Wednesday, May 13, 2020

131. மூன்றாம் சாமத்து புன்னகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

மூன்றாம் சாமத்து புன்னகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஒன்பதாவது ஆவது வெளியீடாக கவிஞர் காத்தநகரான் எம்.ரி.எம். யூனுஸ் எழுதிய ன்றாம் சாமத்து புன்னகை'' என்ற கவிதைத் தொகுதி 116 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இது எம்.ரி.எம். யூனுஸ் அவர்களின் கன்னி நூல் வெளியீடாகும். ஆனாலும் கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி கூறுவதைப் போல தானும் ஒரு கவிஞன் என்று வார்த்தைகளைத் தேடிப் பிடித்து சேர்க்கின்ற கவிஞர்கள் மத்தியில் உணர்வுகளை கவிதையாக்கும் உண்மைக் கவிஞனாகவே காத்தநகரான் எம்.ரி.எம். யூனுஸ்ஸைக் காணலாம்.

''மூன்றாம் சாமத்து புன்னகை'' என்ற கவிதைத் தொகுதியில் கலாநிதி றமீஸ் அப்துல்லா அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''கிழக்கிலங்கைக் கவிதைப் பாரம்பரியத்தில் ஒரு திருப்புமுனையைக் கொண்டு வந்ததில் கவிஞர் அப்துல் காதர் லெப்பைக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. சமயத்தையும் பண்பாட்டையும் நவீன உலகிற்குள் இழுத்துவந்த பெருமை அவருக்கு இருக்கிறது. அவ்வாறு காத்தான்குடியின் இலக்கியவாதிகளுக்கு இலக்கியப் பரப்பிலே பேசப்படத்தக்க தனியான வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றுக்கு இன்னுமொரு கதியால் ஆக காத்தநகரான் யூனுஸ் என்ற கவிஞர் வந்திருக்கிறார்.''

எந்தன் இதயத்தில் ஊறிய வார்த்தைகள் என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள நூலாசிரியரின் என்னுரையில், ''எந்தன் மனக் கிடக்கையில் ஊசலாடிய உணர்வுகளை சராசரி மனிதனாய் சமூகத்தில் தொங்கி எனக்கோ புரிந்த பாஷையில் கவிதையாக்கி, ''மூன்றாம் சாமத்து புன்னகை'' பிரசவத்தை வாசக நெஞ்சங்களின் கரங்களில் ஒப்புவிப்பதில் மட்டில்லா பரவசம் அடைகின்றேன். எந்தன் ஆறாம் விரலாக சின்ன வயதிலிருந்தே ஒட்டிய காகிதமும் பேனாவும் இன்னு(று)ம் இணைபிரியா உறவாகவே உரசிக் கொண்டிருக்கிறது. எழுத்தும் பேச்சும் எனக்குள் ஊறி வசமாகிய தருணத்தில் அகக்கண் திறந்து ஆட்டுப் பிழுக்கையாக ஆங்காங்கே கொட்டுண்டு கிடந்த அடாவடிகளை... அடக்குமுறைகளை... கபடங்களை... சாக்கடைகளை கொட்டி வைக்க சிறந்த சாதனமாகவும் ஆயுதமாகவும் கை கொடுத்தது கவிதையெனும் சின்னக் கீறல்களே. கவிதையென்பது கற்பனா சக்தியோடும் இயற்கை மீதான பிடிப்போடும் சமூகத்தின்பால் ஏற்படுகின்ற கவர்ச்சியாலும் தன்னில் ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகளை மையப்படுத்தி கிறுக்கப்படுகின்றதொரு கிறுக்கலென்பது என் நிலைப்பாடு'' என்று குறிப்பிடுகின்றார்.

இந்தக் கவிதை நூலில் பல்வேறு தலைப்பிலமைந்த கவிஞரது 51 கவிதைகளை வாசகர்கள் தரிசிக்க முடியும். இங்கு இரசனைக்காக சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.

