Wednesday, May 13, 2020

136. சிறகொடிந்த வண்ணக்கிளி நாவல் மீதான ஒரு பார்வை

சிறகொடிந்த வண்ணக்கிளி நாவல் மீதான ஒரு பார்வை

ஆர். ராஜலிங்கம் எழுதிய சிறகொடிந்த வண்ணக்கிளி என்ற நாவல் 22 அத்தியாயங்களை உள்ளடக்கியதாக 194 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தால் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே காதலி தேடிக் கொடுத்த மனைவி (2005) எனும் நாவலை வெளியிட்டிருக்கின்றார். சிறகொடிந்த வண்ணக்கிளி என்ற நாவல் இவரது இரண்டாவது நாவலாகும்.

பண்டாரவளை சென் மேரிஸ் தமிழ்க் கலவன் பாடசாலையின் பழைய மாணவரான இவர், சித்திரா, சித்திரக் கதைப் பத்திரிகை, ஹரே கிருஷ்ணா ஆன்மீக ஏடு ஆகியவற்றின் ஆசிரியராகவும், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, மித்திரன், விஜய் ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தனது சொந்தப் பெயரிலும் நவசீலன், நரசிம்மன், ராஜா அண்ணா ஆகிய புனைப் பெயர்களிலும் இவர் தனது ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

சிறகொடிந்த வண்ணக்கிளி என்ற இந்நாவலின் பிரதான கதா பாத்திரங்களாக விமல், ரம்யா, வேணி ஆகியோர் சித்திரிக்கப்படுகின்றார்கள். அழகிய, மெல்லிய காதலை கருவாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. அத்துடன் தூய நட்பும் மிக ஆழமாக இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றது.

வாசகரை கட்டிப் போடும் விதமாக இயல்பான எழுத்து நடையுடன் கூடிய இந்நாவலில் அத்தியாயங்களுக்குள் பொருத்தமான சித்திரங்களும் இடம்பெற்றிருக்கின்றமை வாசிப்பின் பால் ஈர்த்து விடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விமலுக்கு பதவி உயர்வுக்கான கடிதம் கிடைத்த சந்தோசத்தில் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றான். அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஜெனரல் மனேஜராக அவன் பதவி உயர்வு பெற்றிருப்பது சாதனைக்குரிய விடயம். ஆனால் இந்த வெற்றிக்கெல்லாம் சொந்தக்காரி அவனது தோழி ரம்யாதான்.

விமலுக்கு தாய் தந்தையர் இல்லை. அண்ணனின் பராமரிப்பில்தான் விமல் வளர்கின்றான். ஆனால் அண்ணன் திருமணம் செய்த பிறகு அண்ணி விமலை வேறுபடுத்திப் பார்த்தாள். மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட அண்ணனும் விமலை கண்டுகொள்ளாமல் இருக்க கல்வி கற்பதற்குக் கூட யோசிக்க வேண்டிய நிலைமை விமலுக்கு ஏற்படுகின்றது. எனவே பூங்காக்களில் பொழுதைப் போக்கிவிட்டு வீட்டுக்கு செல்லும் பழக்கத்தை ஆரம்பித்த விமலை ரம்யாவின் திடீர் வருகை தடுத்து விடுகின்றது.

அவள் வசதிக்காரி. ஆனால் ஆடம்பரமில்லாமல் பழகக் கூடியவள். அரசாங்கப் பாடசாலையில் படிப்பதனால் பெரிய செலவுகள் இல்லையென்றும் தனக்கு கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தை விமலின் படிப்புச் செலவுக்கு தருவதாகவும், மேலதிக பணத் தேவை ஏற்பட்டால் தன் தந்தையிடம் கூறி ஏற்பாடு செய்வதாகவும் ரம்யா உறுதிமொழி கூறுகின்றாள். ரம்யாவின் வழிகாட்டுதலால் விமலின் கல்வி நடவடிக்கைகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளப்படுகின்றது.

காலங்கள் உருண்டோட இருவரது நட்பும் விருட்சமாய் வளர்கின்றது. ரம்யாவுக்கு விமல் மீது தீராத காதல் உண்டாகின்றது. ஆனால் அதை அவனுக்கு வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பால் உணர்த்த முற்படுகின்றாள். அவள் அவனிடம் பலமுறை தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த நினைத்தாள். எனினும் விமலோ ரம்யாவை மிக மரியாதையான எண்ணத்துடன் மாத்திரம் பார்த்தால் அவனுக்குள் அவ்வாறான எண்ணங்கள் ஏற்படவில்லை.

