Wednesday, May 13, 2020

140. முக்கோண முக்குளிப்பு கட்டுரை நூல் பற்றிய கண்ணோட்டம்

முக்கோண முக்குளிப்பு கட்டுரை நூல் பற்றிய கண்ணோட்டம்

சந்திரகௌரி சிவபாலன் எழுதிய முக்கோண முக்குளிப்பு நூல் ஜேர்மன் எழுத்தாளர் சங்கத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. 57 கட்டுரைகளை உள்ளடக்கி 194 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூல் இலக்கிய இன்பம், அறிந்ததும் புரிந்ததும், சிந்தனையின் தேனூற்று ஆகிய மூன்று விடயங்களின் கீழ் பிரித்து நோக்கப் படுகின்றது.

வாழ்ந்துவிட்டோம் என்பது முக்கியமல்ல. வாழும் வரை எதை சாதித்தோம் என்பதுதான் முக்கியமானது. வெறுமனே பிறந்தேன்.. வாழ்ந்தேன்.. இறந்தேன் என்ற எண்ணப்பாடு உள்ளவனால் ஒருபோதும் வாழ்க்கையில் உயர முடியாது. அவ்வாறு முன்னெறுவதற்கு நல்ல விடயங்களை அவன் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.

நல்ல விடயங்கள எவை? தீய விடயங்கள் எவை? என்பதை நாம் பலவாறு அறிந்துகொள்கின்றோம். ஆயினும் பல சிறந்த புத்தகங்களை வாசித்து அறிவதினூடாக நாம் அறியாத பல விடயங்களைப் பற்றி அறியக் கிடைக்கின்றது.

அத்தகைய வாசிப்புக்கு ஏற்ற ஒரு நூலாகக் காணப்படும் முக்கோண முக்குளிப்பு பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டிருப்பது அதன் சிறப்பம்சமாகும்.

நூலாசிரியர் பகுத்தறிவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். பகுத்தறிவு என்றால் ஒரு விடயம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதன் சாதக, பாதக நிலைமைகளை உணர்ந்து செயற்படுவதைக் குறிக்கின்றது.

இன்று கடவுள் கோட்பாட்டை மறுப்பவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று தம்மை கூறிக்கொள்கின்றார்கள். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் எதுவுமே தானாக தோன்றாது. அதை தோற்றுவிக்க ஒரு சக்தி இருக்க வேண்டும். அந்த சக்தி இறைவன் என்பதை புரிந்துகொள்ள முடியும். எனவே பகுத்தறிவு என்பது எதையும் முழுமையாக ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும் என்பதை சுட்டி நிற்கின்றது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எவர் சொன்னாலும் அதன் உண்மைப் பொருளை காண வேண்டும். அதுவே அறிவு என்ற கருத்துடைய குறள் மூலம் இந்த விடயம் நன்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.

தமிழர் கலாசாரத்தில் தாலி என்ற கட்டுரை தாலியின் மகத்துவத்தை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.

'கணவன் வாழும் வரை மனைவியின் மார்பில் எப்போதும் இத்தாலி தவழ வேண்டும். அதை நெஞ்சோடு தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும்.  மார்பிலே உயிரோட்டம் உள்ள இடத்தில் இத்தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபஞ்சர் முறை போல தொழிற்படுகிற்னதாம். எனவே தாலி பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரமன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்ல வேண்டும்' என்கிறார் நூலாசிரியர்.

எழுத்தாளனை ஏளனம் செய்யும் சமுதாயம் என்ற கட்டுரையினூடாக யதார்த்த சிக்கல்கள் பேசப்பட்டிருக்கின்றன. 

ஒரு திரைப்படமோ, பாடலோ எழுத்தாளன் இல்லாமல் உருவாக முடியாது அடிப்படையை விட்டுவிட்டு வெளிப்படையை மாத்திரம் பார்த்து ரசிப்பவர்கள் எழுத்தாளனின் சிரமங்களை உணர்வதில்லை. கற்பனை என்பது மிக இலகுவாகக் கிடைத்து விடுகின்றது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்தக் கற்பனைக்கு உயிர் கொடுத்து கருவாக்கி அதை படைப்பாக பிரசவித்து அது மக்கள் மத்தியில் சென்றடையும் வரை ஒரு எழுத்தாளன் அயராது உழைக்கின்றான். காதில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு பாடலை ரசிப்பவர்கள் அப்பாடலை எழுதிய எழுத்தாளனை மறந்து விடுவது வேதனைக்குரியது.

'கோல் எடுக்கும் மன்னன் மக்களுக்காய் மக்களை ஆட்சி செய்கின்றான். எழுதுகோல் எடுக்கும் எழுத்தாளன் மக்களுக்காய்த் தன் அறிவை விதைக்கிறான்' என்று நூலாசிரியர் மிக ஆத்மார்த்தமாக எழுத்தளர்கள் பற்றி குறிப்பிடுகின்றார்.

சமூக சிந்தனையுடன் இலக்கியம் படைக்கும் நூலாசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

நூல் - முக்கோண முக்குளிப்பு 
நூலின் வகை - கட்டுரை
நூலாசிரியர் - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)
வெளியீடு - ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்
தொலைபேசி - 00491718001955
மின்னஞ்சல் முகவரி - c.gowry@yahoo.de  
வலைத்தளம் - www.gowsy.com  
FB - Gowry Sivapalan

No comments:

Post a Comment