Wednesday, July 30, 2025

157. 'என் மேல் விழுந்த மழைத் துளிகள்' அனுபவக் கட்டுரைகள் பற்றிய ஒரு பார்வை

 கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாஃபீயின் 'என் மேல் விழுந்த மழைத் துளிகள்' அனுபவக் கட்டுரைகள் பற்றிய ஒரு பார்வை


நூல் விமர்சனம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்கள், எழில் கொஞ்சும் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகின்றார். அங்கு பல்கலைக்கழகமொன்றில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், வானொலி நாடகக் கலைஞர், ஊக்குவிப்புப் பேச்சாளர், சமூக சேவையாளர் எனப் பன்முகங்களைக்கொண்டவர்.


இவருடைய கவிதைகளில் கவிநயம் சொட்டும். சிறுகதைகளை இவர் எழுதும் போது கையாளும் மொழிநடை வாசகர்களைச் சுண்டி இழுக்கும். நாடகங்களை இவர் எழுதும் போது பயன்படுத்தும் மொழி நடை மிகவும் இரசனையாக அமைந்திருக்கும். இவர் எழுதும் கட்டுரைகள் மட்டும் விதிவிலக்கா என்ன? கட்டுரைகளை எழுதும் போது இவர், தனது அனுபவக் கருத்துக்களை இலக்கிய நயத்தோடு வாசகர்களுக்கு முன்வைக்கும் பாங்கு அலாதியானது. மொத்தத்தில் இவருடைய ஆக்கங்கள் யாவும் இலக்கிய வாசகர்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையவை.

அவுஸ்திரேலியாவின் வளர்பிறை பதிப்பகத்தின் மூலம் மரீனா இல்யாஸ் ஷாஃபியின் 'என் மேல் விழுந்த மழைத் துளிகள்' என்ற மகுடத்தில் அமைந்த அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூலானது 132 பக்கங்களில் அண்மையில் வெளிவந்திருக்கிறது.


தான் இதுவரை முகநூலில் எழுதி வந்த அனுபவக் கட்டுரைகள் பலவற்றில் தெரிவு செய்த 33 அனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து 'என்மேல் விழுந்த மழைத் துளிகள்' என்ற இந்த நூலை வெளியிட்டுள்ள நூலாசிரியர், தனது பெற்றோர்களான மர்ஹூம் முகம்மது இல்யாஸ், மஸ்தூரா உம்மா மற்றும் தனது அன்புக் கணவர் அஷ்ஷேய்க் செய்யத் ஷாஃபீ ஆகியோருக்குத் தனது நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். சமர்ப்பணத்தை தொடர்ந்து நூலாசிரியர் எழுதியுள்ள  'மலைகளைக் குடைந்து தான் மாற்றங்களை உருவாக்க முடியும் என்றில்லை. அழகிய வார்த்தைகளுக்கும் அந்த சக்தி இருக்கின்றது' என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். யாக்கூப் அவர்கள் முன்வைத்துள்ள பின்வரும் கருத்து கவனிக்கத்தக்கது.

'அறிவுபூர்வமான கட்டுரைகள் தொடர்பு சாதனத் துறையில் அண்மைக் காலமாக பாரிய அளவில் தாக்கம் செலுத்தி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக எழுத்தாற்றல் என்பது நவீன உலகை வடிவமைக்கும் நிகழ்ச்சி நிரலில் முன்னிலை வகிக்கின்றது. கட்டுரைகளைப் பொருத்தவரையில் ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், அனுபவக் கட்டுரைகள் என்பவை ஊடகங்களுடன் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. அந்த வரிசையில் நியூசிலாந்தில் இருந்து மரீனா இல்யாஸ் ஷாஃபி தனது வாழ்வின் அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி, ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கி வரும் 'இன்பத்தமிழ் வானொலி'யில் வாராந்தம் ஒளிபரப்பாகி வரும் 'வளர்பிறை' நிகழ்ச்சியினூடாக காற்றலை வழியே கலை வடிவங்களாகப் படைத்திருப்பது மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாகும். அதனையும் தாண்டி அவர் தனது கட்டுரைகளை முகநூலில் பதிவேற்றம் செய்திருப்பது நவீன ஊடகத் துறையில் இன்னும் ஒரு சாதனையாகவே நான் கருதுகின்றேன்'.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் இரத்தினசிங்கம் கணபதிப்பிள்ளை, தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோரின் வாழ்த்துரைகளோடு, வலம்புரி கவிதை வட்டத்தின் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் அணிந்துரையும் நூலை அலங்கரிக்கின்றன. தான் எழுதியுள்ள கட்டுரைகள் குறித்து நூலாசிரியர் தனதுரையில், 'இங்கே நான் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல. இரத்தமும் சதையும் கலந்து எழுதப்பட்ட, உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்த சம்பவங்கள். உடலும் உள்ளமும் சோர்ந்து, தளர்வடைந்து, இனி வாழ்ந்தது போதும் என்று அலுப்புத் தட்டும் போதெல்லாம் இந்த அனுபவங்களை மீட்டிப் பார்த்து ஒரு கோப்பைத் தேநீர் போல் ஊற்றிப் பருகி, என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்வேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி நூலாசிரியர் நூலின் உள்ளடக்கத்தில் முன் வைத்துள்ள விபத்து, பஸ் பயணம், மனித நேயம், பாதை தவறிய பயணம், சொர்க்கத்தின் சிறு துண்டு, நியாயத்தை தேடி, உங்கள் கணவருக்கு எத்தனை மனைவிகள்?, மறுபக்கம், தவறிப்போன மரணம், ஒரு புன்னகையின் விலை, பூட்டப்படாத வீடுகள், வியாபாரிகள் அற்ற கடைகள், தூங்காத இரவுகள், ஒரு திகில் பல திருப்பங்கள், அதிசயத் தீவு, ஹிச் ஹைக்கிங் (ர்iஉh ர்மைiபெ), மாற்றங்கள், மூச்சுத் திணறிய புற்கள், துணை, மனச்சாட்சி, தற்கொலை முயற்சி, கொரோனா தொற்றாலி, எதிர்வீட்டு ஜன்னல், திருமணம், சட்டத்தில் ஓர் ஓட்டை, சீருடை மாற்றுவதற்குள், இரண்டு வருடங்களின் பின்பு, படிக்கற்கள், வீட்டைச் சுமந்து செல்லல், தூண்டில், வெள்ளம், கனவு நிறைவேறிய நாள், பாதியில் சிதறிய பயணம் ஆகிய 33 தலைப்புகளில்  அமைந்துள்ள அனுபவக் கட்டுரைகளில் சிலவற்றை மாத்திரம் வாசகர்களின் இரசனைக்காக இங்கே எடுத்து நோக்குவோம்.

'விபத்து' (பக்கம் 23) என்ற தலைப்பில் அமைந்த முதலாவது அனுபவக் கட்டுரையானது அவ்வப்போது சிறிய சிறிய துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் துவண்டு போகும் மனிதர்களுக்கு சிறந்த படிப்பினையைத் தருவதாக அமைந்துள்ளது. நூலாசிரியர் தனது பயணத்தில், தான் எதிர்கொண்ட விபத்தின் மூலம் சக்கர நாற்காலியில் காலம் கழித்த நாட்களை மிகுந்த துயரோடு நினைவுபடுத்தி, வல்ல நாயன் அல்லாஹ்வின் துணையோடு, அவர் எழுந்து நடந்த கதையைப் பதிவு செய்துள்ளார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது எனது மனமும் ஒரு நிமிடம் கலங்கித்தான் போனது. இந்தக் கட்டுரையின் மூலம் மன உறுதியுடன் கூடிய இறை நம்பிக்கையானது வாழ்க்கையின் எந்தத் துயரமான கட்டத்தையும் கடக்க வைக்கும் என்பதை மிகவும் அருமையாகச் சொல்லி நிற்கின்றார்.

