Monday, July 11, 2016

99. கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் மெய்ம்மை கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் மெய்ம்மை கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் 

காலத்தால் அழிக்க முடியாத கவிஞர்களுள் மிக முக்கியமானவராக கவிஞர் ஏ. இக்பால் அவர்களைக் கொள்ளலாம். கவிஞர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவரை இலக்கிய உலகம் என்றும் மறந்துவிடப் போவதில்லை. உறவினராக இருந்தாலும் சரி, நண்பராக இருந்தாலும் சரி மனதில் தோன்றியதை வெளிப்டையாகப் பேசுபவர் இவர். அவர் எழுதி வெளியிட்ட நூல்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அவரது பிரத்தியேக வாசிகசாலையில் பல்லாயிரம் நூல்கள் காணப்படுகின்றன. உசாத்துணைக்கான நூல்களைப் பெற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டாளமே அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும். 


இக்பால் அவர்கள் தர்காநகர் கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். பல மாணவர்களை ஆசிரியர்களாக்கி அவர்களின் வாழ்வை சுபீட்சமாக்கியவர். 

இவர் ஏற்கனவே பன்னிரண்டு நூல்களை வெளியிட்டிருக்கின்றார். இவரைப் பற்றி ஏனையவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், குறிப்புக்கள் உள்ளடங்கிய 'கவிஞர் ஏ. இக்பால் அயிம்பது வருட இலக்கிய ஆவணம்' என்ற நூல் பெரும் வரவேற்பு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் எழுதிய மெய்ம்மை என்ற நூல் 57 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இது கைக்கு அடக்கமான சிறிய கவிதைத் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் அவர் எழுதியுள்ள அனைத்து கவிதைகளும் அவரது வாழ்வோடு இரண்டறக் கலந்த உண்மைச் சம்பவங்களாகும். அவற்றை கவிதை வடிவில் யதார்த்தமாக எழுதியிருக்கின்றார்.

தலைக்கனம் (பக்கம் 01) என்ற முதலாவது கவிதை காசை கடனாகப் பெற்றுவிட்டு அதை திருப்பித் தராதவர் பற்றியதாகும். இன்றைய யுகம் காசைக் கொடுத்தவன் பணிந்து நிற்க வேண்டிய சூழ்நிலையில் காணப்படுகின்றது. காசை கை நீட்டி வாங்கியவனோ எதுவித மனக்கிலேசமும் இல்லாமல் வாழ, கடன் கொடுத்து உதவி செய்தவன் மனப் போராட்டத்துடன் வாழ வேண்டியிருக்கின்றது. காசை திருப்பிக் கேட்டால் கேட்டவர் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொள்கின்றார். வாங்கியவர் தலைநிமிர்ந்து செல்கின்றார். இஸ்லாம் மார்க்கத்தில் ஹஜ் எனும் புனித மக்கா யாத்திரை ஐந்தாவது கட்டாய கடமையாக விதிக்கப்பட்டிருக்கின்றது. வசதியுள்ளவர்கள் கட்டாயம் இந்தக் காரியத்தை செய்ய வேண்டும். ஆனால் பிறருக்கு ஒரு ரூபாயாகினும் கடன் வைத்துக்கொண்டு அல்லது தமக்கு சாட்டப்பட்டுள்ள பொறுப்புக்கள், சமூக பொறுப்புக்களை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஹஜ் கடமையை பல முறை செய்தாலும் அதற்குப் பலனில்லை. 

இக் கவிதையில் வரும் றுமைஸா என்ற பெண்ணும் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றாள். திருப்பிக் கடன் வேண்டும் என்றால் பழைய தொகையை குறிப்பிட்டு புதிய தொகையையும் குறிப்பிட்டு எல்லாவற்றையும் சேர்த்து திருப்பித் தருவதாகக் கூறியே மீண்டும் கடன் வாங்கும் தந்திரோபாயத்தைக் கையாள்கின்றாள். ஆனால் இறுதி வரை கடனைத் திருப்பிக் கொடுக்கவுமில்லை. கடன் கொடுத்தவரை மதிக்கவுமில்லை. ஆனால் கடன் வைத்துக்கொண்டு அவள் ஹஜ் கடமையை செய்யப் போவது எந்தளவுக்கு இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று வாசகரிடத்தில் வினா தொடுக்கின்றார் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள்.

திருப்பிக்கொடுக்காது திடீரென ஒரு காகிதத் துண்டில்
இத்தனை ரூபா உங்களுக்குத் தரவேண்டும் இன்னும்
இத்தனை ரூபாக் கடன் வேண்டும் சேர்த்தெல்லாம்
மொத்தமாய்த் தருவேன் என்றெழுதிக் கடன் வாங்கும்
எத்தனங்கள் இவளிடம் மெத்தமுண்டு!

வாடிக்கையாளர் வருத்தம் (பக்கம் 13) என்ற கவிதை வங்கிகளில் பணம் வைப்பு செய்யும்போது அல்லது பெறும்போது நிகழ்கின்ற பிரச்சினைகளின் கருவை மையமாகக்கொண்டது. இன்று அனைவருக்கும் வங்கியில் கணக்கு இருக்கின்றது. அவசரத் தேவைகளுக்காகவும், சேமிப்புக்காகவும், திருடர் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவும் வங்கியில் பணம் வைப்பு செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட வங்கியின் தொடர் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள், அன்பளிப்புக்கள் கிடைக்கின்றன. இந்தக் கவிதையில் குறிப்பிட்ட தொடர் வாடிக்கையாளரான கவிஞர் பத்து வருடங்களாக அந்த வங்கியில் கணக்கை நடைமுறைப்படுத்தி வருகின்றார். ஒருநாள் அவர் காசை வங்கியில் கையளிக்கும்போது அதை வாங்கிப் பார்த்த வங்கியாளன் திடீரென எழுந்து முகாமையாளரிடம் செல்கின்றான்.

சிறிது நேரத்தின் பின்னர் துப்பாக்கியுடன் இரண்டு பொலீஸார் கவிஞரை சூழ்ந்துகொள்கின்றனர். காரணம் அதில் ஒரு நோட்டு கள்ள நோட்டு என்பதனாலாகும். பத்து வருட வாடிக்கையாளர்; மிகப் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றார். வழமையான வாடிக்கையாளர் என்றுகூடப் பார்க்காமல் எவ்வித விசாரணையுமின்றி நேரடியாக நீதவானிடம் ஆஜர் படுத்தப்படுகின்றார். ஒரு இலட்சம் பணத்தை பிணையாகக் கொடுத்துத்தான் கவிஞரால் திரும்பி வர முடிந்தது. இப்படி ஒரு துரோகத்தை செய்த வங்கியில் இனியும் எப்படி வாடிக்கையாளராக இருப்பேன் என்கிறார் கவிஞர். இவ்வாறான சட்டங்களும், திட்டங்களும் அப்பாவிகளை மிகவும் கவலையடையச் செய்வனவாகும். என்னதான் பண்புடன் வாழ்ந்தாலும் மனிதனையன்றி பணத்தைத்தான் பார்ப்பார்கள் என்பதை கவிஞர் நன்கு உணர்த்தியிருக்கின்றார்.

பத்து வருடங்கள் என்
பண்பினை வங்கி
அறிந்ததென் றெண்ணி
ஆலாய்ப் பறந்த நான்
அப்போதுதான் எல்லாம்
பணத்துடன் மனிதனைப் பார்ப்பார்
என்பதை உணர்ந்திட முடிந்தது!

நான் மன்னிப்பதே இல்லை (பக்கம் 39) என்ற கவிதை ஆசிரியர்களை இழிவுபடுத்துபவர்களுக்காக எழுதப் பட்டிருக்கின்றது. அதாவது கவிஞர் ஆசிரிய சேவையாற்றிய காலத்தில் அவரையும் இன்னொரு பெண் ஆசிரியரையும் பற்றி அவதூறாக எழுதியவர்கள் உண்மையில் வீரமில்லாத கோழையர்களாவர். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு முன்னே சொல்லும் கவிஞருக்கு இவ்வாறானதோர் அவமானத்தைத் தேடிக்கொடுக்க முனைந்தவர்கள் உள்ளத்தில் பொறாமை எனும் தீச்சுவாலை கொண்டவர்கள். ஒரு பெண்ணின் மீது இருக்கும் கோபம், எரிச்சல், வெறுப்பு என்பவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம் என்றால் அது அந்தப் பெண் பற்றி தவறாகப் பேசுவதே ஆகும். அதுதான் ஒரு பெண்ணிற்கு கொடுக்கப்படும் உச்ச தண்டனையும் பட்டமுமாகும். அதே போல அந்தப் பெண் ஆசிரியரை அவதூறு பேசி தீய கண்ணோட்டத்தைக் கொடுத்தவர்களுக்கு இறைவனின் தீர்ப்பு நாளில் தண்டனை கிடைத்தே தீரும். ஆசிரியையின் கணவர் கவிஞரிடம் தன் மனைவியைப் பற்றி தனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று கூறுவதில் வாசகர்களுக்கும் மனத்திருப்தி ஏற்படுகின்றது. கவிஞர் ஆணித்தரமாக நான் மன்னிப்பதே இல்லை என்று சொல்லி விட்டார். ஆசிரியையும், அவரோடு இணைந்து அவரது கணவனும் மன்னிக்காவிட்டால் நாளை மறுமையில் இவ்வாறு அவதூறு சொன்னவர்களுக்கு விமோசனம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. 

காரணம் எளிது (43) என்ற கவிதை காதல் எனும் பெயரில் அரங்கேறும் களியாட்டத்தை எடுத்தியம்புகின்றது. காதல் புனிதமானது என்று சொல்லப்பட்ட காலம் மாறி காதல் என்றாலே பருவத்தின் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லுமளவுக்கு இன்று காதல் சந்துபொந்துகளில் எல்லாம் சீரழிந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு காதலித்து.. ஊர் சுற்றி.. பின் திருமணத்துக்கு முதலே கர்ப்பமான ஒரு பெண் பற்றியே இந்தக் கவிதை பேசுகின்றது. தன் காதலி கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் வெளிநாட்டுக்குச் செல்லத் துணிகின்ற காதலன் வெளிநாடு சென்று வந்து அவளை மணமுடிப்பதாக உறுதியளிக்கின்றான். ஆனால் வெளிநாட்டுக்கு சென்று வந்த பிறகு இது பற்றி கதைக்கையில், தான் இல்லாத காலத்தில் அவளது நடத்தை தவறாக இருந்திருக்கின்றது என்று முகத்திலடித்தாற்போல கூறுகின்றான். 

நம்பிக் காதலித்து, தன்னையும் பறிகொடுத்து, பின் திருமணத்துக்கு முதலே கர்ப்பமாகி இறுதியில் காதலனே காதலியை நடத்தைக் கெட்டவள் என்று சொல்வதில் எங்கேயிருக்கிறது காதல்? காதலியைக் கைப்பிடித்து சொந்தமாக்கும் முன்பே களவாக அவளை அனுபவிப்பதில் எங்கேயிருக்கிறது காதல்? வீட்டார் நம்பி வெளியே அனுப்ப உல்லாச விடுதியில் உல்லாசமாக இருக்கும்போது ஏறிய காம போதையில் எங்கேயிருக்கிறது காதல்? காதல் என்ற சொல் இன்று கள்ளத் தொடர்புக்குத்தான் அநேகமாக பயன்படுகின்றது. அதைத்தான் மேற்கூறப்பட்ட சம்பவம் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

இப்படிப் பல உண்மைச் சம்பவங்கைளைத் தொகுத்து கவிதைகளாக்கி மெய்ம்மை என்ற புத்தகம் வெளிவந்திருப்பதானது அந்த மெய்யை அனைவரும் உணர்ந்து திருந்தி வாழ்வதற்கான நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றது. அதை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும். நல்ல விடயங்களை நாடிப் போக வேண்டும். தீயவற்றைக் கண்டால் விலகிப் போக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்த உண்மைகளை உலகுக்குச் சொன்ன கவிஞர் ஏ. இக்பால் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - மெய்ம்மை
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஏ. இக்பால் 
வெளியீடு - அல் கலம் வெளியீட்டகம்
விலை - 150 ரூபாய்

No comments:

Post a Comment