Wednesday, May 13, 2020

135. பதுமராகம் நாவல் மீதான ஒரு பார்வை

பதுமராகம் நாவல் மீதான  ஒரு பார்வை

இறக்காமம் பர்ஸானா ரியாஸ் எழுதியுள்ள பதுமராகம் என்ற நாவல் 195 பக்கங்களில் 16 அத்தியாயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது. இவரது நாடகங்கள் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒலி, ஒலி பரப்பாகியுள்ளதுடன் எங்கள் தேசம் பத்திரிகையில் இவரது கவிதைகள், சிறுகதைககள் களம் கண்டுள்ளன.

சமூகத்தில் நடக்கின்ன்ற பிரச்சினைகளை முன்னிருத்தி இவரது கன்னி நூலான பதுமராகம் நாவல் படைக்கப்பட்டிருப்பதானது இலங்கை நாவல் துறையில் பெண்களின் வகிபாகத்தை சுட்டி நிற்கின்றது. இந்நாவலில் வருகின்ற பிரதான பாத்திரமாக சாச்சா (ஒருவரின் பெயர்) என்பவர் இரண்டாம் தாரமாக சாமிலா எனும் பெண்ணை திருமணம் செய்ததிலிருந்து நடக்கின்ற சம்பவங்களை இந்நாவல் சித்திரிக்கின்றது.

சாச்சாவின் மகள் ஹஸ்னா தாய்ப் பாசத்திற்காக
மிகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றாள். அவளுக்கு சதாவும் தாயின் ஞாபகம் வந்து அலை மோதுகின்றது. தந்தை சாச்சாவோ தன் மகளை கண்ணுங் கருத்துமாக வளர்ப்பதில் அதிக பிரயத்தனப்படுகின்றார். தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாக அவள் மகளைப் பார்த்துக்கொண்ட போதிலும் ஹஸ்னாவுக்கு தாய் இல்லாத பெருங்குறை மனதில் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றது.

அவர்களுக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவன் ஹரீஸ். கவிதைகளின் மீது அதிக நாட்டம் கொண்டவன். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் இணைந்து இலக்கியம் பற்றி பேசுவதில் அலாதி இன்பம் அவனுக்கு. அவன் ஹஸ்னா மனதளவினால் அனுபவிக்கும் துயரத்தைக் கண்டு சாச்சாவுக்கு மறுமணம் செய்கின்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றான்.

முதலில் சாச்சா மறுமணம் செய்வதற்கு மறுத்து விடுகின்றார். மனைவியாக வருகின்றவள் ஹஸ்னாவைத் தாயாக நின்று பார்த்துக் கொள்வாளா? என்ற அவரது ஐயம் நியாயமாக இருந்தாலும் ஹஸ்னாவின் ஏக்கத்தைப் போக்கும் அருமருந்தும் அதுவாகவே இருப்பதாகக் கூறி ஹரீஸ் அவரை சமாதானப்படுத்துகின்றான். இவ்வாறிருக்க ஹஸ்னாவும் தனது தோழிகளின் தாய்மார்களை ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் கவனிப்பதை அவதானித்த சாச்சா மறுமணம் செய்வதற்கு ஒப்புக்கொள்கின்றார்.

மனைவியாக வந்த சாமிலாவைச் சுற்றி சின்னக் குழந்தைகள் உட்கார்ந்து அவளை ரசித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடன் இருந்த பிஞ்சு ஹஸ்னாவும் தனக்குத் தாயாக வந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றாள். சிறிது நேரத்தில் குழந்தைகள் எல்லாரும் சென்றுவிட ஹஸ்னா மாத்திரம் அந்த அறையில் இருந்துவிடுகின்றாள். சாமிலா அவளிடம்,

'எல்லாரும் போறாங்களே நீ போகலையாம்மா?' என்றதற்கு,

'இல்லம்மா வாப்பா வார வரைக்கும் இங்க இருந்து உங்க பார்த்துக் கொள்ளச் சொன்னாங்க' என்கின்றாள்.