கை, முதுகு, கழுத்து என்று உடல் முழுவதுமான காயங்களோடு கால் எலும்பு முறிந்து இரண்டு வருடங்களாக எழுந்திருக்க முடியாமல் சக்கர நாற்காலியே கதியென்றிருந்தவருக்கு  மீண்டும் பழைய நிலைக்கு வர முடியுமா என்று தெரியாத சந்தர்ப்பத்திலும் இறைவனின்  கருணையில் நம்பிக்கையை இழக்காத நிலையில் தொடர்ந்து பிரார்த்தனை செய்து உடல்நிலை தேறி மறுபடியும் பழைய நிலைமைக்கு மாறி வந்த கதையை வாசிக்கும் போது உண்மையில் எனது மேனியும்  புல்லரித்துப் போய்விட்டது. சோதனைகள் பலவற்றையும் ஈமானை பலப்படுத்தும் செயற்பாடாக பார்க்கும் நூலாசிரியரின் மனப்பாங்கு எமது ஈமானையும் அதிகரிப்பதாக அமைந்துவிடுகின்றது.

'பாதை தவறிய பயணம்' (பக்கம் 32)  என்ற தலைப்பில் அமைந்த அனுபவக் கட்டுரையும் ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருவதாகவே அமைந்துள்ளது. நியூசிலாந்திலுள்ள மிக உயரமான 'மவுண்ட் குக்' என்ற மலையின் இடைக்கிடையே இருக்கும் குன்றுகளில் ஏறி அழகிய இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வது வழக்கம். அங்கிருக்கும் ஒரு குன்றுவரை பயணித்து, பனிப்பாறையைப் பார்க்கும் ஆசை நம் நூலாசிரியருக்கும் ஏற்படவே தனது கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் பலருடன் பயணத்தை ஆரம்பித்த பொழுதொன்றில் பாதி தூரத்தைக் கடக்க முன்பே கூட வந்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அதற்குக் காரணம் நூலாசிரியரின் உடல்நிலை சற்று இந்தப் பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமைதான். நூலாசிரியருடன் வந்த நண்பர்கள் மெல்ல மெல்ல நடந்து செல்ல விரும்பவில்லை. அவர்கள் அவசரமாகச் சென்றே இயற்கைக் காட்சிகளை இரசிக்க விரும்பினார்கள்.

வேறு வழியில்லாத நிலையில் மிகவும் களைத்துப்போன  நிலையில், தாங்க முடியாத முட்டுக்கால் வலியுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மனோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இறையோனைப் பிரார்த்தித்து, மலை அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை மட்டும் பார்த்துவிட்டு கணவர் மற்றும் தெரிந்தவர்களின் துணையோடு நம் நூலூசிரியர் திரும்பிவிட்டார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது மனிதர்களை நம்பிப் பயனில்லை. ஆனால் இறை நம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும் என்ற ஒரு புதுத் தெம்பை விதைத்துச் செல்கின்றது.

இதுவரை மிகுந்த துயரத்தோடும், மேனி சிலிர்க்கின்ற வகையிலும், ஆச்சரியத்தோடும் கட்டுரைகளை வாசித்து வந்த எனக்கு 'உங்கள் கணவருக்கு எத்தனை மனைவிகள்..?' (பக்கம் 43) என்ற கட்டுரைத் தலைப்பு ஒரு சுவாரஷ்யத் தன்மையை ஏற்படுத்தியது. இந்தக் கேள்விக்கு என்ன பதிலைத்தான் எழுதி இருப்பார் என்று யோசித்துக் கொண்டே கட்டுரையை வாசித்தேன். விரிவுரை மண்டபத்தில் மாணவர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியே இது. அதற்கு இவர், 'சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பலதார மனம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறதே தவிர அது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு செயல் அல்ல' என்று மிகவும் அழகாகப் பதில் சொல்லியுள்ளார்.

ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஆண், இன்னொரு பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்ய நேரிட்டால் அந்த ஆணின் கடமைகள் என்ன என்பதையும், அந்தப் பெண்ணின் உரிமைகள் என்ன என்பதையும், முக்கியமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்பு பற்றியும் தெளிவாக முன்வைத்து, ஒரு முஸ்லிம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு குழந்தையும் 'தனக்கு தந்தையின் பெயர் தெரியாது' என்று முறையிடக்கூடிய அவலம் நேர வாய்ப்பில்லை என்பதையும் தெளிவாக மாணவர்களிடம் விளக்கியுள்ளார்.

'தவறிப்போன மரணம்' (பக்கம் 50) என்ற திகில் கட்டுரையானது தலைப்புக்குள் நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்தக் கட்டுரைக்குள் வரும் ஒற்றைக் கதாநாயகியான அந்தப் பெண்ணுக்கு இறுதியில் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி கட்டுரை மீதான முடிவு இன்னும் நீள வேண்டும் என்ற மனோ பாவத்தை ஏற்படுத்தி நிற்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

'வியாபாரிகள் அற்றக் கடைகள்' (பக்கம் 60) என்ற கட்டுரையை வாசிக்கும் போது ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற ஒரு உணர்வு தொற்றிக்கொள்கின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் கூட பொருட்களை திருடிச் செல்கின்ற ஒரு சூழலில் வசிக்கின்ற எமக்கு இந்தக் கட்டுரை புதுமையான விடயத்தைச் சொல்லி நிற்கின்றது. இப்படியும் சாத்தியமா என்று நினைக்கத் தோன்றுகின்றது. 'பொய்யும் ஏமாற்றமும் களவும் ஊறிப்போன ஒரு சமூகத்தில் வியாபாரிகள் அற்ற கடைகள் என்ற கோட்பாடு வெறும் கனவாகவே இருக்கும். ஆனால் மனச்சாட்சியை மதித்து வாழப் பழகிக்கொண்டால் இதுவும் சாத்தியமே' என்ற நூலாசிரியரின் வரிகள் அந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்தி, தான் கண்ட யதார்த்தத்தை சிறப்பாக முன்வைத்துள்ளார்.

'அதிசயத் தீவு' (பக்கம் 71) என்ற கட்டுரை கடல் கடந்து ஒரு குட்டித் தீவைப் பார்க்கப் போன விடயத்தைப் பேசுகின்றது. மினி பஸ்ஸின் அளவுகூட இல்லாத, குட்டியாக ஒரு வேனில் பறப்பது போன்ற உணர்வைத் தரக்கூடிய ஒன்பது பேரை மட்டுமே சுமந்து செல்லக்கூடிய ஒரு சிறிய விமானத்தில் குட்டித் தீவைப் பார்க்கப் பயணித்த கதையை நூலாசிரியர் பயம், பதட்டம், உற்சாகம் கலந்து முன்வைத்துள்ளார். இந்தக் கட்டுரை முழுவதையும் வாசித்த போது 'அண்டாட்டிக்கா'வுக்கு அருகில் உள்ள 'ஸ்டீவர்ட் ஐலண்ட்' என்ற அந்த அழகிய தீவைப் நாமும் பார்த்துவிட்டு வந்தது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது. எல்லாற்றையும்விட இந்தத் தீவில் திருடர்களே இல்லை என்ற செய்தி மகிழ்ச்சி தருகின்றது.

