Wednesday, May 13, 2020

128. விடியல் உனக்காக...கவிதைத் தொகுதி

விடியல் உனக்காக...கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நுஸ்கி இக்பால். கட்டிடத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றாலும் கவிதைமீது தான் கொண்ட தீராத ஆர்வம் காரணமாக பல கவிதைகளை 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து எழுதி தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவற்றை களப்படுத்தி வருகின்றார். அவ்வாறு களப்படுத்திவந்த கவிதைகளில் 46 கவிதைகளைத் தொகுத்து 'விடியல் உனக்காக...' என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை  வெளியிட்டுள்ளார். 85 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலை காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகம் வெளியீடு செய்துள்ளது.

என்னை விதையிட்ட இக்பாலுக்கும், விளைத்திட்ட றஸீனாவுக்கும் என்று இந்த நூலைத் தனது பெற்றோருக்கே நூலாசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த ரீ.எல். ஜவ்பர்கான் நூலுக்கான அணிந்துரையை வழங்கியுள்ளார். அதேபோல் நூலுக்கான வாழ்த்துரையை மகுடம் சஞ்சிகையின் ஆசிரியர் வி. மைக்கல் கொலின் வழங்கியுள்ளதோடு நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை காத்தான்குடியைச் சேர்ந்த எம்.ரி.எம். யூனுஸ் ஜே.பி. யும் வழங்கியுள்ளார்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியிலிருந்து பல படைப்பாளிகள் பல படைப்புக்களை இலக்கிய உலகுக்குத் தந்திருக்கிறார்கள். அந்தவகையில் 'விடியல் உனக்காக...' என்ற கவிதை நூலை வெளியீடு செய்ததன் மூலம் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் நுஸ்கி இக்பால். அகம் சார்ந்தவை, இயற்கைமீது தான்கொண்ட பற்று, வாழ்வியல் அனுபவங்கள், துயரங்களின் வெளிப்பாடு, அராஜகத்துக்கெதிரான கர்ஜிப்பு, அகதி வாழ்க்கை, சமூக அக்கih, போலி அரசியல் போன்ற இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்கியதாக அவரது கவிதைகளின் கருப்பொருட்கள் காணப்படுகின்றன.

தன்னுரையில் நுஸ்கி இக்பால் தான் கவிதைமீதுகொண்ட ஆர்வத்தையும் தனது நூல் வெளியீடு பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''ஆயிரம் கவிகளை எழுதுவதைவிட அவற்றில் சிலதை ஒரு நூலாக வெளியிடுவது சிறந்தது. என் கவிகளை என் உணர்வின் வெளிப்பாடாகவே பார்க்கின்றேன். எத்தனை பேர் எத்தனை கவிகள் படைத்தாலும் அவற்றிலிருந்து சிறிதளவேனும் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதே எனது அவா. கவிகளில் பலவிதம் இருந்தாலும் என் கவிகளை எல்லோராலும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது மற்றுமொரு ஆசை. என் கவிகள் எத்தனை உணர்வுகளை பகிர்ந்தாலும் அனைத்தும் எனது பல்கலைக்கழக வாழ்வில் நான் கண்ட சம்பவங்கள், தனிமையின் அனுபவங்கள் அனைத்தினதும் பிரதிபலிப்பே.''

இந்த நூலில் 46 தலைப்புகள் பல்வேறு வகையான கருப்பொருட்களில் அமைந்துள்ளன. இக்கவிதைகளில் ஒருசிலவற்றை இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

நீ மட்டும் போதும் அம்மா (பக்கம் 07) என்ற கவிதை நம்மனைவரினதும் முதல் உறவான தாயைப் பற்றி பேசுகின்றது. கருவில் இருக்கும்போதே தாய்க்கும் சேய்க்குமான உறவு தொடங்கிவிடுகின்றது. குழந்தையின் அசைவுகளைத் தாய் உணரக்கூடிய அற்புதத்தை இறைவன் வகுத்து வைத்திருக்கின்றான். அந்த ஒற்றை உறவின் சக்தி இந்த உலகத்தையே இயக்க வல்லது. அதுபற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

மல்லிகை மணத்தாலும்
முல்லை மலரும் மணத்தாலும்
உன் சேலை முகர்ந்து தூங்கும்
அந்த வாசம் வருடுது அம்மா

எந்தன் ஸ்பரிசம் சுடுகையில்
உன் ஸ்பரிசத்தோடு என்னை அணைத்து
உச்சி முகர்ந்து எனக்குத் தரும்
அந்த முத்தம் போதும் அம்மா

தள்ளாடும் வயது (பக்கம் 17) என்ற கவிதை நன்றி மறந்த பிள்ளைகள் பற்றியும் பெற்றோரின் ஏக்கம் பற்றியும் எடுத்துக்கூறுவதாய் அமைந்துள்ளது. கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிவிட்ட பிறகு பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுவதும், அவர்களை மதிக்காமல் விடுவதும் கண்கூடாக நாம் அறிந்திருக்கின்றோம். அத்தகையவர்கள் எதிர்காலத்தில் தம் பிள்ளைகளாலேயே கைவிடப்படும் நிலைமைகளையும் கண்டு வருகிறோம். பெற்றோரின் ஏக்கம் கீழுள்ளவரிகளில் நன்கு பளிச்சிடுகின்றது.

