Sunday, July 10, 2016

97. மானிடம் உயிர் வாழ்கிறது சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மானிடம் உயிர் வாழ்கிறது சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நல்ல சிந்தனைகள் மனித மனத்தை வலுப்படுத்துகின்றன. அவ்வாறு தோன்றும் சிந்தனைகளை ஏனையோருக்கும் தெரியப்படுத்தும் பணியை ஒரு எழுத்தாளன் தன் எழுத்துக்களுக்கூடாக செய்கின்றான். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள் ஏனைய வாசகர்ளோடு சங்கமிக்கும் போது யதார்த்த வாழ்வியல் குறித்த உண்மையை அறிய அது காரணியாக அமைந்து விடுகின்றது. சிறுகதைகள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றுகின்றன. சொல்ல வந்த விடயத்தை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பாத்திரங்களினூடாக அல்லது காதாசிரியரே கதைசொல்லியாக திறம்பட சொல்லும் போது அச்சிறுகதை உயிர் பெறுகின்றது.

இவ்வாறான சிறுகதைகள் மண் வாசனை கலந்த மொழியில் வெளிவரும்போது அது மனதுக்குள் குதூகலத்தை ஏற்படுத்துகின்றது என்பது நிதர்சனம். இலங்கை எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சிலரால் மாத்திரம்தான் அவ்வாறான மண்வாசைன மணக்கும் சொல்லாடல்களுடன் கூடிய படைப்புக்களைத் தர முடிகின்றது. அந்த வரிசையில் நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி முத்துமீரான் அவர்களின் மானிடம் உயிர் வாழ்கிறது என்ற சிறுகதைத் தொகுப்பு அவதானத்துக்குரியது.

இத்தொகுதியில் காணப்படுகின்ற சிறுகதைகள் கிராமிய மணம் கமழ்வதாகவும், யதார்த்தங்களை அப்படியே உள்வாங்கியும் எழுதப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பு. மனித வாழ்வோடு ஒன்றிணைந்தவற்றை சிறுகதைகளினூடாக படைப்பாக்கம் செய்வது முத்துமீரான் என்ற படைப்பாளிக்கு கைவந்த கலையாக அமைந்திருக்கின்றது. அதே போல கதைகளில் கதாசிரியரே கதைசொல்லியாக இருக்கின்றார்.

அவனொரு நேசமுள்ள மனிதன் (பக்கம் 23) என்ற சிறுகதையின் முக்கிய பாத்திரம் காதர் என்பவனாவான்.  கதாசிரியரின் வீட்டில் ஒரு ஊழியனாக செயற்பட்டாலும் அவனை எல்லோரும் தங்கள் குடும்ப அங்கத்தவனைப் போல்தான் நினைக்கின்றார்கள். மந்திரங்கள், பேய்கள், ஜின்கள் எல்லாவற்றிலும் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் காதரிடம் அதிகமாகவே காணப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் அவனது கனவில் வந்து போவதாக சொல்லிக்கொண்டிருப்பான். அவ்வாறு வரும் ஜின்களில் ஒன்றுதான் சாதிக் ஜின். எனவே எப்போது பார்த்தாலும் ஷசாதிக் ஜின் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்| என்று அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருப்பான். அவ்லியாக்கள், கூறாணிகள் எல்லாம் தனக்கு மிக நெருங்கியவர்களாக சித்தரித்துக்கொண்டிருப்பான். நல்ல உழைப்பாளியான அவன் கொடுக்கப்படும் எந்த வேலை என்றாலும் சலிக்காமல் செய்வான். மீன் வாங்கி வருமாறு அவனுக்கு பணிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அவன் இவ்வாறு பதிலளித்திருப்பது இதழோரத்தில் சிரிப்பை வரவழைத்துவிடுகின்றது.

'நான் மார்க்கட்டுக்க போனா எல்லா மீன்காரனுக்கும் பயம் புள்ள.. நம்முட சாதிக் ஜின் இரிக்கு மட்டும் எனக்கு ஆருக்கும் பயமில்ல. அவரிட்ட ஒரு வாத்த சென்னாப் போதும். கடலுக்க இரிக்கிற மீனெல்லாத்தயிம் புடிச்சி விழுக்கிருவாரு.. இந்த மீன்காரனுகள்ள றிக்கிசி எல்லாம் எனக்குத் தெரியிம்.. சும்மா இவக என்ன வெரட்டேலா..!'

இப்படியிருப்பவனை பெரும்பாலானவர்கள் பைத்தியம் என்றே கருதுகின்றார்கள். ஆனால் அவனொரு நேசமுள்ள மனிதனாகத்தான் தனக்குத் தெரிவதாக கதாசிரியர் சொல்லியிருப்பதிலிருந்து காதர் மீது அவருக்கிருந்த அபிமானமும், அநுதாபமும் தெளிவாக விளங்குகின்றது.