'வீட்டைச் சுமந்து செல்லல்' (பக்கம் 115) என்ற கட்டுரையானது மிகவும் ஆச்சரியமான ஒரு தகவலைக் கூறி நிற்கின்றது. அதாவது நியூசிலாந்தில் வீடுகள், ஹோட்டல்கள் போன்றவை இடமாற்றம் செய்யப்படுகின்றதாம்.  நியூசிலாந்தில் வீடுகள் எப்போதும் நிலத்திலிருந்து கொஞ்சம் உயரமாக இருக்குமாம். அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பாதுகாப்புக் கருதியே இவ்வாறு பலகை வீடுகள்  அமைக்கப்படுகின்றதாம். இப்படி நிலநடுக்கம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் வீடுகளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் மாற்றுகிறார்களாம். நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் அமைந்துள்ள 40 விருந்தினர் அறைகளைக் கொண்ட ஒரு ஹோட்டல் கூட ஒரு தளத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறதாம். இதுபோன்ற தகவல்களை இந்தக் கட்டுரை எமக்கு எடுத்தியம்புகின்றது.

இலக்கிய இரசம் சொட்டும் இவருடைய எழுத்துக்கள், நிச்சயமாக வாசகர்களை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. பொதுவாக இவருடைய படைப்புகளை நோக்கும் போது அவை சமூகத்துக்குத் தேவையான, முக்கியமான கருத்துகளை முன்வைப்பதாகவே அமைந்துள்ளன. 'என் மேல் விழுந்த மழைத்துளிகள்' என்ற அனுபவக் கட்டுரைகளானது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளன. மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்துள்ள இந்த நூலானது வாசகர்களான எமக்கு சிறந்த ஆலோசனைகளையும், நல்ல படிப்பினைகளையும் தருகின்றன என்பதைத் துணிந்து கூறலாம். எனவே இவருடைய இந்தக் கட்டுரைத் தொகுதி இலக்கிய வாசகர்கள் அனைவரையும் நிச்சயமாகக் கவரும். இருந்தாலும் ஒன்றைக் குறிப்பிட வேண்டியது தவிர்க்க முடியாதுள்ளது. நூல் வடிவமைப்பில் இன்னும் கூடிய கரிசனை காட்டியிருக்கலாம். அதிலும் குறிப்பாக பந்தி பிரித்தல் போன்ற முக்கியமான விடயத்தை நல்ல அவதானிப்புடனே செய்திருக்க வேண்டும். அடுத்த வெளியீடு இன்னும் சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே இங்கு இதனைக் குறிப்பிடுவது அவசியமாகின்றது. இறுதியாக தொடர்ந்தும் பல காத்திரமான இலக்கிய நூல்களை வாசகர்களுக்குத் தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன், கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாஃபி அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.

நூல் :- என்மேல் விழுந்த மழைத்துளிகள்
நூல் வகை :- அனுபவக் கட்டுரைகள்
நூலாசிரியர் :- மரீனா இல்யாஸ் ஷாஃபீ
வெளியீடு :- வளர்பிறை பதிப்பகம்
விலை :- 800 ரூபாய்



நூல் விமர்சனம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

156. 'இப்படிக்கு என் இதயம்' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

 மாவனல்லை பாத்திமா சில்மியாவின் 

'இப்படிக்கு என் இதயம்' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்


நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஏட்டுலா கனவாக்கத்தின் மூன்றாவது நூல் வெளியீடாக மாவனல்லையைச் சேர்ந்த இந்த பாத்திமா சில்மியாவின் 'இப்படிக்கு என் இதயம்' என்ற கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பாத்திமா சில்மியா இலக்கியத் துறையில், அதிலும் கவிதைத் துறையில் அதிக ஆர்வம் காட்டிவரும் ஓர் இளம் தலைமுறைக் கவிஞராவார். 124 பக்கங்களை உள்டக்கியுள்ள இந்த நூலை சிறியதும் பெரியதுமான கவிதைகள், கவித்துளிகள் உட்பட 120 கவிதைத் தலைப்புகள் அலங்கரிக்கின்றன.

பக்கம் 29 இல் அமைந்துள்ள 'வெள்ளைச் சீருடை நாட்கள்' என்ற கவிதை பாடசாலைக் காலத்து நினைவுகளை மீட்டி மனதில் சந்தோஷத்தை நிறைக்கின்றது. எவ்வளவு  காலம் கடந்து போனாலும் பாடசாலைக் காலத்தை நினைக்கும் போது மனதில் ஒரு புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்பட்டு மனது சந்தோசத்தால் நிரம்பி வழியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உங்களின் இரசனைக்காக இந்தக் கவிதையின் வரிகள் இதோ:-


மீட்டிப் பார்க்கிறேன்

என் மனக் கண்ணில்

வெள்ளைச் சீருடையில் 

சுற்றித் திரிந்த - அந்தப் 

பொக்கிஷமான காலத்தை! 


அன்பான பரிமாறல்கள் 

செல்லச் சண்டைகள் 

குறும்பு சேட்டைகள் 

முடியக் காத்திருக்கும் 

பாடவேளைகள் 

பாசம் நிறைந்த கண்டிப்புகள்! 


புத்தகப்பை மட்டுமே 

சுமையாகத் தெரிந்த 

அழகிய நாட்கள் 

வராதோ மீண்டும் 

நம் வாழ்வில்!


தன்னைப் பெற்ற தாய்க்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த நூலில் தாய் பற்றிய 'அன்புள்ள அம்மாவுக்கு' (பக்கம் 32), 'கர்ப்பம் முதல் கல்லறை வரை' (பக்கம் 49) ஆகிய இரண்டு கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் பக்கம் 32 இல் அமைந்துள்ள 'அன்புள்ள அம்மாவுக்கு' என்ற கவிதை பெற்ற தாயின் தியாகத்தை இயம்புவதாய் அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அன்பிற்கும் ஆதாரமாகத் திகழ்வது தாயின் அன்பாகும். தாயன்பிற்கு ஈடு இணை இல்லை. எத்தனை பெரியவர்களாக வளர்ந்த போதும் ஒரு தாய்க்கு தன் பிள்ளை குழந்தை போன்றே தோன்றும். தாய் பற்றிய தனது உள்ளத்து உணர்வை இக்கவிதையின் பின்வரும் வரிகளில் பிரதிபலிக்கிறார் நூலாசிரியர்.


ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து

என் சிரிப்பிலே மனம் மகிழ்ந்து

பசி தாகம் துறந்து களைப்பும் மறந்து

எனக்கெனவே அர்ப்பணித்த 

என் அன்பின் அன்னையே!


என் செய்வேன் - உனக்கான

கடன் அடைத்திட நான்

ஈடாகுமோ உன் சேவைக்கு

அவனியிலே ஏதும்!


இந்த உலகத்தில் எல்லோரும் இன்னொருவரை சார்ந்தே வாழ வேண்டி இருக்கிறது. நாம் அன்றாடம் காணும் ஒவ்வொன்றும் நமக்கு ஒரு புதிய பாடத்தை நிகழ்த்துகிறது.  ஒவ்வொரு ஜீவராசியிடம் இருந்தும் ஒரு புதிய விடயத்தை நாம் தினமும் கற்றுக் கொள்ளும் படியே இயற்கை அமைந்திருக்கிறது. ஆம் அன்றாடம் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயங்களில் இருந்தும் ஒவ்வொரு சம்பவங்களிலிருந்தும் சில பாடங்களைக்  கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கையை நாம் சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும். கவிஞர் 'கற்றுக்கொள்' (பக்கம் 33) என்ற தன் கவிதையில் கூறும் விடயங்கள் எமக்கும் நெருக்கமான விடயங்களாகவே அமைந்துள்ளன. கவிஞர், தனது அனுபவத்தில் தான் கண் கூடாகக் கண்டவற்றை பின்வரும் வரிகளினூடாக ஆழமாகப் பதிவு செய்கின்றார்.


பொறுமையைக் கற்றுக்கொள் 

எல்லா சுமைகளையும் தாங்கிடும் பூமியிடம்

விடாமுயற்சியைக் கற்றுக்கொள்

ஓயாது அலை வீசும் கடலிடம்!


