத்தானே.. வருசம் ஒருக்கா வந்துட்டுப் போறதுக.. இருக்கத்தானே செய்யும்..'
மேற்படி உரையாடலின் மூலம் லட்சுமிப் பாட்டியின் மனது நிறைந்த சந்தோஷம் எமக்கும் புலப்படுகின்றது.
தான் பெற்ற பிள்ளைகளுடனும், தனது பேரப் பிள்ளைகளுடனும் ஒரு மாதம் எப்படித்தான் வேகமாகக் கழிந்தது என்று லட்சுமிப் பாட்டிக்குப் புரியவில்லை. விடுமுறையின் கடைசி நாட்களில் மூத்தவன் மெதுவாக அம்மாவிடம் கேட்டான், 'இனிமேல் நீங்க தங்கச்சிகூட இருந்தா நல்லதுன்னு நாங்களெல்லாம் நெனக்குறோம். நீங்க என்ன சொல்றீங்கம்மா..?'
கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் பேரக் குழந்தைகளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டபின், 'இல்லப்பா நான் இங்கே இருக்கேன்..'
'ஏம்மா..?' மீண்டும் பிள்ளைகள் கேட்க,
தனது கணவன் தன்னை விட்டுப் போய் பத்து வருசத்துக்கு மேலாகிக் காலம் கடந்தாலும் அந்த நினைவுகளுடன் மனம் பதைபதைக்க ஏக்கமாய், 'உங்க அப்பா இருந்த இடம்.. அவரு நடந்த மண்.. அவரோட மூச்சுக் காத்து, அவரோட பேச்சு எல்லாம் சுத்திகிட்டே இருக்கிற இடம்.. இதை விட்டுட்டு நான் எப்படிப்பா வர முடியும்..?' என்ற லட்சுமிப் பாட்டியின் எதிர்க் கேள்வியால் நானும் ஆடிப் போய்விட்டேன்.
இந்த விடுமுறையும் கடந்து பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் போய்விட்டார்கள். அடுத்த விடுமுறை எப்போ வரும் என்று தன் குழந்தைகளுக்காகவும் பேரக் குழந்தைகளுக்காகவும் காத்துக் கிடக்கும் அம்மாக்களின் துயரம் மிகவும் கொடுமையானது. இந்தக் கதை மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி எனது கண்களைக் கலங்கச் செய்த கதையாகும். கதாசிரியருக்குப் பாராட்டுக்கள்.
பக்கம் 65 இல் அமைந்துள்ள 'வெடி' என்ற சிறுகதையில் தீபாவளி தினத்தன்று தன்னை ஒத்த அதே வயதுச் சிறுவர்களுக்கு மத்தியில் 'யானை வெடி' வெடிக்க ஆசைப்படும் சிறுவன் ராமுவின் அப்பாவித் தனமான மனம் வெளிப்பட்டு நிற்கின்றது. இந்தக் கதையில் வரும் ராமுவும் எல்லாச் சிறுவர்களையும் போலவே அழுதழுது, கண்ணீர் வடித்து காரியங்களைச் சாதிக்கும் கலையை நன்கு தெரிந்து வைத்துள்ளான். சிறுவர்களின் மனதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகின்ற அருமையானதொரு சிறுகதையாகவே இந்தக் கதை அமைந்துள்ளது.
பக்கம் 73 இல் அமைந்துள்ள 'அன்பிற்கும் உண்டோ...' என்ற கதையானது தனது மனைவியை இழந்து தவிக்கும் தாத்தா சுப்பையாவுக்கு தனது மகன் மூலமாகக் கிடைத்த பேத்தி சந்திராவே மிகவும் ஆறுதலாக அமைந்து, அவருடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினாள். தனிமரமான சுப்பையாவின் மனதை, காலஞ்சென்ற அவருடைய மனைவியின் நினைவுகள் ஆக்கிரமித்து இருந்தாலும் பேத்தி சந்திராவே தனக்கு ஆறுதலாகவும் ஒத்தடமாகவும் இருப்பதாக நினைத்து மனம் நிறைந்து போனார். இப்படி இருப்பவரிடம்,
'அப்பா சந்திராவை டவுனில் உள்ள பெரிய ஸ்கூல்ல ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வைக்கலாமுன்னு முடிவு செஞ்சிருக்கோம்' என்று மகன் சொன்னதும் ஆடிப் போனார் சுப்பையா. உலகமே தன் காலைவிட்டு நகருவது போல் மிகவும் துடித்துப் போனார்.