அப்போது அவ்விடத்துக்கு வந்த பெண்ணிடம் சாமிலா,

'யார் இந்தப் புள்ள.. இவவ கூட்டிற்றுப் போங்க' என்று சொல்கின்றாள்,

அந்தப் பெண், 'இவ ஹஸ்னா. ஒங்கட ஹஸ்பன்ர மகள் இவதான்' என்று சொன்னதும் சாமிலாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.

அதன் பிறகு அந்த வீட்டில் அதிகமான நேரம் சண்டையிலேயே கழிகின்றது. சாச்சாவுக்கு, சாமிலாவுக்கு, ஹஸ்னாவுக்கு வீடே நரகமாகிப் போகின்றது.

தன்னிடம் பொய் சொல்லி திருமணம் செய்து விட்டதாகவும், தனது சகோதரன் தன்னை நன்றாக வாழ வைக்கவில்லை என்றும் சாமிலா தன் விதியை நொந்துகொள்கின்றாள்.

எதற்காக திருமணம் செய்தோம் என்ற ஆதங்கத்தில் சாச்சா குடிப் பழக்கத்துக்கு ஆளாகின்றார்.

அவர்களின் வாழ்க்கை இவ்வாறு கழிய ஹரீஸ் என்பவனின்  கதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

தான் எழுதிய கவிதைகளை எல்லாம் பஸ்ஸில் தொலைத்து விடுகின்றான் ஹரீஸ். அவனது 'பேக்'கிற்கு பதிலாக அதே போன்ற இன்னுமொரு பேக் அவனைப் பார்த்து நகைக்கின்றது. அதில் குறித்த வாசிகசாலையின் முத்திரை பதிந்த சில புத்தகங்கள் காணப்படுகின்றன. காலப் போக்கில் ஹரீஸின் கவிதைகள் தலைப்பு மாற்றப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாக அதை ஜீரணிக்க முடியாத ஹரீஸ் மற்றும் அவனது நண்பன் முஜீப் வாசிகசாலையைத் தேடி விரைகின்றனர்.

அந்த புத்தகத்துக்கு சொந்தக்காரி நூர்ஜஹான் என்ற பெண் என அறிந்து அவளது விட்டுக்கு ஹரீஸும், முஜீபும் செல்கின்றனர். அதி உச்ச கோபத்தில் இருந்த ஹரீஸ் நூர்ஜஹானைப் பார்த்ததும் காதலில் விழுந்துவிடுகின்றான்.

நூர்ஜஹானின் தந்தை ஹரீஸிடம் விசாரித்துப் பார்த்ததில் சாமிலா ஹரீஸின் ஊரிலேயே இருப்பதாக அறிகின்றார். சாமிலாவும் நூர்ஜஹானும் இணைபிரியா தோழிகள் என்றும் மணமுடித்தில் இருந்து சாமிலா தன்னிடம் பேசவில்லை என்றும் நூர்ஜஹான் கூறுகின்றாள். பக்கத்து வீடான சாமிலாவின் தொலைபேசி இலக்கத்தை சாச்சாவின் மூலம் பெற்றுக்கொடுத்த ஹரீஸ் நூர்ஜஹான் பற்றி மனதில் ஆயிரம் கனவுகளுடன் அங்கிருந்து விடை பெறுகின்றாள்.

ஹஸ்னா தனது தந்தையின் தலை வலி போக்கும் மருந்தாக மதுபானத்தை நினைத்திருந்ததால் அவருக்கு அதை வாங்கிக் கொடுக்க தீர்மானிக்கின்றாள். எனவே காலை சாப்பாட்டுக்கு தந்தையினால் தரப்படும் காசை சேகரித்து மதுபான போத்தலை போன்றிருக்கும் ஆயுர்வேத மருந்து போத்தலை வாங்கி வீதியை கடக்கையில் விபத்துக்குள்ளாகின்றாள். இதனால் சாச்சா மதுப் பழக்கத்தை கைவிடுவதுடன், நூர்ஜஹானின் தொடர்பால் அறிவுறுத்தப்பட்டு சாமிலாவும் தன் தவறை உணர்ந்து ஹஸ்னாவுக்கு நல்லதொரு தாயாக மாறிவிடுகின்றாள்.