சுறுசுறுப்பைக் கற்றுக்கொள் 

ஓய்வில்லாமல் இயங்கும் தேனீக்களிடம்

நம்பிக்கையை கற்றுக்கொள்

பசியுடன் சென்று

இறையுடன் கூடு திரும்பும் பட்சிகளிடம்!


அவதானத்தைக் கற்றுக்கொள் 

தொலைதூரத்திலிருக்கும் இரையை

இலக்கு வைக்கும் பருந்திடம்!


பக்கம் 35 இல் உள்ள 'வா - சிக்கலாம்' என்ற கவிதையின் மூலம், வாசிப்பு மழுங்கிப் போன இக்காலத்தில் இணையத்தில் மணிக் கணக்கில் மூழ்கி நேரத்தைக் கழித்துவிடும் மனோபாவம் கொண்ட இளைய தலைமுறையினருக்கு சிந்தித்துப் பார்ப்பதற்கு முக்கியமான, மிகவும் அருமையான கருத்தை முன்வைக்கிறார் கவிஞர். வாசிப்பு என்பது இன்று செயல் வடிவம் அற்றதாக ஆகிவிட்டது. நூல் ஒன்றை பிரித்து வாசிக்கும் அந்த சுகானுபவம் இன்றைய இளையோர்களுக்கு இருக்கின்றதா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு தொலைபேசியும் இணையமும் மனிதர்களைத் தன்வசம் ஈர்த்துக் கொண்டுவிட்டது. இதிலிருந்து இனி உலகம் மீண்டுவிடும் என்ற நம்பிக்கைச் சுடர் அணைந்து விடும் காலம் வெகு தூரத்திலில்லை. அந்த ஆதங்கத்தை நூலாசிரியரின் கவிதை இவ்வாறு கோடிட்டுக் காட்டுகின்றது.


வாசிக்கலாம் என்கிறது 

புத்தகம்..

வா சிக்கலாம் என்கிறது 

கைப்பேசி..


ஒன்றில் நாம் 

தொலைந்து  விடுவோம்..

மற்றையது நம்மைத் 

தொலைத்து விடும்..


காகிதமோ தொடுதிரையோ 

சிக்குவது எதிலாயினும் 

பிரதிபலன் - பாவனை 

முறையைப் பொறுத்தே!


பக்கம் 68 இலுள்ள 'சாயங்கள் தருவாயா?' என்ற கவிதையானது அழகியல் பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் பாங்கு சிலாகிக்கத்தக்கது. தன் மனதில் தோன்றிய ஒரு உருவத்திற்கு இயற்கையிடம் வர்ணங்களைக் கேட்டு நிற்கின்றார் நூலாசிரியர். இவரது கற்பனைத்திறன் இந்தக் கவிதையினூடாகப் புலப்படுகின்றது.

மணக்கண் தோன்றிய ஓர் ஓவியத்திற்கு உருவம் கொடுக்க நினைக்கின்றேன்.. அதற்கு வர்ணம் தீட்ட சாயங்கள் மட்டும் இயற்கையிடம் வேண்டி நிற்கின்றேன்.. இரா வானின் இளவரசனாகிய பால் நிலாவிடம் கொஞ்சம்.. மங்கையவள் கயல் விழியின் கண்மணியிடம் கொஞ்சம்.. நறுமுகையோடு மலர்ந்திடும் செவ்விதழ் ரோஜாவிடம் கொஞ்சம்.. கற்பாறையைப் பிளந்து துளிர்விடும் இளந்தளிரிடம் கொஞ்சம்.. நீந்தும் மேகங்கள் நிலவிடும் நீலவானிடம் கொஞ்சம்.. பொழுது சாய பொற்கரம் நீட்டும் செங்கதிரவனிடம் கொஞ்சம்.. மழை மறைய மெல்லமாய் முகம் காட்டும் வானவில்லிடம் கொஞ்சம்.. இயற்கையுடன் ஒன்றித்த எனது ஓவியம் வெளுத்திடாதல்லவா..? என்று கவிஞர் கேட்கும் பாங்கு இரசிக்கத்தக்கது.

'இப்படிக்கு என் இதயம்' என்ற இந்த நூல், நூலாசிரியர் சில்மியாவின் கன்னி முயற்சி. இனிவரும் காலங்களில் இன்னும் கனதியான கவிதைத் தொகுதிகளை இவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு, நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்!!!


நூல் - இப்படிக்கு என் இதயம்;

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - பாத்திமா சில்மியா

வெளியீடு - ஏட்டுலா கனவாக்கம்;

விலை - 650 ரூபாய்




நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



155. கா.சி. தமிழ்க்குமரனின் 'ஊமைத் துயரம்' சிறுகதைகள் நூல் கண்ணோட்டம்

கா.சி. தமிழ்க்குமரனின் 'ஊமைத் துயரம்' சிறுகதைகள் நூல் கண்ணோட்டம்


நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.


தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம் சென்னம்பட்டி கரிசல் பூமியில் 1965.11.27 இல் பிறந்தவர் தமிழ்குமரன் அவர்கள். தனது பள்ளிப்படிப்பை தூத்துக்குடியிலும், கல்லூரிப் படிப்பை அருப்புக்கோட்டையிலும் முடித்துள்ளார். மனிதநேயம் மிகுந்த மனிதராகவே இவர் அண்மையில் எனக்கு அறிமுகமாகினார். அதற்கான ஒரு பிரத்தியேக காரணமும் இருக்கின்றது. அவருடைய ஊமைத் துயரம் (2023), மாயத்திரை (2008), பொலையாட்டு (2018), மந்தைப்பிச்சை (2024) ஆகிய ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும் ஒறுப்பு (2024) என்ற நாவலையும் கூடவே, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கருவாச்சி காவியத்தையும் தனது சொந்தச் செலவில் இந்தியாவிலிருந்து எனக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து இப்படி புத்தகங்களை செலவு செய்து அனுப்புவதற்கு ஓர் அலாதியான மனம் வேண்டும். அந்த நல்ல மனம் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. வாசிப்பின் மூலம் மனதை ஆறுதல்படுத்திக்கொள்ளும் எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

அப்படி அங்கிருந்து அனுப்பப்பட்ட புத்தகங்களில் ஒன்றுதான் இந்த 'ஊமைத் துயரம்' என்ற இவருடைய சிறுகதைகளடங்கிய நூலாகும். இந்தத் தொகுதி கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறந்த தொகுப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. அத்துடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் தமிழ் முதுகலை மாணவருக்கு பாட நூலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு வருடம் பாடத்திட்டத்தில் இருந்தது என்பதும் பாராட்டத்தக்க விடயமாகும். ஊமைத் துயரம் என்ற இந்த நூல் நான்காவது பதிப்பாக அண்மையில் கதவு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நூலை தனது அன்பிற்கினிய அப்பா அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்து ஆரம்பித்துள்ளார் கா.சி. தமிழ்க்குமரன். ஊமைத் துயரம் என்ற இந்த சிறுகதை நூலானது கரிசல் காட்டின் இன்றைய கோலத்தைப் படம் பிடித்துக் காட்டும் வகையான கதைகளையும் உள்ளடக்கியே வெளிவந்துள்ளது. பெரும்பாலும் தண்ணீர் இல்லாத கரிசல் காட்டில் விவசாயம் செய்து பிழைத்து வாழும் மக்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் வகையிலான சில கதைகள் இந்த நூலில் இடம்பிடித்துள்ளன. மொத்தத்தில் கரிசல்காட்டு விவசாயிகளின் மனங்களை வெளிப்படுத்தும் முறையிலேயே இக்கதைகள் பின்னப்பட்டுள்ளன. நூலாசிரியரின் 16 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளடக்கம் பெற்றுள்ளன. 