முதலாவது கவிதையான ''தேகக் கூட்டில் அடைபட்ட ஆன்மா'' (பக்கம் 25) என்ற கவிதை மரணத்தின் பின்னரான ஆன்மாவின் நிலையை அழகிய முறையில் எடுத்துக் கூறியுள்ளது. வெள்ளை ஆன்மா இதுவரை சிறைப்பட்டிருந்த இடம் தேகக்கூடு என்று உவமிக்கப்பட்டிருகின்றது. இறை அழைப்பை ஏற்று விடுதலை பெற்ற உயிர் இறைவனின் சந்நிதானத்துக்குச் சென்றிருப்பதாகக் கூறும் கவிஞரின் கவி வரிகள் இதோ:-

கூசாவில் அடைக்கப்பட்ட
வெள்ளை ஆன்மா
இறைவனின்
சன்னிதானத்திற்குப்
பறந்து சென்றிருக்கிறது

அவன் வரைந்த
எல்லைக் கோடுகளின்
பட்டியல்கள் புரட்டப்பட்டு
ஆன்மா மரண வானவர்களால்
ஆய்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது

நாற்றிசையும்
அலைமோதிய ஆன்மாவில்
அத்தனை ஆசைகளும்
பிரதியெடுக்கப்பட்டு
விடுகைப் பத்திரத்தில்
ஊஞ்சலாடியது உயிர்!

பலஸ்தீனத்தில் அவதிப்படும் மக்களை நினைத்து கவிஞர் ''தீப்பொறியைக் குடித்த குட்டிப் பிசாசு'' (பக்கம் 45) என்ற கவிதையில் மனம் உருகுகின்றார். நாளுக்கு நாள் அம்மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதல் கரையாத கல் மனதையும் கலங்க வைத்திருக்கின்றது. விடியும் பொழுதுகள் எத்தனை துன்பங்களைச் சுமந்து வருமோ என்ற அம்மக்களின் எண்ணங்கள் இனிவரும் காலங்களில் மாறி, அழகிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நம்மைப் போலவே கவிஞரின் மனமும் எதிர்பார்க்கின்றது.

குர்ஆனைப் போர்த்திய
குட்டி தேசத்தின்
குரல் வளையில்
கையைப் புதைத்து
சல்லாபம் புரிகையில்
சரிந்து போனது
சரித்திர தேசம்

குமருகளின் பூ மேனியில்
நீ பூசை நடாத்தி
குடும்பம் நடாத்துகையில்
எங்களது
உணர்வுகள் உசும்பி
கண்ணீரைக் கட்டியாக
கிலோக் கணக்கில் தள்ளி
கொந்தளித்தது நெஞ்சம்!

குடும்பத்தைப் பிரிந்து குழந்தைச் செல்வங்களைப் பிரிந்து ஒட்டக தேசத்தில் தொழில் புரியும் ஆண்கள் படும் மன வேதனையை ''ஆண் பனைக் கூடு'' (பக்கம் 62) என்ற கவிதையில் தரிசிக்க வைக்கின்றார் கவிஞர் யூனூஸ். பணம் இன்று அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்தும் இக்காலத்தில் பணத்தை சம்பாரிப்பதற்கு வெளிநாடுகளுக்கு ஆளாய்ப் பறக்கிறார்கள் குடும்பத் தலைவர்கள். இவர்கள் அங்கு துயரத்தின் முழு வலியையும் அனுபவித்து வாழ்கின்றார்கள். சொந்த நாட்டிலிருந்து புறப்பட்டுப் போய் புழுதிக் காட்டில் தம் வாழ்க்கையை நகர்த்துபவர்களின் கனவுகளும் அந்தப் பாலைவன பூமி போல வரண்டே கிடக்கின்றது. இந்தத் துயரத்தை கீழுள்ள வரிகள் ஆத்மார்த்தமாக உணர்த்துகின்றது.

