Wednesday, May 13, 2020

139. சின்னப் பாப்பா சிறுவர் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

சின்னப் பாப்பா சிறுவர் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

இலக்கியம் தோற்றம் பெற்ற காலம் முதல் சிறுவர் இலக்கியமும் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது என்பது இத்துறை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்கின்ற போது அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல், விளையாடச் செய்தல், அவர்களின் நற்பண்புகளை வளர்த்தல் போன்ற இன்னும் பல துறைகளில் இவ்விலக்கியம் தமது வகிபாகத்தினை பெருமளவில் வழங்கி வந்துள்ளது. அதனால் சிறுவர் இலக்கியம் இன்றைய காலம் வரை அழிவு, சிதைவு எனும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து அதில் பெற்ற வெற்றிகளின் உந்துதலினால் எழுச்சி கண்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எந்த சமூகத்தில் நாகரிக, பண்பாடுகள் உயர்ந்து காணப்படுகிறதோ அந்த சமூகம் உலகிற்கு பல முன்மாதிரிகளை வழங்கத் தொடங்குவதோடு நாளைய தலைமைத்துவத்திற்கான பண்பியல்புகளைச் சொல்லுகின்ற தகுதியினையும் பெற்றுக் கொள்கிறது.

இன்றைய உலகில் அமைதியின்மை, ஒழுக்க, மனித நேய மீறல்கள் என்பன பல்கிப் பெருகி வியாபிப்பதற்கு கவனிப்பாரற்று தான்தோன்றித்தனமாக வாழத் தலைப்படுகின்ற சிறார்களின் பங்களிப்பு காரணமாக இருக்கின்றது. இத்தகைய ஆபத்தான நிலையிலிருந்து மீண்டெழுவதற்கும், சிறுவர் சமுதாயம் சிறந்த முறையில் வாழத் துணிவதற்கும் நம்மிலிருந்து பாரிய முயற்சிகள் தோற்றுவிக்கப்படல் வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் தமது பிள்ளைகளில் அதிக அக்கறை செலுத்த முற்படுகின்ற போது அங்கே அமைதியும் சந்தோசமும் தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறுவர் இலக்கியங்கள் பெருமளவில் பங்களிப்புச் செய்து வருகின்றன. சிறுவர் இலக்கியங்களின் மூல நோக்கமே சிறந்த சிறுவர் சமுதாயத்தினை கட்டியெழுப்புவதேயாகும்.

அந்தவகையில் கலாபூஷணம் இலக்கிய வித்தகர் பீ.ரீ. அஸீஸ் அவர்களின் சிறுவர் இலக்கியப் பங்களிப்பு மிகக் காத்திரமானதாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். அவர்களை நல்வழிப்படுத்துவது மிக முக்கியமானதொன்றாகும். கலாசாரம், பண்பாடு, ஒழுக்க விழுமியம் என்பவற்றைப் பேணுகின்ற சிறுவர் சமுதாயம் உருவாவதோடு சட்ட விரோத செயல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சிறுவர்களுக்காக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் பீ.ரீ. அஸீஸ். அவற்றில் ஷஷசின்னப் பாப்பா|| எனும் நூல் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் சிறுவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய இரசனை மிகுந்த பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் அன்பு, இரக்கம், ஈகை, ஆன்மீகம், சகோரத்துவம் போன்றவற்றைப் போதிப்பதாக அமைந்துள்ளன.

அழகிய அட்டைப்படத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூல் 12 பாடல்களை உள்ளடக்கி 32 பக்கங்களைக் கொண்டதாக வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமான வர்ணப் படங்கள் சேர்க்கப்பட்டிருப்பது மேலும் சிறபப்பளிக்கிறது.

''பசுவே பசுவே'' (பக்கம் 13) எனும் பாடலில் ஜீவகாருண்யம் இழையோடுவதையும் சின்னச் சின்ன வசனங்கள் மூலம் சிறப்பாக அவை விளங்கப்படுத்தப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பசுவே பசுவே
பால் தரும் பசுவே
பசும் புல் மேய்ந்திட
வருவாய் பசுவே!

பச்சைத் தளிர்கள்
இருக்குது பசுவே
பசியாற உணக்கு
தருவேண் பசுவே!


''ஒற்றுமையாய் வாழ்வோம்'' (பக்கம் 17) எனும் பாடலில் ஒற்றுமையின் உயர்வு பற்றி கவிஞர் குறிப்பிட்டுள்ளார். எச்சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை இப்பாடல் தெளிவுபடுத்துகின்றது.


சின்னஞ்சிறு பாலர் நாங்கள்
சிறகடித்து மகிழுவோம்
வண்ண வண்ண பூச்சிகளாய்
பறந்து திரிந்து பாடுவோம்!

உள்ளமெல்லாம் ஒன்றுபட்டு
உற்ற நண்பர்களாய் ஆகுவோம்
நல்லதையே செய்து நிதம்
நாணயமாய் பழகுவோம்!

''சிறப்படைவோம்''  (பக்கம் 21) எனும் பாடல் அன்னை தந்தையரை மதித்து அவர்களை கண்களைப் போல் பாதுகாப்பதோடு அவர்களுக்கான பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்ற கருத்தைத் தொனிப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது.

அன்பு நிறைந்த பிள்ளைகளே
அழகாய் வாழும் பிள்ளைகளே
பண்பு நிறைந்த வாழ்க்கையினை
படித்துக் கொள்வோம் நாங்களுமே!

அன்னை தந்தையிடம் பணிவோம்
அனுதினமும் அவர்கள் சொல் நடப்போம்
கண்ணைப் போல காத்து நிதம்
கருணை மழையை  நாம் பொழிவோம்!

இவ்வாறு பல படிப்பினைகள் நிறைந்த பாடல்களை தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் சின்னப் பாப்பா யாவரும் படித்து பயன்பெறக்கூடிய நூலாகும். கவிஞருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - சின்னப் பாப்பா
வகை - சிறுவர் பாடல்;
நூலாசிரியர் - பி.ரீ. அஸீஸ்
தொலைபேசி  - 0772902042
ஈமெயில் - azeesphfo@gmail.com
வெளியீடு - பாத்திமா றுஸ்தா பதிப்பகம்
விலை - 210 ரூபாய்

No comments:

Post a Comment