கா.சி. தமிழ்க்குமரன் அவர்கள் தாய் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக பல சிறுகதைத் தொகுதிகளையும் ஒரு நாவலையும் வெளியிட்டு இலக்கிய உலகிற்கு வலுச் சேர்த்துள்ளார். இவர் கதை சொல்லும் கலையில் நன்கு தேர்ந்தவர் என்பதை இவரது கதைகள் உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

சிவகாசியைச் சேர்ந்த சா. தமிழ்ச்செல்வன் அவர்கள் கா.சி. தமிழ்க்குமரனின் சிறுகதைகள் குறித்து குறிப்பிடும் பொழுது, 'முதல் தொகுப்பின் அவருடைய எழுத்திலிருந்து இந்தக் கதைகள் ஒரு பாய்ச்சல் வேக முன்னேற்றம் கண்டுள்ளன. கதை சொல்லும் முறையிலும் மொழியிலும் வரவேற்க வேண்டிய முன்னேற்றம். வண்ணதாசன் கதைகளில் வருவது போல சின்னச் சின்ன அசைவுகள் நிகழ்வுகளையும் இக்கதைகளில் நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கின்றார்' என்று சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்.

இளைஞர்கள் கிராமங்களை விட்டு வெளியேறி வேறு பல வேலைகளுக்குப் போய்விட்ட நிலையில் விவசாயம் இன்று படிக்காத இளைஞர்கள் மற்றும் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் பிரச்சினை என்றாகிவிட்ட உண்மையை இவருடைய இக்கதைகள் வலியுறுத்தி நிற்கின்றன.

பேராசிரியர் முனைவர் த. கண்ணா கருப்பையா அவர்களின் பின்வரும் குறிப்பு இங்கு நோக்கத்தக்கது. 'கா.சி. தமிழ்க்குமரனின் ஊமைத் துயரம் என்ற சிறுகதைத் தொகுப்பானது 16 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதியாக அமைந்திருந்தாலும் அப்புனைவுகளின் தளம் என்பது கிராமத்து மண்ணியலின் மீதாகவே பயணித்துள்ளது. மேலதிகமாகவே மண்ணியல் சார்ந்த சூழலையும் மனிதர்களையும் குறிப்பாக முதியோர்களின் பாடுகளையும் அழுத்தமாகவே பதிவிட்டுள்ளார். முதுமையின் பாடுகளை எடுத்துக்காட்டும் பொழுது அவர்களுக்கான சமூக இடர்பாடுகளோடு அம்முதிய மனித உணர்வுகளின் பரிமாணங்களையும் பதிவிட்டிருப்பது சிறுகதையாளரின் கிராமிய ஈர்ப்பையும் கரிசனத்தையும் புரிந்துணர முடிகின்றது' 

பொலி (பக்கம் 15) என்ற தலைப்பில் அமைந்த முதலாவது கதை மிகவும் அருமையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கதாசிரியர் என்பதற்கு அப்பால் விவசாயத்தை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி அட்டகாசமாக கதையைத் தொடங்க முடியும். வாசகரின் இரசனைக்காக இங்கே கதையின் தொடக்கப் பந்தியினை அப்படியே தருகின்றேன்.

'கணபதி தெக்காட்டைப் பாத்துப் பாத்துப் பூரித்துப் போனான். என்ன போட்டாலும் வெளயும் பூந்துரைக் கரிசல். நச்சதுரமாய் நாலேக்கர். ரெண்டேக்கர் வீரியக் கம்பும் ரெண்டேக்கர் மக்காச் சோளப் பயிரும் சும்மா கன்னங்கரேர் என்று இருந்தது. எந்தக் காட்டுக்கு வேலைக்குப் போனாலும் வேலை முடிஞ்ச பிறகு பொழுது அடையும் நேரமாயிட்டாலும்கூட தெக்காட்டைப் பார்க்காமல் வீடு திரும்ப மாட்டான். வெதச்சு முடிச்சதில் இருந்து தெக்காட்டுமேல அப்படி ஒரு நம்பிக்கை. தன் வாழ்வில் வளம் சேர்க்க வரும் தனலட்சுமி இந்தக் காட்டில் தங்கியிருந்து வீடு வரப் போவதாய் ஒரு நம்பிக்கை. அவன் நெனப்பு மாதிரியே மத்த எல்லார் காட்டைக் காட்டிலும் ஒரு படி எச்சாய் இருந்தது தெக்காடு..'

இந்தக் கதையில் வரும் கணபதிக்கு தெக்காட்டுமேல் அப்படி ஒரு பிடிப்பு. அதனால்தான் தினமும் போய்த் தெக்காட்டைப் பார்த்து வருவான். ஆனால் அவனது வீட்டுக்காரிக்கோ கணபதி தெக்காட்டைத் தினமும் போய்ப் பார்ப்பதில் சற்று எரிச்சலாக இருந்தது. அதனால்தான் அவள்,

'தெனமும் போயி பாக்க நஞ்சையா கெட்டுப் போச்சு..? ஏன் நாலு நாளைக்கு ஒருக்கா போயி பாத்தா ஆகாதா? என்ற கேள்விக்கணையால் கணபதியைத் துளைத்தெடுத்தாள்.

இப்படி கதையில் வரும் கிராமிய மனம் கமழும் விவசாயச் சொல்லாடல்கள் மிகவும் அருமையாக வெளிப்பட்டு நிற்கின்றது. இந்தச் சொல்லாடல்களுக்காகவே கதையை மிகவும் ஆர்வமாய் வாசிக்கத் தோன்றுகின்றது.

'வேகமாய் வீசிய காற்றில் பயிர்கள் தரையை முத்தமிட்டு எழுந்து நின்று கண் சிமிட்டின. அவற்றைப் பிடித்து தொட்டு வருடிக் கொடுக்க வேண்டும்போல் ஆசைப்பட்டது மனசு வழக்கம் போல்' என்று இவருடைய கதையில் சொல்லப்படுவது போல வாசகராகிய எங்களுக்கும் பயிர்ச்செய்கை மேல் ஒரு வகையான பிடிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைகின்றது.

பொலி கதையின் இறுதிப் பகுதியில் மழை பொய்த்துப் போன பொழுது ஒன்றில் மிகவும் கவலையோடு இருந்த கணபதி தனது கோபத்தை அவனது மனைவிக்கு காட்டிவிட்டான். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய அரசாங்கம், கணபதியின் ஊர் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமையவில்லை என்ற காரணத்தைக்கூறி நிவாரணம் வழங்க முன் வரவில்லை என்ற விடயம் வாசகராகிய எம் மனதையும் கனக்கச் செய்கின்றது. 

'கவலைய விடுய்யா கவுருமெண்டு துட்டு குடுக்குமுன்னா நாம வெதச்சோம். இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம் வெளஞ்சுட்டு போகுது. இதுக்குப் போயி மூஞ்சிய தொங்கப் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கே' என்ற மனைவியின் நம்பிக்கை வார்த்தையால் கணபதி ஆறுதலடைவதாய் கதை நிறைவடைகிறது.

கரிசக்காட்டு நிலத்தில் பயிர் செய்கின்ற ஒரு சாதாரண விவசாயி எதிர்கொள்ளும் துன்ப, துயரங்கள், கஷ்டங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை 'பொலி' என்ற இக்கதையில் மிகவும் சிறப்பாக முன்வைக்கப்பட்டுள்ளன.

பக்கம் 33 இல் அமைந்துள்ள 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்ற சிறுகதை மனதை கணக்கச் செய்கின்ற ஒரு கதையாகும். இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று மூன்று குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்தாலும் லட்சுமிப் பாட்டி, தனது வயதான காலத்தில் கிராமத்திலுள்ள பழைய நீளமான கல் வீட்டில் தனியாக வாழ்வது மனதுக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது.