ஹரீஸினதும் நூர்ஜஹானினதும் திருமணப் பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றது. ஆனால் அதற்கிடையில் ஹரீஸின் மூத்த சகோதரியின் கணவன் றாசிக் வீசாவுடன் வந்து ஹரீஸின் தங்கையின் திருமணத்தைக் காரணம் காட்டி அவனை கட்டாருக்கு அனுப்பி விடுகின்றார். ஹரீஸிடமிருந்த காணியையும் அவர் தன் பெயருக்கு மாற்றி எடுக்கின்றார்.

தொழிலும் இல்லாத, காணியும் இல்லாத நிலையில் இருக்கும் ஹரீஸுக்கு நூர்ஜஹானை எப்படி திருமணம் செய்து கொடுப்பது என அவளின் தந்தை யோசிக்கின்றார். ஹரீஸோ தன் இளைய சகோதரிக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்காக வெளிநாட்டுக்குச் சென்றுவிட, நூர்ஜஹானின் நிலைமை பரிதாபமாக மாறிவிடுகின்றது.

ஹரீஸுக்கும் அவளது எண்ணம் வந்து வாட்டினாலும் தனது குடும்பத்துக்காக பொறுத்துக் கொள்கின்றான். ஆனால் றாசிக்கோ ஹரீஸுக்கு அடிக்கடி கடிதம் எழுதிப் போட்டு தனக்குத் தேவையான பணத்தை அவனிடமிருந்து அடிக்கடி பெற்றுக் கொள்கின்றான். நாட்டுக்கு வரவிருக்கும் ஹரீஸை றாசிக்கின் இன்னொரு கடிதம் மீண்டும் தடுத்து விடுகின்றது. காரணம் மூளை சரியில்லாத றாசிக்கின் தம்பிக்கு ஹரீஸின் தங்கையை மணமுடித்து வைக்கப் போவதாக றாசிக் அறிவித்திருந்தான். அதன் மூலம் தம்பிக்கு வரும் சொத்தை அனுபவிக்கலாம் என்பது அவனது அடுத்த திட்டமாக இருப்பதை அறிந்த ஹரீஸ், கட்டாரிலிருந்து வீட்டுக்கு வராமல் அங்கிருந்து  மலேசியாவுக்குச் சென்று நன்கு உழைத்து அங்கிருந்த படியே தங்கைக்கு டாக்டர் மாப்பிள்ளையைத் தேடி திருமணம் செய்து வைக்கின்றான்.

இதற்கிடையில் நூர்ஜஹானும் திருமணம் செய்து அவளது கணவனுடன் சந்தோசமாக வாழ்கின்றாள். ஹரீஸ் நாட்டுக்கு வந்து எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் தனக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். இப்போது அவனை மாப்பிள்ளைக் கேட்டு பலர் வரிசையில் காத்திருக்க அவனது சகோதரிகள், தாய், மச்சினன் மார் எல்லாரும் பெரிய சீதனத்துடன் பெண்ணை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் ஹரீஸின் எண்ணமோ ஏழைப் பெண்ணொருத்திக்கு வாழ்வளிக்க வேண்டும் என்றிருந்ததனால் இடியப்பம் விற்று தன் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு ஏழைக் குமரியை அவன் மணமுடிக்கப் போகின்றான் என்பதாக நாவல் நிறைவடைகின்றது.

சமூக நாவலினூடாக சிறந்த கதையம்சத்தைத் தந்த நூலாசிரியரான பர்ஸானா றியாஸ் இன்னும் பல காத்திரமான படைப்புக்களைத் தர வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - பதுமராகம்
நூல் வகை - நாவல்
நூலாசிரியர் - இறக்காமம் பர்ஸானா றியாஸ்
மின்னஞ்சல் முகவரி - farsana.ba@gmail.com 
விலை - 700 ரூபாய்

No comments:

Post a Comment