Wednesday, May 13, 2020

137. கோதுமைக்கனி நாவல் மீதான ஒரு கண்ணோட்டம்

கோதுமைக்கனி நாவல் மீதான ஒரு கண்ணோட்டம்

இலங்கையின் நாவல் இலக்கியத் துறையில் முஸ்லிம்களின் பங்கு அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் மாவனல்லை உ. நிசார் அவர்களின் கோதுமைக்கனி என்ற நாவல் வெளிவந்திருக்கின்றது.

இஸ்லாமிய வரைமுறைகளை மீறி வாழும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இந்த நாவல் சித்தரித்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கின்றது. அல்லாஹ் தடுத்தவற்றின் பால் மனம் நாட்டம் கொள்ளும்போது அது வாழ்வில் எத்தகைய துன்பங்களை எல்லாம் ஏற்படுத்தும் என்பதற்கு ஆதம் - ஹவ்வா அலைஹி மஸ்ஸலாம் ஆகியோரின் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.

ஆதம் - ஹவ்வா அலைஹி மஸ்ஸலாம் ஆகியோரை காலம் முழுக்க சுவனத்தில் வாழ்வதற்கு ஆசீர்வதித்த அல்லாஹ், குறித்த கனியை மட்டும் சாப்பிட்டு விட வேண்டாம் என்பதாகத் தடுக்கின்றான். எல்லாவித சொகுசையும் அனுபவித்து ஆள முடிந்த சுவர்க்கத்தில் என்றென்றும் தங்குவதற்கு அந்தக் கனியைச் சாப்பிடுமாறு ஷைத்தான் அவர்களை ஆசை காட்டுகின்றான். அல்லாஹ் சொன்னவற்றை கேட்காமல் அதைப் புசித்த இருவருக்கும் அல்லாஹ் தண்டனை வழங்குமுகமாக அவர்களைப் பூமிக்கு அனுப்புகின்றான். பிறகு அவர்கள் தம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விமோசனம் பெற்றார்கள். அந்தவகையில் இந்த நாவலின் பிரதான பாத்திரமாக வரக்கூடிய ஹம்தூன் இறை கட்டளைக்கு மாறு செய்து இறுதியில் கைசேதப்படுவதை ஆதம் - ஹவ்வா அலைஹி மஸ்ஸலாம் சம்பவத்துக்கு ஒப்பீடு செய்கின்றார் நூலாசிரியர் உ. நிசார்.

ஹம்தூன் ஊரில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அனைவரது அன்புக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர். அவரது வலது கையாக அவரை வளர்த்தவர் ஓடியார் என்று அழைக்கப்படக்கூடிய ஹம்தூனின் மாமா. ஹம்தூனின் மனைவி ஆரிபா. ஆரிபாவின் தாயான நாச்சியாவும் ஆரிபாவின் சகோதரியான ஆராவும் ஹம்தூனின் வீட்டுக்கு வந்திருக்கின்றார்கள். அப்போது எதிர்பாராத விதமாக குறி சொல்பவள் அவ்விடத்திற்கு வருகின்றாள். அவள் வந்ததும் நாச்சியா அவளுக்கு சாப்பாடு, பணம் எல்லாம் கொடுத்ததும் அவள் ஆரிபாவையும் ஆராவையும் பார்த்துவிட்டு இப்படிச் சொல்கின்றாள்.

'இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் தள்ளி ஒதச்சிக்கொண்டு ஒரு மரத்துல படர்ந்து செல்லும் கொடிகளாட்டம் இருப்பாங்க'

இதைக் கேட்டு நாச்சியாவுக்கு அதிர்ச்சியாகவும் மனவேதனையாகவும் இருந்தது. அவள் சொல்வதெல்லாம் நடந்திடவே கூடாது என்று நாச்சியா இறைவனை வேண்டிக் கொள்கின்றாள். இதை அவதானித்துக் கொண்டிருந்த ஓடியார், ஹம்தூன் வந்ததும் அவரிடம் சொல்கின்றார். அதாவது ஓடியார்தான் குறி சொல்பவளை அவ்வாறு சொல்லச் சொன்னதையும், அதற்குக் காரணம் ஹம்தூன் ஆராவையும் விரும்பியதுதான் என்பதையும் வாசகர்கள் அப்போது உணர்ந்து கொள்கின்றார்கள்.

ஆராவுக்கு வேறொரு திருமணம் பேசுகின்றார்கள். ஆனால் ஹம்;தூன் ஆராவை தான் மணமுடிப்பதாக அவர்களை மிரட்டுகின்றான். நாச்சியாவும் அவளது கணவனும் தன் இளைய மகனை ஹம்தூனிடமிருந்து மீட்டெடுக்க படாதபாடு படுகின்றார்கள். ஆனால் இறுதியில் ஹம்தூன் மற்றும் ஓடியாரின் சதி வென்று ஆரா ஹம்தூனுக்கு இரண்டாம் தாரமாகின்றாள்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரண்டு சகோதரிகளை ஏக காலத்தில் திருமணம் முடிப்பது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹராமான (தடுக்கப்பட்ட) இந்தக் காரியத்தைச் செய்த ஹம்தூனை ஊர் மக்களும் பின்னாலிருந்து திட்டித் தீர்க்கின்றார்கள். ஹம்தூனுடன் நேடியாகக் கதைத்து தெளிவுபடுத்த முடியாமல் அவர்களும் விக்கித்துப் போகின்றார்கள். காலம் தன் பாட்டுக்கு கடந்து போகிறது.

ஆரிபாவும் ஆராவும் அதன் பிறகு மனமுறிவு கொள்கின்றார்கள். இரு சகோதரிகளுக்குள்ளும் சதாவும் சண்டை ஏற்படுகின்றது. ஹம்தூனுக்கு இது பெரிய தலை வலியாக இருக்கின்றது. காலப் போக்கில் ஹம்தூனின் இரு மனைவியருக்கும் குழந்தைகளும் பிறக்கின்றனர். அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகின்றனர்.

அவர்கள் வளர, வளர தமது தந்தை செய்த பாவ காரியம் அவர்களுக்கும் நன்கு விளங்குகின்றது. அவர்கள் தனது தந்தையை வெறுக்கின்றார்கள். ஊரில் முகம்காட்ட முடியவில்லை என்று தாய்மாரிடம் முறையிடுகின்றார்கள். ஆராவின் சம்மதமின்றியே இத்;திருமணத்தை பலவந்தமாக ஹம்தூன் நடத்திக் கொண்டார் என்பதை அறிந்து பிள்ளைகள் தந்தையான ஹம்தூனை எதிரியைப் போலப் பார்க்கின்றார்கள்.

வருடங்கள் கடந்தோடி விடுகின்றன. ஹம்தூனின் மகளுக்கு திருமணப் பேச்சு வார்த்தை நடக்கின்றது. ஆனால் ஹம்தூன் ஆராவை மணமுடித்த குற்றத்தால் யாரும் பெண்ணெடுக்காமல் திருமணம் தடைப்படுகின்றது. நாவலின் இறுதியில் ஹம்தூனின் மகளுக்கு பல தடைகளுக்குப் பின்பு திருமணமாகின்றது. ஆனால் அவ்வாறு அவள் மணமுடித்த மாப்பிள்ளை குறித்த சம்பந்தியின் வேலைக்காரப் பெண்ணான சிங்களப் பெண்ணின் மகன் என்று அறியக் கிடைக்கின்றது. அச்சமயம் ஆராவின் தந்தை தன்னால் என்ன பாடுபட்டிருப்பார் என்பதை ஹம்தூன் எண்ணி வருந்துகின்றான்.

ஆசை என்பது யாருக்கும் ஆபத்தில்லாததாக அமையும்போதே அந்த ஆசை நிறைவேறுகையில் சந்தோசம் கிடைக்கும். ஆனால் ஹம்தூன் ஆசைப்பட்டதை ஓடியார் நிறைவேற்றிக் கொடுப்பதானது இஸ்லாத்தின் வரம்பை மீறும் ஒரு செயலாக நாவலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மார்க்கத்துக்கு முரணான இவ்வாறான காரியங்களைச் செய்தால் இறுதியில் என்ன தண்டனையை அல்லாஹ் தருவான் என்பதை துல்லியாமாகச் சொல்லியிருக்கின்றார் நாவலாசிரியர் உ. நிசார். கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், சிறுவர்கதைகள் ஆகிய துறைகளில் பல நூல்களை வெளியிட்டிருக்கும் உ. நிசார் அவர்களின் முதலாவது நாவலே இந்த கோதுமைக்கனி என்ற நாவலாகும். தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளிவந்துள்ள இந்த நூலானது உ. நிசாரின் 25 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல காத்திரமான நூல்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - கோதுமைக்கனி
நூலின் வகை - நாவல்
நூலாசிரியர் - உ. நிசார்
தொலைபேசி - 0778216281
வெளியீடு - பானு வெளியீட்டகம்
விலை - 400 ரூபாய்

No comments:

Post a Comment