தொழிலுக்காக கனடா நாட்டுக்குச் சென்ற மூத்த மகன் வெள்ளைக்காரியான வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்தான். இளைய மகனும் ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து காஷ்மீரிலேயே தஞ்சமடைந்தான். லட்சுமிப் பாட்டியின் கடைக்குட்டியான அருமை மகளும் திருமணமுடித்து பெங்களூரிலேயே வசித்து வந்தாள்.  

கடைசிப் பிள்ளைகள் இருவரும் அண்ணன் கனடாவிலிருந்து விடுமுறையில் வரும் நாளைப் பார்த்தே ஒரு மாத விடுமுறையில் தாயைப் பார்ப்பதற்காக வீடு வந்து சேர்வார்கள். மூத்தவனுக்கு குகன், லயா ஆகிய இரண்டு பிள்ளைகள், இளையவனுக்கு சூர்யா என்ற ஒரு மகன், கடைக்குட்டி மகளுக்கு மேகலை என்ற ஒரு மகள். இந்த மூன்று குடும்பமும் பிள்ளை குட்டிகளோடு வீடு வந்திறங்கியதும் ஊரே அடங்கிப் போகும்.

இந்தக் கதையில் சொல்லப்படுவது போல விடுமுறையில் வந்த பிள்ளைகளின் செல்வங்களான குகன், சூர்யா ஆகிய பேரப் பிள்ளைகள் லட்சுமிப் பாட்டியின் வீட்டில் முன் கட்டுக்கும் பின் கட்டுக்குமாய் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை நினைத்துப் பார்க்கும்போது எனது மனதும் சந்தோசத்தில் குதூகலிக்கின்றது. 

லட்சுமிப் பாட்டியின் மூத்தவனுக்கு குகனும் லயாவும். லயா பிறந்த போது, 'அம்மா உங்களைப் போலவே உங்க பேத்தி இருக்காம்மா..' என்று மூத்தவன் சொன்னபோது லட்சுமிப் பாட்டிக்கு கண்ணில் நீர் தழும்பியது. மூத்தவன் அம்மாவின் லட்சுமி என்ற பெயரில் உள்ள 'ல' என்ற முதல் எழுத்தைத் தேர்ந்தெடுத்தே 'லயா' என்று தனது மகளுக்குப் பெயர் வைத்துள்ளான் என்பதை மிகவும் பெருமையாக சொல்லிக்கொள்வான்.

'என்ன பெரியாத்தா.. பேரப்பிள்ளைக வந்திருக்காப் போல இருக்கு..'

லட்சுமிப் பாட்டிக்கு முகம் கொள்ளாச் சிரிப்பு. கிடைத்தற்கரிய பேறு பெற்றார்போல் அவ்வளவு ஆனந்தம். மனசெல்லாம் பூரித்துப் போய்,

'ஆமாத்தா நேத்துத்தான் வந்தாக.. ஒண்ணுக்குள்ள ஒண்ணு ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்குறாகல்ல. அதான் துள்ளித் திரியுறாக..'

கேட்டவள் உடனிருந்தவளிடம், 'அந்தப் பிள்ளைகளைக் காட்டிலும் இந்தக் கெழவியப் பாரேன்.. ஆனந்தத்துல பூரிச்சுப்போய்க் கெடக்குது.. மொகத்தப்பாரு அம்புட்டுச் செவந்து போய்க்கெடக்கு..' 

'பின்ன இவ்வளவு காலமா இதே பேச்சுத்தானே.. வருசம் ஒருக்கா வந்துட்டுப் போறதுக.. இருக்கத்தானே செய்யும்..'

மேற்படி உரையாடலின் மூலம் லட்சுமிப் பாட்டியின் மனது நிறைந்த சந்தோஷம் எமக்கும் புலப்படுகின்றது.

தான் பெற்ற பிள்ளைகளுடனும், தனது பேரப் பிள்ளைகளுடனும் ஒரு மாதம் எப்படித்தான் வேகமாகக் கழிந்தது என்று லட்சுமிப் பாட்டிக்குப் புரியவில்லை. விடுமுறையின் கடைசி நாட்களில் மூத்தவன் மெதுவாக அம்மாவிடம் கேட்டான், 'இனிமேல் நீங்க தங்கச்சிகூட இருந்தா நல்லதுன்னு நாங்களெல்லாம் நெனக்குறோம். நீங்க என்ன சொல்றீங்கம்மா..?'

கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் பேரக் குழந்தைகளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டபின், 'இல்லப்பா நான் இங்கே இருக்கேன்..'

'ஏம்மா..?' மீண்டும் பிள்ளைகள் கேட்க,

தனது கணவன் தன்னை விட்டுப் போய் பத்து வருசத்துக்கு மேலாகிக் காலம் கடந்தாலும் அந்த நினைவுகளுடன் மனம் பதைபதைக்க ஏக்கமாய், 'உங்க அப்பா இருந்த இடம்.. அவரு நடந்த மண்.. அவரோட மூச்சுக் காத்து, அவரோட பேச்சு எல்லாம் சுத்திகிட்டே இருக்கிற இடம்.. இதை விட்டுட்டு நான் எப்படிப்பா வர முடியும்..?' என்ற லட்சுமிப் பாட்டியின் எதிர்க் கேள்வியால் நானும் ஆடிப் போய்விட்டேன்.

இந்த விடுமுறையும் கடந்து பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் போய்விட்டார்கள். அடுத்த விடுமுறை எப்போ வரும் என்று தன் குழந்தைகளுக்காகவும் பேரக் குழந்தைகளுக்காகவும் காத்துக் கிடக்கும் அம்மாக்களின் துயரம் மிகவும் கொடுமையானது. இந்தக் கதை மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி எனது கண்களைக் கலங்கச் செய்த கதையாகும். கதாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

பக்கம் 65 இல்  அமைந்துள்ள 'வெடி' என்ற சிறுகதையில் தீபாவளி தினத்தன்று தன்னை ஒத்த அதே வயதுச் சிறுவர்களுக்கு மத்தியில் 'யானை வெடி' வெடிக்க ஆசைப்படும் சிறுவன் ராமுவின்  அப்பாவித் தனமான மனம் வெளிப்பட்டு நிற்கின்றது. இந்தக் கதையில் வரும் ராமுவும் எல்லாச் சிறுவர்களையும் போலவே அழுதழுது, கண்ணீர் வடித்து காரியங்களைச் சாதிக்கும் கலையை நன்கு தெரிந்து வைத்துள்ளான். சிறுவர்களின் மனதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகின்ற அருமையானதொரு சிறுகதையாகவே இந்தக் கதை அமைந்துள்ளது.

பக்கம் 73 இல் அமைந்துள்ள 'அன்பிற்கும் உண்டோ...' என்ற கதையானது தனது மனைவியை இழந்து தவிக்கும் தாத்தா சுப்பையாவுக்கு தனது மகன் மூலமாகக் கிடைத்த பேத்தி சந்திராவே மிகவும் ஆறுதலாக அமைந்து, அவருடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினாள். தனிமரமான சுப்பையாவின் மனதை, காலஞ்சென்ற அவருடைய மனைவியின் நினைவுகள் ஆக்கிரமித்து இருந்தாலும் பேத்தி சந்திராவே தனக்கு ஆறுதலாகவும் ஒத்தடமாகவும் இருப்பதாக நினைத்து மனம் நிறைந்து போனார். இப்படி இருப்பவரிடம்,

'அப்பா சந்திராவை டவுனில் உள்ள பெரிய ஸ்கூல்ல ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வைக்கலாமுன்னு முடிவு செஞ்சிருக்கோம்' என்று மகன் சொன்னதும் ஆடிப் போனார் சுப்பையா. உலகமே தன் காலைவிட்டு நகருவது போல் மிகவும் துடித்துப் போனார்.