உணர்வுகள் உடைந்து
உறவுகள் தொலைத்து
உச்சத்தில் பறக்கையில்
உருவம் மாறி
உருகு நிலையில்
உயர்கிறது வாழ்வு

தந்தி வந்தும்
தங்கையின் திருமணத்தில்
தலைகாட்ட முடியாமல்
ஒட்டக தேசத்தில்
ஆசைகளை ஒட்டிவைத்து
பாலைவனக் கட்டையில்
கட்டுப்பட்டுக் கிடக்கிறது பாசம்!

''தவளைகளின் பாய்ச்சல்'' (பக்கம் 79) என்ற கவிதையில் அரசியலை தவளைகளுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது. மாரிக் காலத்தில் தவளைகள் கணக்கின்றி வீதிகளில் திரிவதை, தேர்தல் காலங்களின் வேட்பாளர்களுக்கு ஒப்பிட்டிருப்பது நயக்கத்தக்கது.

இப்போதெல்லாம் தவளைகள் தயாளமாக வீதியில் இறங்கி கனத்த குரலில் சத்தங்களை எழுப்பிக் குதூகலிக்கிறது.. யாரிடம் கேட்டாலும் ஒருமித்த வார்த்தைகளையே ஒப்புவிப்பு செய்கிறார்கள்.. தவளைகள் மாரிகாலத்தில் அதிகமதிகம் சினுங்கித்தான் வேதனைகளை இறக்கி வைக்குமென.. மலிந்திருக்கும் மோக்கைகள் மொக்குத்தனமாய் கத்துகையில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் முச்சந்தியில் தோரணம் போட்டு கத்துவது ஞாபகத்தை தொட்டுப் பார்க்கிறது.. தவளைகள் சந்து பொந்து பாராமல் வயிறு நனைக்க சந்திக்குப் படையெடுக்கையில் வாகனத்தில் அகப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வதும் பாமரனின் கால்களுக்குள் மிதிபட்டும் சுயமிழக்கிறது.. மழை இல்லத்தில் தேங்கிக் கிடக்கும் தவளைக் குஞ்சுகள் சீசனில் மட்டுமே பாய்ந்து துள்ளிக் குதித்து வாக்குப் பிச்சை கேட்டு அரசியல் புரிகிறது.. தருணம் பார்த்து நிறங்கள் மாற்றிட உரத்த குரலில் ஓசைகளை எழுப்பிட அதிசய வார்த்தைகளை இறக்கி வாசிக்க அரசியல் தவளைகளுக்கே அவசரமாய் முடிகிறது!

''மூப்பின் மீதான போராட்டம்'' (பக்கம் 84) என்ற கவிதையில் முதுமை தரும் நினைவுகளையும், நினைவில் ஒளிந்துள்ள கவலைகளையும் காண முடிகின்றது. நாளை நாளை என சேமித்த கனவுகள் யாவும் வயோதிபக் காலத்தில் நினைவுக்கு வரும்போது அந்தக் கனவை நிறைவேற்ற முடியாமல் போகின்றது. ஓய்வூதியப் பணம் வைத்தியச் செலவுக்கே போதாமல் போகிறது என்ற துன்பியலைக் கீழுள்ள வரிகளில் உணர முடிகின்றது.

காய்ந்த சருகாகவே
இளமை இடம் மாறி
தேகத்தில் தேய்வுகளை
தயாளமாக
அறுவடை செய்கிறது

நடந்தவை அத்தனையும்
நினைப்பானில் மிஞ்சாது
மறதியென்னும்
நெடுங்கயிற்றை விழுங்க
நாதியற்ற வாழ்வு
அலைபாய்கையில்
நா கூடத் தட்டியது திட்டமாக

இவ்வாறான சமூகக் கவிதைகள் பலவற்றை எளிமையாகவும் வலிமையாகவும் தனது தொகுதி முழுவதிலும் முன்வைத்துள்ள நூலாசிரியரின் முயற்சிகள் இன்னும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - மூன்றாம் சாமத்து புன்னகை
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - எம்.ரி.எம். யூனுஸ்
தொலைபேசி - 0779345640
ஈமெயில் - yoonusmtm@gmail.com
வெளியீடு - காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகம்
விலை - 300 ரூபாய்

No comments:

Post a Comment