மாவனல்லை பாத்திமா சில்மியாவின்
'இப்படிக்கு என் இதயம்' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்
நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
பக்கம் 29 இல் அமைந்துள்ள 'வெள்ளைச் சீருடை நாட்கள்' என்ற கவிதை பாடசாலைக் காலத்து நினைவுகளை மீட்டி மனதில் சந்தோஷத்தை நிறைக்கின்றது. எவ்வளவு காலம் கடந்து போனாலும் பாடசாலைக் காலத்தை நினைக்கும் போது மனதில் ஒரு புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்பட்டு மனது சந்தோசத்தால் நிரம்பி வழியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உங்களின் இரசனைக்காக இந்தக் கவிதையின் வரிகள் இதோ:-
மீட்டிப் பார்க்கிறேன்
என் மனக் கண்ணில்
வெள்ளைச் சீருடையில்
சுற்றித் திரிந்த - அந்தப்
பொக்கிஷமான காலத்தை!
அன்பான பரிமாறல்கள்
செல்லச் சண்டைகள்
குறும்பு சேட்டைகள்
முடியக் காத்திருக்கும்
பாடவேளைகள்
பாசம் நிறைந்த கண்டிப்புகள்!
புத்தகப்பை மட்டுமே
சுமையாகத் தெரிந்த
அழகிய நாட்கள்
வராதோ மீண்டும்
நம் வாழ்வில்!
தன்னைப் பெற்ற தாய்க்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த நூலில் தாய் பற்றிய 'அன்புள்ள அம்மாவுக்கு' (பக்கம் 32), 'கர்ப்பம் முதல் கல்லறை வரை' (பக்கம் 49) ஆகிய இரண்டு கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் பக்கம் 32 இல் அமைந்துள்ள 'அன்புள்ள அம்மாவுக்கு' என்ற கவிதை பெற்ற தாயின் தியாகத்தை இயம்புவதாய் அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அன்பிற்கும் ஆதாரமாகத் திகழ்வது தாயின் அன்பாகும். தாயன்பிற்கு ஈடு இணை இல்லை. எத்தனை பெரியவர்களாக வளர்ந்த போதும் ஒரு தாய்க்கு தன் பிள்ளை குழந்தை போன்றே தோன்றும். தாய் பற்றிய தனது உள்ளத்து உணர்வை இக்கவிதையின் பின்வரும் வரிகளில் பிரதிபலிக்கிறார் நூலாசிரியர்.
ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து
என் சிரிப்பிலே மனம் மகிழ்ந்து
பசி தாகம் துறந்து களைப்பும் மறந்து
எனக்கெனவே அர்ப்பணித்த
என் அன்பின் அன்னையே!
என் செய்வேன் - உனக்கான
கடன் அடைத்திட நான்
ஈடாகுமோ உன் சேவைக்கு
அவனியிலே ஏதும்!
இந்த உலகத்தில் எல்லோரும் இன்னொருவரை சார்ந்தே வாழ வேண்டி இருக்கிறது. நாம் அன்றாடம் காணும் ஒவ்வொன்றும் நமக்கு ஒரு புதிய பாடத்தை நிகழ்த்துகிறது. ஒவ்வொரு ஜீவராசியிடம் இருந்தும் ஒரு புதிய விடயத்தை நாம் தினமும் கற்றுக் கொள்ளும் படியே இயற்கை அமைந்திருக்கிறது. ஆம் அன்றாடம் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயங்களில் இருந்தும் ஒவ்வொரு சம்பவங்களிலிருந்தும் சில பாடங்களைக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கையை நாம் சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும். கவிஞர் 'கற்றுக்கொள்' (பக்கம் 33) என்ற தன் கவிதையில் கூறும் விடயங்கள் எமக்கும் நெருக்கமான விடயங்களாகவே அமைந்துள்ளன. கவிஞர், தனது அனுபவத்தில் தான் கண் கூடாகக் கண்டவற்றை பின்வரும் வரிகளினூடாக ஆழமாகப் பதிவு செய்கின்றார்.
பொறுமையைக் கற்றுக்கொள்
எல்லா சுமைகளையும் தாங்கிடும் பூமியிடம்
விடாமுயற்சியைக் கற்றுக்கொள்
ஓயாது அலை வீசும் கடலிடம்!