'ஏம்ப்பா இங்கதான் எட்டு வரைக்கும் இருக்கே..'

'இல்லப்பா.. இப்ப போட்டி உலகமாயிடுச்சு. எல்லா இடத்திலேயும் மார்க்குதான் பேசுது. அதுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரணுமில்லையா. அந்த ஸ்கூல்ல வருசத்துக்கு பத்து பேருக்கு மேல மெடிக்கலுக்கும் முப்பது பேருக்கு மேல என்ஜினியரிங்குக்கும் போறாங்க. சீட் கிடைக்கிறதே கஷ்டம். எப்படியோ ஆள் பிடித்து சீட்டை உறுதிப்படுத்திட்டேன்..' என்று மகன் முடிவில் உறுதியாய் இருந்தான்.

இருந்தாலும் பிறகு அப்பாவுக்கு இந்த வயசான காலத்துல இருக்கிற மகிழ்ச்சி, தெம்பு, தைரியம் எல்லாம் சந்திராதான், படிப்புங்கிற பெயரால இருவரையும் பிரிச்சோமுன்னா அப்பா நிம்மதியை இழந்திடுவார் என்பதை நன்கு உணர்ந்த மகன், சந்திராவின் படிப்பும் கெடாமலிருக்கவும் அப்பாவைவிட்டு சந்திரா பிரியாமலிருக்கவும் நன்கு சிந்தித்ததால் எல்லோருக்கும் சேர்த்து, 'டவுனில் வாடகைக்கு வீடு பார்த்துட்டேன்' என்று கூறுவது கதையை வாசிக்கின்ற எங்களுக்கும் பெரிய ஆறுதலைத் தருகின்றது.

பக்கம் 129 இல் உள்ள கடைசிக் கதை 'பெத்த மனம்' மிகவும் அருமையானதொரு கதையாகும். வயதான காலத்தில் தன்னைப் பெற்றவர்களை தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு தகுந்த பதிலடி கிடைக்கத்தக்கதான ஒரு முடிவை கதாசிரியர் முன்வைத்திருப்பது சிறப்பாகும். தன்னைப் பெற்று, ஆளாக்கி, பல சிரமங்களுக்கு மத்தியிலும் பிள்ளைகளுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த பெற்றோர்களை, பிள்ளைகள் அவர்களுடைய வயதான காலத்தில் அக்கறை காட்டிக் கவனிப்பதில்லை. அதிலும் அவர்களுடைய சொத்துக்களை பிள்ளைகளின் பெயரில் உயில் எழுதிக் கொடுத்துவிட்டால் இப்போதைய காலங்களில் பரவலான இடங்களில் பிள்ளைகள் பெற்றோரை கைவிட்டு விடுகின்றனர். அப்படியான பிள்ளைகளுக்கு மேற்படி 'பெத்த மனம்' என்ற சிறுகதை ஒரு சாட்டை அடியாக அமைந்துள்ளது.

பொலி, தெக்காடு, கெடை போடுதல், கருசக்காடு, கொங்காணி போன்ற விவசாயக் கலைச் சொற்கள் உட்பட சொதை, ஊவாங்கொட்டுக்காரர், ஷாமியானாப் பந்தல், கித்தாப்பு, கொதக்கு போன்ற சொற்கள் எனக்கு அவ்வளவு பரிச்சயமாக இருக்கவில்லை. இந்த நூலை வாசிப்பதன் மூலமே நான் இவ்வாறான சொற்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

பல்வேறு வகையான கோணங்களில் நோக்கி பதினாறு சிறுகதைகளையும் எழுதி, 'ஊமைத் துயரம்' என்ற பெயரில் அவற்றைத் தொகுத்து சிறுகதை வாசகர்களுக்கு வழங்கி விருந்து படைத்துள்ளார் நூலாசிரியர் கா.சி. தமிழ்க்குமரன் அவர்கள். இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களோடு அவரது இலக்கியப் பயணம் சிறப்பாகத் தொடரப் பிரார்த்தித்து, கா.சி. தமிழ்க்குமரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.


நூல்:-                   ஊமைத் துயரம்

நூல் வகை:-          சிறுகதை

நூலாசிரியர்:-  கா.சி. தமிழ்க்குமரன்

வெளியீடு:-          கதவு பதிப்பகம்

விலை:-         140 (இந்திய ரூபாய்)





நூல் கண்ணோட்டம்:-   வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.


Sunday, May 4, 2025

154. 'தப்பிப் பிழைத்த எண்ணங்கள்' கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

 154. 'தப்பிப் பிழைத்த எண்ணங்கள்' கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை


நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கேகாலை மாவட்டத்தின் இறம்புக்கனையைச் சேர்ந்த ஹப்ஸா பஹுமீரின் 'தப்பிப் பிழைத்த எண்ணங்கள்' என்ற கன்னிக் கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது. தனது பெற்றோர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த நூலானது, 107  பக்கங்களில் எளிமையான நூறு தலைப்புக்களில் அமைந்த சிறியதும் பெரியதுமான கவிதைகளை உள்ளடக்கியுள்ளது.

பாடசாலையில் விஞ்ஞானப் பாடம் கற்பிக்கும் ஆசிரியரான இவர், இந்தக் கவிதை நூலில் தனது வாழ்வியல் மற்றும் உலகியல் அனுபவங்கள் போன்றவற்றை மையமாகக்கொண்ட கருப்பொருட்களை வைத்தே நூறு தலைப்புக்களில் அமைந்த தனது கவிதைகளை கவிஞர் யாத்துள்ளார். 


இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள உயிரியல் ஆசிரியர், அமீன் பவாஸ் அவர்கள்  'சமகாலத்தில் தன் திறமைகளை நான்கு சுவர்களுக்குள் மறைக்காமல் துணிவு கொண்டு, பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரமாய், பாசறையில் தன் பா வண்ணத்தால் பிரகாசிக்கும் பாமா தேவி ஹப்ஸா பஹுமீரின் இந்தக் கன்னி முயற்சியைக் கண்டு மெய் சிலிர்க்கின்றேன். வாழ்வியல் அனுபவங்களில் தப்பிப் பிழைத்த எண்ணங்கள் அவ்வப்போது மகிழ்ந்த தருணங்களில் இதழோரம் பூத்துக் குலுங்கிடும் சிறு புன்னகையில் மனதையே நிறைத்து வாழ்வின் அந்தத்தை உணர வைக்கும் நினைவுகள் பல இங்கே எழுத்துக்களாக்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிதை என்பது யாதெனில் உள்ளத்தின் பிரதிபலிப்பாகும். உள்ளத்தில் பிரதிபலிப்பதையெல்லாம் எல்லோராலும் திறம்பட வெளிப்படுத்திட இயலுமா என்றால் நிச்சயம் முடியாது. கவிஞன் எனும் ஆளுமைக்கு உட்பட்டவனே தன் உள்ளத்தில் இருப்பதை எல்லாம், தன் உள்ளத்தில் நினைப்பதை எல்லாம் சொற்களாக்கி, வரிகளாக்கி, கவிகளாக்கி உயர்ந்து நிற்கின்றான். தன் உள்ளத்து உணர்வுகளை மட்டுமின்றி உலகையும் உள்வாங்கி தன் சீரியச் சிந்தனைகளால் அதனைக் கவிகளாக்கிக் கவிஞன் என்று மார்தட்டிப் பேருவகைகொள்கின்றான். அப்பேற்பட்ட பேருக்கும் புகழுக்கும் உரிய கவிஞன் என்னும் அடைமொழிக்குள் உட்பட்ட கவிஞர் ஹப்ஸா பஹுமீருக்கு தனது வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளார் தமிழ்நாட்டுக் கவிஞர் என். ஜாகிர் உஷேன் அவர்கள். நூலாசிரியர் பற்றிய சுருக்கமான பின்னட்டைக் குறிப்பை பிரான்ஸில் வசிக்கும் தமிழ் நெஞ்சம் சஞ்சிகையாசிரியர் அமீன் எழுதியுள்ளார்.