எனக்கு கல்யாணம் வேணாம் சேர் (பக்கம் 50) என்ற சிறுகதை அத்துறசூல் என்பவனை அடிப்படையாகக் கொண்டது. வட்டைக்குப் போவதற்காக வருவதாகச் சொன்ன அத்துறசூலை இன்னும் காணவில்லை என்று மனைவி புறுபுறுத்துக்கொண்டிருக்கின்றாள்.

'அந்த லூசி அத்துறசூல் எங்க போய்ப் படுக்கானோ.. அவன உட்டுப்போட்டு நீங்க போயிற்று வாங்க' என்கின்றாள்.

இவ்வாறுதான் அவனுக்குரிய மரியாதை இருந்தபோதிலும் அவன் எல்லா வேலைகளையும் திறம்பட செய்து முடிப்பதில் கெட்டிக்காரன். நேரம் பிந்தி வந்த அவனுடன் மீரான் வட்டைக்குச் செல்கின்றார். இவ்வாறு போய்க்கொண்டு இருக்கும்போது அத்துறசூல் அவரிடம், சேர் என்ட கலியாண வெசயம்? என்று கேட்கின்றான்.

அவரு அகமலெவ்வ என்ன செல்றாரு? என்று அதைப் பற்றி மீரான் கேட்டறிகின்றார்.

மணப்பெண்ணின் தந்தை மகர் காசு கேட்பதாகவும், அவ்வாறு தந்தால் அத்துறசூலுக்கு தன் மகளை கலியாணம் பண்ணித் தருவதாகவும் சொன்னதாக அத்துறசூல் குறிப்பிடுகின்றான். ஆனால் பகிடிக்கு அவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்ட மீரான், அத்துறசூலிடம் அதை வெளிப்படையாக குறிப்பிடுகின்றார்.

ஆனாலும் அத்துறசூல் மிக உறுதியாக மகர் காசு கொடுத்தால் திருமணம் செய்யலாம் என்று சொன்னதும் மீரான் அந்தக் காசைக் கொடுத்து அவனது திருமண வாழ்க்கை சிறக்க வேண்டுகின்றார்.

ஆனால் அவன் திரும்பி வந்து,

'அவன் அகமலெவ்வ என்ன பகிடி பண்ணத்தான் அவன்ட மகள எனக்குக் கலியாணம் பண்ணித் தாறென்டு சென்னயாம். லூசிக்கென்னடா கலியாணமென்டு எனக்கு நல்லா ஏசி அறஞ்சிம் போட்டான்' என்று சொல்கின்றான். அவனை மீரான் சமாதானப்படுத்திய போதும் அவன் சமாதானமாகவேயில்லை.

'சேர் இனி எனக்கு கலியாணமே வேணாம். இந்த ஊரான் நினைக்கிறாப் போல நான் மகுத்தாகும் வரைக்கும் லூசாகவே இருந்திற்று மகுத்தாப் போறன்.. சேர் என்ன எவன் என்ன சென்னாலும் பரவாயில்ல.. ஆனா நீங்க மட்டும் இந்த லூச ஒரு மனிசனாப் பாத்துக்கிட்டாப் போதும்..' என்று சொல்கையில் வாசகரின் மனதும் கசிந்துருகிவிடுகின்றது.

மானிடம் உயிர் வாழ்கிறது என்ற இந்தச் சிறுகதைத் தொகுதியில் அவனொரு நேசமுள்ள மனிதன், எங்கு மூத்தம்மா தங்க மூத்தம்மா, எனக்குக் கல்யாணம் வேணாம் சேர், ஏழ்மை அவனுக்கொரு தூசு, ஒரு கிராமம் அழுகிறது, சாவல், மானிடம் உயிர் வாழ்கிறது, நாளைக்கு எங்கிட ஊருக்கு எம்பி வாறாரு, மௌலானாட கொதறத்த மோதின் அறிவாரா?, உண்டியல் ஆகிய 10 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. 160 பக்கங்களில் சென்னை நெஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் இந்த நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

சமுதாயப் பாங்கான சம்பவங்களை, தன்னைச் சூழ வாழ்பவர்களின் சம்பவங்களை எழுத்து வடிவில் தந்து பிறரும் வாசித்துப் பயனடையச் செய்யும் முத்துமீரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது படைப்புக்களை இலக்கிய உலகம் மேலும் எதிர்பார்க்கிறது!!!

நூலின் பெயர் - மானிடம் உயிர் வாழ்கிறது
நூலாசிரியர் - எஸ். முத்துமீரான்
நூலின் வகை - சிறுகதை
வெளியீடு - நெஷனல் பப்ளிஷர்ஸ் 
விலை - 250 ரூபாய்

No comments:

Post a Comment