Wednesday, May 13, 2020

143. தாய் நிலம் சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம் (03 மொழிபெயர்ப்புகளுடன்)

தாய் நிலம் சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்
(03 மொழிபெயர்ப்புகளுடன்)

தாய் நிலம் என்ற நான்கு மொழிகளில் வெளிவந்துள்ள நூலின் ஆசிரியர் முல்லைதிவ்யன். இந்த நூல் இவரது ஆறாவது நூல் வெளியீடாகும். முல்லைதிவ்யன் யுத்தம் விட்டுச் சென்ற வடுக்களை நெஞ்சில் சுமந்தவராக படைப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர். சிறுவயதிலிருந்தே யுத்தம் எனும் அரக்கனுக்குப் பயந்து பயந்து வாழ்ந்ததில் அவருக்குள் ஊடுறுவிட்ட அந்த வலி, ஏக்கம், பயம், விரக்தி போன்றவை அவரது எழுத்துக்களில் பிரவாகிப்பதை நன்கு உணர முடிகின்றது.

இவர் நல்லதோர் கனவும் அந்தரிப் போரும் (கவிதை) 2011, கவியின் ஏக்கம் (கவிதை) 2012, அம்மா காத்திருக்கக்கூடும் (கவிதை) 2013, அக்காவுக்கு எழுதிய கடிதம் (கவிதை) 2014, தாய் நிலம் (சிறுகதை) 2016 ஆகிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார். 2016 இல் வெளியிட்ட தாய் நிலம் என்ற சிறுகதை நூலில் உள்ள மகுடச் சிறுகதையையே இவர் பிரெஞ்சு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியெர்ப்புச் செய்து யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தின் மூலம் இறுதியாக வெளியிட்டுள்ள நூலாகும்.

தாய் மண்ணை நேசிப்பவர்களுக்கு அதைவிட்டும் பிரியும் நிலை வந்தால் அது உயிர் போவதை விடவும் வேதனை தரும் விடயமாகும். தன் மண்ணை, மக்களை, கூடவே வளர்ந்த ஆடு மாடுகளை எல்லாம் விட்டுவிட்டு வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஏக்கம் தாய் நிலம் என்ற நூலில் உள்ள சிறு சம்பவம் மூலம் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 74 பக்கங்களில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் உள்ள கதைச் சம்பவமானது தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையானது பிரெஞ்சு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல சித்திரக் காட்சிகளையும் உள்ளடக்கப்பட்டு இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

யாழ் மொழி, மான் விழி ஆகிய இரு தோழிகளின் உரையாடலாக இந்தக் கதை பின்னப்பட்டுள்ளது. யாழ் மொழி, தன் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக தன்னிடமிருந்த நகையெல்லாம் விற்கிறாள். அப்படி மிகவும் கஷ்டப்பட்டு வெளிநாடு சென்றாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியாக அங்கு நல்ல தொழில் கிடைக்கவில்லை. தன் சிறுவயது மகனை வைத்துக்கொண்டு இருக்கும் யாழ் மொழி தானே வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுத்துவிட்டு அதை மான் விழியிடம் தெரிவிக்கின்றாள்.

யாழ் மொழியின் வாழ்க்கை எனும் படகு நல்ல படியாக கரை சேர வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறாள் மான் விழி. அவர்கள் இருவரும் பள்ளிக் காலத்திலிருந்து நல்ல நண்பிகளாகத் திகழ்ந்து யுத்த நெருக்கடியிலும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டதையும் இந்தக் கதையில் பதிவுசெய்திருக்கிறார் முல்லைதிவ்யன்.

யதார்த்தமான விடயங்கள் எழுத்துக்கூடாக பார்க்கப்படும்போது அந்தந்த சூழ்நிலைகளில் மக்கள் அடைந்த துன்பத்தை கண்கூடாக அறிய முடிகின்றது. அந்த எழுத்தாற்றல் முல்லைதிவ்யனுக்கு வாய்த்திருக்கின்றது. தான் எடுத்துச் செல்லும் கதை நகர்வுக்குள் வாசகரையும் இழுத்துச் செல்வதோடு வாசகரின் மனதையும் கலங்க வைக்கின்றார். வாசகனுக்குள் ஏற்படும் அந்த வேதனை உணர்வானது திவ்யனின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

படைப்புகளுக்கூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இலங்கையில் பெருமளவில் நடைபெற்று வந்திருக்கிறது. வருகிறது. பிற இனத்தவர்களும் இந்தத் துயரத்தை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் இனிவரும் காலங்களில் இன மத மொழி பேதம் மறந்து அனைவரும் இலங்கையர் என்ற உணர்வோடு செயற்படுவதற்கான வழிவகையாக தாய் நிலம் என்ற நூல் திகழ்கின்றது.

சமூகத்தில் நிகழும் ஏனைய பிரச்சினைகளையும் முல்லைதிவ்யன் தன் எழுத்துக்களில் புகுத்தி சமூகத்துக்குள் ஊடுறுவச் செய்ய வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதை வாசிப்பவர்களில் சிலராவது அதிலிருந்து தவிர்ந்து நல்ல விதமாக நடப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும்.  நூலாசிரியர் முல்லைதிவ்யனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - தாய் நிலம்
நூல் வகை - சிறுகதை (03 மொழிபெயர்ப்புகளுடன்)
நூலாசிரியர் - ஆ. முல்லை திவ்யன்
தொலைபேசி - 0775446584
வெளியீடு - யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகம்

No comments:

Post a Comment