ரம்யாவுக்கு எந்த விடயமாயினும் சஸ்பென்ஸ் வைத்துப் பேசும் பழக்கம் இருந்தது. அதனால் அவள் தன் காதலை வெளிப்படுத்தாமல் நாணத்துடன் இருந்துவிடுவாள்.

இதற்கிடையில் நிலைமை எல்லை மீறிப் போகின்றது. விமல் திடீரென ஒருநாள் வந்து, ரம்யாவின் உயிர் தோழியான வேணியை திருமணம் செய்யப் போவதாகக் கூறியதும் வானமே இடிந்து தன் தலையில் விழுந்ததாய் உணர்கின்றாள் ரம்யா. தன் உயிர் தோழியான ரம்யாவிடம் வேணி தன் திருமணத்தைப் பற்றிப் பேசுகின்றாள். ரம்யா அதற்கு பட்டும் படாமலும் பதில் சொல்கின்றாள். சில நாட்களில் ரம்யாவின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை உணர்ந்த வேணி வற்புறுத்தி காரணம் கேட்டதும் விமலைத்தான் விரும்பிய உண்மையை கூறுகின்றாள். வேணி தன் காதலனை ரம்யாவுக்காக விட்டுக்கொடுக்க எண்ணுகின்றாள். ஆனால் விமலின் மனதில் வேணி இருப்பதால் ரம்யா வேணியை ஆறுதல்படுத்தி யதார்த்தத்தை உணர்த்துகின்றாள்.

இந்நாவலில் இன்னொரு பாத்திரமாக சித்திரிக்கப்பட்டிருக்கும் முகுந்தன் என்பவன் வேறொரு கல்லூரியின் மாணவன். அவன் அடிதடிகளுக்கு பேர்பெற்ற முரடன் அவன் ரம்யாவின் தோழியை கிண்டல் செய்ததால் ரம்யாவின் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகின்றான். முகுந்தன் ரம்யாவையும், விமலையும் பற்றி தவறாகப் பேசுகின்றான். இதனால் விமலுக்கும் முகுந்தனுக்குமிடையில் அடிதடி நிகழ்கின்றது.

விமல் - வேணி திருமணம் இனிதே நிறைவடைகின்றது. மனதுக்குள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் தோழியின் நல்வாழ்வுக்காக தன் காதலை தியாகம் செய்துவிடுகின்றாள் ரம்யா. மூவரும் எப்போதும் போல நண்பர்களாகவே இருக்கின்றார்கள். வேணியின் வற்புறுத்தலால் ரம்யா சேகர் என்பவனைத் திருமணம் செய்கின்றாள். மிகவும் நல்லவனான அவன் ரம்யாவின் மீதும் அதிக அன்பைப் பொழிகின்றான்.

சேகருடன் நட்புறவாடி, முகுந்தன் ரம்யாவை மிரட்டுகின்றான். விமலையும் ரம்யாவையும் பற்றி சேகரிடம் இல்லாத பொல்லாதவற்றைக் கூறி குடும்ப வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்தி விடுகின்றான். ரம்யா தான் தாய்மையடைந்த விடயத்தைக் கூறியபோது கூட அது தன் பிள்ளையில்லை என்று சேகர் கூறுவதினூடாக ரம்யாவின் குடும்ப வாழ்வில் ஏற்பட்டுள்ள இடைவெளி வாசகர்களுக்கு அச்சொட்டாக விளங்குகின்றது. இந்நிலையில் ரம்யாவின் தந்தையும் இறந்துவிட, கணவனும் கைவிட கர்ப்பிணியாக தான் எங்கிருக்கிறோம் என்பதை யாருக்கும் தெரியப்படுத்தாமல் தன் வாழ்வை மிகவும் துயரத்தோடு கடத்துகின்றாள். வேணிக்கும் விமலுக்கும் என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் ரம்யாவின் வீட்டு வேலைக்காரியை சந்தித்து அவள் பற்றிய தகவல்களை அறிகின்றனர்.

பிரசவ நேரத்தில் ரம்யா இறந்து விடுவதாகவும், விமல் - வேணி தம்பதியர் ரம்யாவின் குழந்தையை வளர்த்து ஆளாக்கப் போவதாகவும் நாவல் நிறைவடைகின்றது. சொல்லாத காதலும் - தூய நட்பும் என்ற இரு விடயங்களில் நாவல் நகர்ந்திருக்கின்றது.

நூலாசிரியர் இன்னும் பல காத்திரமான படைப்புகளை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் அவரது இலக்கியப் பணி தொடர  வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - சிறகொடிந்த வண்ணக்கிளி
நூல் வகை - நாவல்
நூலாசிரியர் - ஆர். ராஜலிங்கம்
தொலைபேசி - 0778900871
வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம்
விலை - 200 ரூபாய்

No comments:

Post a Comment