Thursday, July 28, 2016

104. கக்கக் கனிய சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

கக்கக் கனிய சிறுகதை நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

பல்வேறு துறை சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் மனித வாழ்வியலை படைப்புக்களினூடாக சொல்வதை விரும்புவார்கள். சிறுகதைகள் அவ்வாறானதொரு தனித்தன்மையைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பாத்திரங்கள் உணர்வுகளை சொல்லும் விதத்தை மிகச் சரியாக சிறுகதைகளினூடாக கையாளலாம் என்பதனாலாகும்.

சட்டத்தரணி எஸ். முத்துமீரானின் படைப்புக்கள் அன்றாட வாழ்வில் நடக்கும் பல விடயங்களையும் தனக்குள் உள்வாங்கி, தானே கதைசொல்லியாகி வாசகர்களுக்கும் அறியத் தருவதாக அமைந்திருக்கும். கக்கக் கனிய என்ற தொகுதியானது நெஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 16 சிறுகதைகளை உள்ளடக்கி 144 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் ரமீஸ் அப்துல்லாஹ் கீழுள்ளவாறு குறிப்பிட் டிருக்கின்றார்.

`முத்துமீரானின் எழுத்துக்களில் ஒரு சமூகத்தின்  ஒட்டுமொத்தமான படப்பிடிப்பைக் காண முடியும். இலங்கை தமிழ் பேசுகின்ற மக்கள் என்ற வட்டத்துக்குள் முஸ்லிம்களும் அடங்குவர். அதனால் முஸ்லிம்கள் தமிழர்கள் ஆகி விடுவதில்லை. அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வேறு சமூகத்தினர். அவர்களுக்கென்று தனியான மதம், மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதார அம்சங்கள் முதலானவை வேறானவையாக அமைகின்றன. இதற்கு முத்துமீரானின் எழுத்துக்கள் மிக ஆதாரமாக அமைகின்றன. அதனாலே அவரது கதைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலேயும் மண்வளச் சொற்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன'.

தாய்மை சாவதில்லை (பக்கம் 24) என்ற கதை தாய்ப் பாசத்தின் ஆழத்தை உருக்கமாக கூறி நிற்கின்றது. உலகில் உள்ள எல்லா உறவுகளும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் பழகும். ஆனால் தாய் என்ற உறவு மாத்திரமே பாசத்துக்காகப் பழகும். தன் பிள்ளை எத்தகைய கெட்டவனாக இருந்த போதிலும் அவனது நன்மைக்காக சதாவும் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் தாயினுடையது. பத்து மாதங்கள் வயிற்றில் சுமப்பது முதல் குழந்தையின் எதிர்காலம், நன்மை பற்றி மாத்திரமே தாயுள்ளம் சிந்திக்கின்றது. அவ்வாறான உறவை சிலர் மதிப்பதில்லை. தாயின் பெருமையைப்பற்றி பேசுபவர்கள் கூட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தாயின் மனதை உடைத்து விடுவார்கள். இஸ்லாம் மார்க்கம்; தாயின் காலடியின் கீழ் சுவர்க்கம் உண்டு என தாயின் சிறப்பு பற்றி கூறியுள்ளது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், மாதா, பிதா, குரு, தெய்வம் போன்றவற்றில் கூட தாய்க்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இக்கதையில் வருகின்ற செய்யது ராத்தா என்ற மூதாட்டி சட்டத்தரணி மீரானின் வீட்டுக்குச் செல்கின்றார். அவரது நோக்கம்   அவரது பெயரில் இருக்கும் வீடு வளவை பிள்ளைகளுக்கு கொடுப்பது பற்றிய ஆலோசனையை மீரான் அவர்களிடம் கேட்பதற்காகும்.

``என்ன ராத்தா கடும் யோசனயோட இரிக்காய்?''

``ஒண்டுமில்லம்பி.. ஒனக்கிட்ட ஒரு புத்தி கேப்பமின்டு வந்தன்..''

``அதிலென்ன, எதப்பத்தி?''

``என்ர பேரில இருக்கிற, பேமிற்று வளவப் பத்தித் தான்..''

``அதுக்கென்னப்ப..?''

``அதயேன் கேக்காய்.. இதால என்ட ஊட்ட ஒரு மாசமா ஒரே கொழப்பம் தம்பி. என்ர புள்ளயலெல்லாம் அந்த வளவ  வித்துக் கேட்டு என்னோடச் சண்ட புடிக்கிதுகள். வூட்டுல நிம்மதியா இரிக்கேலாமக் கிடக்கு. என்னேரமும் கொம்பலும் கொழப்பமுமாக் கெடக்கு. ஒனக்கிட்டச் செல்றத்திக்கென்ன என்ர கொடலுக்க சோறு, தண்ணி போய் நாலஞ்சி நாலம்பி..''

இந்த உரையாடலில் செய்யது ராத்தா எந்தளவுக்கு மன உளைச்சலில் காணப்படுகின்றார் என்பது புலனாகின்றது. 

அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறிய மீரான், செய்யது ராத்தாவுக்கு புத்திமதி சொல்கின்றார்.

``அப்ப லாவைக்கு நான் கடிதத்த எழுதி வெக்கன். நீ காலத்தால வந்து வாங்கிற்று போ லாத்தா. ஏதோ வளவ விக்கிற எல்லாக் காசயும் புள்ளயளுக்கு குடுத்திராத. கொஞ்சக் காச ஒன்ட மகுத்துச் செலவுக்கு வச்சிக்க''

அடுத்த நாள் செய்யது ராத்தா மீண்டும் தலையில் காயத்துடன் ஓடி வருகின்றாள். அவளது மகன், தாய் என்று கூட பாராமல் அவளைத் தாக்கிவிட்டு இறப்புச் செலவுக்கு வைத்திருந்த காசையும் எடுத்துக்கொண்டு போனதாகச் சொல்லி ஓவென அழுகின்றாள். அவரது நிலை கண்டு மீரானுக்கும் மிகவும் மனவருத்தம். அவனைப் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்வோம் என மீரான் கூறியதுற்கு அந்தத் தாயுள்ளம் அதனைத் தடுத்துவிடுகின்றது.

``அவன் சின்னப் புள்ள.. உட்டிரு வாப்பா.. அவன் எல்லாத்தயிம் மறந்து லாவெக்கி என்னப் பாக்க வருவான்..'' என்கின்றாள்.

தாய்ப் பாசத்தை அணுவணுவாகப் புரிய வைக்கும் அழகிய கதை இது.

கொத்தும் கொறயுமா  (பக்கம் 33) என்ற சிறுகதை சமூகத்தில் நடந்தேறும் அராஜகங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றது. இன்று எல்லாவற்றுக்கும் பணம், பதவி, அந்தஸ்து போன்றவற்றையே எல்லோரும் மதிப்பாகக் கருதுகின்றார்கள். அவை இல்லாதவர்களை நாயைவிடக் கேவலமாக நினைக்கின்றார்கள். ஆனால் எல்லாத் தகுதியும் இருப்பவர்கள் பண்புகளை இழந்துவிடுகின்றார்கள்.

பள்ளிவாயல்களில் நடக்கும் பிரசங்கங்கள் சுயநலத்துக்காக இடம்பெறுகின்றன. தமக்குத் தேவையானதைக் கூறி மக்களை அதன்வழி இழுப்பதற்கு பலர் துணிவதாக இக்கதையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஹாஜியார் என்ற பட்டத்துக்காகவும், ஊரிலுள்ளவர்கள் தன்னை மதிப்பதற்காகவும், வெளிநாடுகளுக்குச் சென்று தங்கம் போன்றவற்றை கொண்டு வந்து உள்நாட்டில் விற்றால் இன்னும் இலாபம் பெற முடியும் என்பதற்காகவும் ஹஜ் யாத்திரை செய்யப்படுவதாக இக்கதை தெளிவாகக் கூறியிருக்கின்றது.

இக்கதையில் வரும் வட்டியன்ட மூத்தமகன் சின்னப்பிள்ளை என்பவர் சுலைமான் மௌலவியுடன் ஹஜ்ஜுக்கு செல்வதாக ஏற்பாடாகியிருக்கின்றது. போகும் போக்கில் காசை கூடுதலாக கொண்டு வருமாறும் மக்காவிலிருந்து நகை நட்டுக்களை வாங்கி வருவோம் என்றும் கூறுகின்றார் மௌலவி. அத்துடன் தாம் அங்கு தங்கியிருக்கும் ஹோட்டல்கள் ஏசி பூட்டிய ஆடம்பரமானவை என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றார். கன்னிகளைக் கரை சேர்க்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள்; வரிசை கட்டிப் பார்த்திருக்க, பல தேவைகளை உடையவர்கள் தம்மைச் சூழவும் இருக்க, பகட்டுக்காக அல்லாஹ்வின் போதனைகளை மறுத்து இன்னும் சொத்து சேர்ப்பதற்காக ஹஜ்ஜுக்கு செல்லும் இவர்களின் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சந்தேகம். அதை ஆணித்தரமாக சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பானது.

மைய்யத்து வீடு (116) என்ற சிறுகதை சுலைமான் சப் என்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஊருக்குள் வட்டிக்குக் கொடுத்து, நாள் கொமிஷனுக்கு காசு கொடுத்து, பெண்களுக்கான கள்ள பாஸ்போர்ட் செய்து பணக்காரன் ஆனவன்தான் சுலைமான். அவன் அந்த ஊர் எம்.பியின் செல்லப்பிள்ளை. அந்த செல்வாக்கால் சுலைமானை ஊரார் பெரிய புள்ளியாகப் பார்க்கத் துணிகின்றனர். இஸ்லாம் மார்க்கத்துக்கு முரணாக பணம் சம்பாதிப்பவன் அல்லாஹ்வின் புனித மாளிகையின் தலைவனாக  நம்பிக்கையாளர் சபையின் அங்கத்தவனாக இருக்கின்றான். இவ்வாறான அசிங்கமான அரங்கேற்றங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். இறுதிநாள் நெருங்கும்போது தகுதியில்லாதவர்கள் எல்லாம் தலைவர்களாக மாறுவது சாதாரண விடயம். அந்தவகையில் சுலைமானும் செல்வாக்குள்ளவனாக ஆகிவிடுகின்றான். 

இவன் மையத்தை எடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயம் கொழுக்கட்டப் பொட்டிரக் கொழந்த என்பவள் வந்து தலையிலடித்து மையத்து வீட்டை அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருக்கின்றாள். காரணம் அவளது மகள் சவூதிக்குப் போவதற்காக வீட்டை சுலைமானிடம் அடகு வைத்திருக்கின்றாள். சுலைமான் அதற்கும் வட்டிக்கு மேல் வட்டி என்று பல ஆயிரங்களைகக் கறந்து இறுதியில் யாருக்கும் தெரியாமல் வீட்டின் உறுதியைத் தன் பெயருக்கு மாற்றிவிட்டான். சவூதியிலிருந்து கஷ்டப்பட்டு உழைத்த காசை எல்லாம் இந்தக் களவானிக்குக் கொடுத்தது போக சொந்த வீடும் தனக்கில்லை என்றால் யார் தான் தாங்குவார்? அவரின் நிலை வாசகரின் மனதையும் பிழிந்துவிடுகின்றது.

இப்தார் (பக்கம் 138) என்ற சிறுகதை யதார்த்தமாக நடக்கும் சம்பவமொன்றை மிக அருமையாக சொல்லியிருக்கின்றது.  நோன்புக்காலம் வந்தால் பலர் நம்மிடம் உதவி கேட்டு வருகின்றார்கள். நோன்பு காலத்தில் இவ்வாறு வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதாவது தமக்கு நோன்பு பிடிப்பதற்கு அல்லது நோன்பு திறப்பதற்கு போதுமான உணவு இல்லாதிருக்கலாம். அல்லது தம் பிள்ளைகளுக்கு வகை வகையாக சாப்பாடு கொடுக்க முடியாத கஷ்டத்தில் இருக்கலாம். அல்லது கணவன் மரணித்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நோன்புக் காலங்களில் தனவந்தர்களின் மனது இரங்கியிருக்கும் என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம். இஸ்லாம் ஸக்காத்தை மூன்றாவது கடமையாக ஆக்கியிருக்கின்றது. வசதி படைத்த ஒவ்வொருவரும் அல்லாஹ் நிர்ணயித்த ஸக்காத்தைக் கொடுத்தே தீர வேண்டும். இல்லாவிடில் மறுமையில் அவர் சேர்ந்த சொத்துக்கள்தான் அவரை நரகத்துக்கு இட்டுச் செல்லும். அல்குர்ஆனில் எட்டு கூட்டத்தார்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு கட்டாயமாக ஸக்காத்தை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. அல்லாஹ் தமக்கு வழங்கிய செல்வத்தில் ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கும் கொடுத்துதவுமாறு கூறியிருக்கின்றது. 

நோன்புக் காலத்தில் ஸக்காத் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதால்தான் இல்லாதவர்கள் கையேந்துகின்றார்கள். இக்கதையில் வரும் மீரான் என்பவர் பெரிய பெரிய செல்வந்தர்களுக்குக்கும், எம்.பிக்களுக்கும் இப்தாருக்கு (நோன்பு திறத்தல்) அழைப்பு விடுக்கின்றார். அவரது வீட்டில் கோழிக் கஞ்சும், இடியப்ப புரியாணியும் செய்து அசத்துவதில் குறியாக இருக்கின்றார். அப்போது ஸக்காத் பெற தகுதியானவர்கள் வந்து அவரிடம் கையேந்தும் போது வங்கியில் மாற்றக்கொடுத்த சில்லறைக் காசு நாளைக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லி திருப்பியனுப்புகின்றார். அள்ளிக்கொடுக்க வேண்டிய கைகள் கிள்ளிக் கொடுக்கின்றன. கதையை வாசிக்கும்போதே மனதில் நெருடல் ஏற்படுகின்றது.

இவ்வாறு மண்வளம் மாறாமல் படைப்பிலக்கியம் செய்கின்ற, சம்பவங்களை எல்லாம் சிறுகதைகளாய் படைக்கின்ற சட்டத்தரணி முத்துமீரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கக்கக் கனிய
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - எஸ். முத்துமீரான்
வெளியீடு - நெஷனல் பப்ளிஷர்ஸ் 
விலை - 350 ரூபாய்

No comments:

Post a Comment