தள்ளாடும் வயதும் கூன் விழுந்த முதுகும் என் கதை சொல்லும்.. எலும்போடு சேர்ந்த தோலும் எழுந்திருக்க முடியா காலும் என் விதி பாடும்.. பாசத்தோடு வளர்த்த பிள்ளை பாவி நீ எனக்கு தொல்லையென்று தனியே விட்டுப் போகும்.. என் சாண் வயிறு சேதி ஒன்றும் அறியாமல் என்னை அள்ளித் தின்னும்.. பொறுக்கி வந்த மீனை பிரித்து அறுக்கும் போது பூனையும் அதற்கு ஏங்கும் இந்த வயோதிபம் உலையிலே வேகும்!!!

அண்ணா நீ ஒரு அன்னை (பக்கம் 52) என்ற கவிதை ஒரு பாசமிகு அண்ணாவைப் பற்றி தங்கை கூறுவதாய் அமைந்துள்ளது. அண்ணன் என்பவன் தந்தைக்கு சமம். தங்கை திருமணமுடித்து நான்கு குழந்தைகள் ஆனபோதும் அவர்களின் நெருக்கமும் இறுக்கம் மெய் சிலிர்க்க வைக்கின்றது. சமூகத்தில் இவ்வாறான உறவுகளை இக்காலத்தில் காண்பது அரிது. இத்தகைய உறவு வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அண்ணாவுக்காக தங்கை உருகும் பாசம் கீழே வரிகளாக..

ஒரு கருவறையில் ஒன்றாய் பிண்டமாய் இருந்தவர்கள் நாம்.. ஒரு தாயின் மார்பில் சுரக்கும் பால் அருந்தி பசி தீர்த்தவர்கள் நாம்.. இச்சைக்காய் நம்மை பிரிந்து தந்தை சென்றபோது என் தந்தையாய் உருவெடுத்தவன் நீ.. என் பாதம் வெயிலில் சுடும் என்று உன் தோள்களில் என்னை சுமந்தவன் நீ.. கண்ணில் பட்டதெல்லாம் நான் அடம்பிடிக்க முகம் சுழிக்காமல் என் ஆசை தீர்த்தவன் நீ.. என்னை அம்மா அடித்து என் இமைகள் நனைகையில் உன் மடி சாய்த்து என்னை அரவணைத்தவன் நீ..

தொழிலாளி (பக்கம் 61) என்ற கவிதை அவர்களின் சேவையைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தொழிலாளர்களும் எம் சமூகத்தின் தூண்கள். அவர்களுக்கு பிரதியீடாக யாரும் அமைந்துவிட முடியாது. மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் வரை எந்தத் தொழிலும் இழிவல்ல.ஆதலால் தொழிலாளர்கள் யாவரும் எம் நண்பர்கள் என்பதை நூலாசிரியர் ஆழமாக இக் கவிதையினூடாக பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

உதிரத்தை வியர்வையாக்கி
வியர்வையை உரமாக்கி
மண்ணைப் பொன்னாக்கும்
வித்தை தெரிந்தவன்
தொழிலாளி

மழைவெயில் பாராது
அலை கடல் பாராது
உப்பு நீரில் முத்து சுமப்பவன்
தொழிலாளி

பட்ட மரத்தில்
பச்சையம் சுரக்க வைப்பவன்
வெடித்த நிலத்தில்
வேர் பிடிக்க வைப்பவன்
இந்த தொழிலாளி

இவைதவிர 'வெட்கம் உன்னிடத்தில் வெட்கப்படும், கண்ணாலே பேசி பேசி, அடியே அழகி, உன் பதில கொஞ்சம் சொல்லுமா, என் வர்ணனைக்குரியவள், என் அன்பு மனைவி போன்ற தலைப்புக்களில் 06 காதல் கவிதைகளும் நூலில் இடம்பிடித்துள்ளன. புதிதாக எழுதுபவர்கள் அதிகமாக காதல் கவிதைகளை எழுதுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் நுஸ்கி இக்பாலின் இந்த ஷவிடியல் உனக்காக..' என்ற நூலில் காதல் கவிதைகள் சொற்ப அளவிலேயே இடம்பிடித்துள்ளன. இனிவரும் தொகுதிகளையும் சமூக அக்கறை கொண்டு கனதியான கவிதைகளை உள்ளடக்கியதாக வெளியிடுவார் என்று நம்புகிறேன். நுஸ்கி இக்பால் இன்னுமின்னும் வாசிப்பில் முனைப்புக் காட்டி பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - விடியல் உனக்காக...
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - நுஸ்கி இக்பால்
தொலைபேசி - 0770390869
ஈமெயில் - nuskymim@gmail.com
வெளியீடு - இஸ்லாமிய இலக்கிய கழகம் - காத்தான்குடி
விலை - 300 ரூபாய்

No comments:

Post a Comment