விஞ்ஞானப் பாட ஆசிரியராக இவர் இருந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றே  இவரைக் கவிதை புனைய வைத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம். கவிதையோடு மாத்திரம் இவர் நின்றுவிடாமல் சிறுகதை, கட்டுரை, பெண் ஆளுமை அறிமுகங்கள், சுயசரிதை, சிந்தனைக் கருத்துக்கள் போன்ற பல இலக்கிய வடிவங்களிலும் இவருடைய எழுத்துக்கள் பரவி நிற்கின்றன. பல தடைகளை உடைத்தும், பல தடைகளைத் தாண்டியும், பல்வேறு வகையான நிலைகளில் போராடியும் தன்னை ஒரு பெண் கவிஞராக முத்திரை குத்தி இலக்கிய வானில் உலா வருபவரை நாமும் பாராட்டியாக வேண்டும்.

இனி நூலாசிரியரின் பல்வேறு தலைப்புக்களில் அமைந்த கவிதைகளில் சில கவிதைகளை இங்கு இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

'இயற்கை அன்னை' (பக்கம் 23) என்ற கவிதையை வாசிக்கும் போது கோடையிலே திடீரென மழை வரும் போது எத்தனை மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோலவே மிகவும் இனிமையாக இருக்கின்றது. மழையை இயற்கை அன்னையின் செல்லக் கோபமாக பார்க்கும் கவிஞரின் கற்பனை அலாதியானது. அந்தக் கோபத்தை தணிக்க இலேசாக நனைவதாக கவிஞர் கூறியிருக்கும் பாங்கு மிகவும் இரசிக்கத்தக்கது. கீழுள்ள கவிதை வரிகள் இதனை நிதர்சனமாக்குகின்றன.


விண்ணில் வெள்ளை நிற ஒளி வீச

பஞ்சு மேகம் உலா வர 

வானமே அமைதிப் பூங்காவாக ஜொலித்தது..

விநாடிகள் விந்தையாகக் கடக்க 

நொடிப் பொழுதில் அமைதிப் பூங்கா

ஆக்ரோஷமாய் ஆடியது ஆகாயத்தில்!


காரிருள் சூழ பஞ்சு மேகம் பஞ்சாய் பறக்க

விண்ணைப் பிளந்து எமனின் வருகை

மின்னலாய் மின்ன சிரிப்பொலியும்

இடியாய் காலடி சத்தமும்

கணீர் கணீர் என ஒலிக்க 

மழையும் சோவெனப் பொழிந்தது!


நானோ வீட்டிற்குள் பூட்டப்பட்ட

ஒரு சிறகொடிந்த கிளியாய் ரசிக்கிறேன்

இயற்கை அன்னையின் கள்ளங்கபடமற்ற

செல்லக் கோபத்தை!


கொரோனா என்ற வார்த்தை இப்போதும் அடிநெஞ்சில் ஒரு வகையான கலக்கத்தை ஏற்படுத்தி நிற்கின்றது. அது தந்துவிட்டுப் போன காயங்கள் ஏராளம். மனிதகுலம் சந்தித்த பெரும் நோய்களில் உலகமே மிகவும் பயந்து அச்சமுற்ற ஒரு நோயாக கொரோனாவும் திகழ்கின்றது. முகக் கவசங்களும், தனிமைப்படுத்தலும், சைரன் ஒலியும், பிரேக்கிங் நியூஸ்களும் ஒரு வகையான பீதியை மக்கள் மனதில் உருவாக்கியிருந்த காலமது. அந்தப் பீதிக் காலத்தை நினைவுபடுத்துவதாக 'கொரோனா எனும் கொடுங்கோலன்' (பக்கம் 28) என்ற கவிதையின் பின்வரும் வரிகள் அமைந்துள்ளது.


ஒற்றைக் குடைக்குள் ஆண்ட அரசன்

அகிலம் எங்கும் தூற்றப்படக் கூடியவன்

அரசனின் பெயரைக் கேட்டாலே

ஆடிப்போகும் மாந்தர் கூட்டம்


வயது எல்லையின்றி தன் 

வசப்படுத்திக் கொண்டவன்..

வயது வந்த வயோதிபரையும்

கொஞ்சலுக்குரிய சிசுவையும்

காவுகொண்டவன்..

இளைஞர்கள் மாத்திரம்

விதி விலக்கோ?


'தியாகம்' (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த கவிதை தாய், தந்தை தன் பிள்ளைகளுக்காக செய்கின்ற தியாகங்களைப்பற்றி ஆழமாகச் சொல்லி நிற்கின்றது. தன்னையே உருக்கி தன் குழந்தைகளின் நலனுக்காக தாய் செய்கின்ற தியாகங்கள் காலம் காலமாக நாம் அறிந்ததே. அதேபோல குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகும் வரை ஒரு தந்தை மேற்கொள்ளும் தியாகம் பற்றியும் கவிஞர் தன் கவிதையில் மறவாமல் நினைவுபடுத்திக் குறிப்பிட்டுள்ளமை மிகச் சிறப்பு. கீழுள்ள கவிதையின் வரிகள் அதனை சிறப்பாக எடுத்தியம்புகின்றன.


நம் பிறப்பிற்குரிய தியாகி

நம்மை பத்து மாதம் கருவறையில் சுமந்தவள்

நமக்காய் அவளின் உறக்கத்தை விழுங்கியவள்

பசி தாகத்தை மறந்தவள்

தன் நேச உயிரை நினைத்து தினமும் உருகியவள்

தன் பாலை உதிரமாக்கி ஊட்டியவள்

அவளின் தியாகத்திற்கு ஈடு இணை ஏது!


தலையாய தியாகன் நம் வாழ்வில்

மண்ணில் உதிக்கும் வரை

தியாகியுடன் கருவறையும் சேர்த்து சுமந்தவன்

பட்சிகள் இரை தேட கூட்டை

விட்டுப் போக முன்பே

தன் உயிர் நேசங்களுக்காக தன் வீட்டை துறந்தவன்

இரா பகல் பாராது தன்னை வருத்தி உழைத்தவன்!


ஒரு விடயத்தின் மீது அதிகமாக ஈடுபாடு கொள்வதே போதை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின் மீது போதை கொள்கின்றார்கள். இன்று பெரும்பாலானவர்கள் கைத்தொலைபேசி மீது போதை கொண்டிருக்கிறார்கள். கைப்பேசி இல்லாமல் ஒரு நிமிடத்தையேனும் கழிக்க முடியாத ஒரு சூ(சு)ழலுக்குள் நாம் அனைவரும் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். சமூக வலைத்தளங்கள் தொட்டு அன்றாட செயற்பாடுகளின் போதும் கைப்பேசியே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பல வேளைகளில் ஒரு வழித்துணையாகவும் கைப்பேசி செயற்படுகின்றது. அளவுக்கு மீறிய வகையில் கைத்தொலைபேசி மீது மோகம் கொள்ளாமல் தமது குடும்பத்துக்காகவும் நேர காலத்தை செலவழிக்க வேண்டும் என்ற கருத்தையே 'போதை' (பக்கம் 97) என்ற கவிதை அருமையாகக் கூறி நிற்கின்றது.

இக்கவிதாயினியின் கவிப் பயணம் தொடரவும் மேலும் பல காத்திரமான தொகுதிகளை வெளியிடவும் பிரார்த்திப்பதுடன், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.


நூல் - தப்பிப் பிழைத்த எண்ணங்கள்

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - ஹப்ஸா பஹுமீர்

வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ. வெளியீட்டகம்

விலை - 500 ரூபாய்



நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்