'ஏம்ப்பா இங்கதான் எட்டு வரைக்கும் இருக்கே..'
'இல்லப்பா.. இப்ப போட்டி உலகமாயிடுச்சு. எல்லா இடத்திலேயும் மார்க்குதான் பேசுது. அதுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரணுமில்லையா. அந்த ஸ்கூல்ல வருசத்துக்கு பத்து பேருக்கு மேல மெடிக்கலுக்கும் முப்பது பேருக்கு மேல என்ஜினியரிங்குக்கும் போறாங்க. சீட் கிடைக்கிறதே கஷ்டம். எப்படியோ ஆள் பிடித்து சீட்டை உறுதிப்படுத்திட்டேன்..' என்று மகன் முடிவில் உறுதியாய் இருந்தான்.
இருந்தாலும் பிறகு அப்பாவுக்கு இந்த வயசான காலத்துல இருக்கிற மகிழ்ச்சி, தெம்பு, தைரியம் எல்லாம் சந்திராதான், படிப்புங்கிற பெயரால இருவரையும் பிரிச்சோமுன்னா அப்பா நிம்மதியை இழந்திடுவார் என்பதை நன்கு உணர்ந்த மகன், சந்திராவின் படிப்பும் கெடாமலிருக்கவும் அப்பாவைவிட்டு சந்திரா பிரியாமலிருக்கவும் நன்கு சிந்தித்ததால் எல்லோருக்கும் சேர்த்து, 'டவுனில் வாடகைக்கு வீடு பார்த்துட்டேன்' என்று கூறுவது கதையை வாசிக்கின்ற எங்களுக்கும் பெரிய ஆறுதலைத் தருகின்றது.
பக்கம் 129 இல் உள்ள கடைசிக் கதை 'பெத்த மனம்' மிகவும் அருமையானதொரு கதையாகும். வயதான காலத்தில் தன்னைப் பெற்றவர்களை தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு தகுந்த பதிலடி கிடைக்கத்தக்கதான ஒரு முடிவை கதாசிரியர் முன்வைத்திருப்பது சிறப்பாகும். தன்னைப் பெற்று, ஆளாக்கி, பல சிரமங்களுக்கு மத்தியிலும் பிள்ளைகளுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த பெற்றோர்களை, பிள்ளைகள் அவர்களுடைய வயதான காலத்தில் அக்கறை காட்டிக் கவனிப்பதில்லை. அதிலும் அவர்களுடைய சொத்துக்களை பிள்ளைகளின் பெயரில் உயில் எழுதிக் கொடுத்துவிட்டால் இப்போதைய காலங்களில் பரவலான இடங்களில் பிள்ளைகள் பெற்றோரை கைவிட்டு விடுகின்றனர். அப்படியான பிள்ளைகளுக்கு மேற்படி 'பெத்த மனம்' என்ற சிறுகதை ஒரு சாட்டை அடியாக அமைந்துள்ளது.
பொலி, தெக்காடு, கெடை போடுதல், கருசக்காடு, கொங்காணி போன்ற விவசாயக் கலைச் சொற்கள் உட்பட சொதை, ஊவாங்கொட்டுக்காரர், ஷாமியானாப் பந்தல், கித்தாப்பு, கொதக்கு போன்ற சொற்கள் எனக்கு அவ்வளவு பரிச்சயமாக இருக்கவில்லை. இந்த நூலை வாசிப்பதன் மூலமே நான் இவ்வாறான சொற்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
பல்வேறு வகையான கோணங்களில் நோக்கி பதினாறு சிறுகதைகளையும் எழுதி, 'ஊமைத் துயரம்' என்ற பெயரில் அவற்றைத் தொகுத்து சிறுகதை வாசகர்களுக்கு வழங்கி விருந்து படைத்துள்ளார் நூலாசிரியர் கா.சி. தமிழ்க்குமரன் அவர்கள். இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களோடு அவரது இலக்கியப் பயணம் சிறப்பாகத் தொடரப் பிரார்த்தித்து, கா.சி. தமிழ்க்குமரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நூல்:- ஊமைத் துயரம்
நூல் வகை:- சிறுகதை
நூலாசிரியர்:- கா.சி. தமிழ்க்குமரன்
வெளியீடு:- கதவு பதிப்பகம்
விலை:- 140 (இந்திய ரூபாய்)
நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.
No comments:
Post a Comment