சுறுசுறுப்பைக் கற்றுக்கொள்
ஓய்வில்லாமல் இயங்கும் தேனீக்களிடம்
நம்பிக்கையை கற்றுக்கொள்
பசியுடன் சென்று
இறையுடன் கூடு திரும்பும் பட்சிகளிடம்!
அவதானத்தைக் கற்றுக்கொள்
தொலைதூரத்திலிருக்கும் இரையை
இலக்கு வைக்கும் பருந்திடம்!
பக்கம் 35 இல் உள்ள 'வா - சிக்கலாம்' என்ற கவிதையின் மூலம், வாசிப்பு மழுங்கிப் போன இக்காலத்தில் இணையத்தில் மணிக் கணக்கில் மூழ்கி நேரத்தைக் கழித்துவிடும் மனோபாவம் கொண்ட இளைய தலைமுறையினருக்கு சிந்தித்துப் பார்ப்பதற்கு முக்கியமான, மிகவும் அருமையான கருத்தை முன்வைக்கிறார் கவிஞர். வாசிப்பு என்பது இன்று செயல் வடிவம் அற்றதாக ஆகிவிட்டது. நூல் ஒன்றை பிரித்து வாசிக்கும் அந்த சுகானுபவம் இன்றைய இளையோர்களுக்கு இருக்கின்றதா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு தொலைபேசியும் இணையமும் மனிதர்களைத் தன்வசம் ஈர்த்துக் கொண்டுவிட்டது. இதிலிருந்து இனி உலகம் மீண்டுவிடும் என்ற நம்பிக்கைச் சுடர் அணைந்து விடும் காலம் வெகு தூரத்திலில்லை. அந்த ஆதங்கத்தை நூலாசிரியரின் கவிதை இவ்வாறு கோடிட்டுக் காட்டுகின்றது.
வாசிக்கலாம் என்கிறது
புத்தகம்..
வா சிக்கலாம் என்கிறது
கைப்பேசி..
ஒன்றில் நாம்
தொலைந்து விடுவோம்..
மற்றையது நம்மைத்
தொலைத்து விடும்..
காகிதமோ தொடுதிரையோ
சிக்குவது எதிலாயினும்
பிரதிபலன் - பாவனை
முறையைப் பொறுத்தே!
பக்கம் 68 இலுள்ள 'சாயங்கள் தருவாயா?' என்ற கவிதையானது அழகியல் பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் பாங்கு சிலாகிக்கத்தக்கது. தன் மனதில் தோன்றிய ஒரு உருவத்திற்கு இயற்கையிடம் வர்ணங்களைக் கேட்டு நிற்கின்றார் நூலாசிரியர். இவரது கற்பனைத்திறன் இந்தக் கவிதையினூடாகப் புலப்படுகின்றது.
மணக்கண் தோன்றிய ஓர் ஓவியத்திற்கு உருவம் கொடுக்க நினைக்கின்றேன்.. அதற்கு வர்ணம் தீட்ட சாயங்கள் மட்டும் இயற்கையிடம் வேண்டி நிற்கின்றேன்.. இரா வானின் இளவரசனாகிய பால் நிலாவிடம் கொஞ்சம்.. மங்கையவள் கயல் விழியின் கண்மணியிடம் கொஞ்சம்.. நறுமுகையோடு மலர்ந்திடும் செவ்விதழ் ரோஜாவிடம் கொஞ்சம்.. கற்பாறையைப் பிளந்து துளிர்விடும் இளந்தளிரிடம் கொஞ்சம்.. நீந்தும் மேகங்கள் நிலவிடும் நீலவானிடம் கொஞ்சம்.. பொழுது சாய பொற்கரம் நீட்டும் செங்கதிரவனிடம் கொஞ்சம்.. மழை மறைய மெல்லமாய் முகம் காட்டும் வானவில்லிடம் கொஞ்சம்.. இயற்கையுடன் ஒன்றித்த எனது ஓவியம் வெளுத்திடாதல்லவா..? என்று கவிஞர் கேட்கும் பாங்கு இரசிக்கத்தக்கது.
'இப்படிக்கு என் இதயம்' என்ற இந்த நூல், நூலாசிரியர் சில்மியாவின் கன்னி முயற்சி. இனிவரும் காலங்களில் இன்னும் கனதியான கவிதைத் தொகுதிகளை இவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு, நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்!!!
நூல் - இப்படிக்கு என் இதயம்;
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - பாத்திமா சில்மியா
வெளியீடு - ஏட்டுலா கனவாக்கம்;
விலை - 650 ரூபாய்
நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment