Wednesday, May 13, 2020

127. மழையில் நனையும் மனசு - கவிதைத் தொகுதி

மழையில் நனையும் மனசு - கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஜனாப் கே.எம். ஹலால்தீன்  - திருமதி. பீ.யூ. நஸீஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரிந்த எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார்.

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதி ரிஸ்னாவின் 10 ஆவது நூலாகும். 78 கவிதைகளை உள்ளடக்கியதாக 120 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை பூங்காவனம் இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்), மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) ஆகிய நூல்களை இவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் ''ஊவாவின் கவிதை இலக்கிய வரலாற்றில் ரிஸ்னாவுடைய கவிதைகளும் நிச்சயம் ஆராயப்படும். இளம் வயதிலேயே இலக்கியத் துறையில் இந்நூலாசிரியர் பல பங்களிப்புகளைச் செய்து வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கைநெறியை நிறைவு செய்துள்ள இவர் பல இலக்கிய அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகித்து வருகின்றார். ஒரு சிறந்த கவிஞன் என்பவன் தக்க சொல்லை, தக்க இடத்தில், தக்கவாறு கையாள்பவன் என்றும் - சிறந்த கவிதை என்பது நல்ல சொற்கள், நல்ல ஒழுங்கில் அமைவது என்றும் கொள்ளலாம். இக்கவிஞரின் கவிதைகளில் இப்பண்புகளைத் தொடர்ந்து காணலாம் என்பதற்கு 78 இற்கும் மேற்பட்ட கவிதைகளில் பல உதாரணங்களை அவதானிக்க முடிகின்றது. கவிதைக்காகக் கற்பனையில் ஆழ்ந்துவிடாமல் தன்னைச் சூழ உள்ள சமூகம், அதில் வாழும் மனிதர்கள்.. இவற்றையே பொருளாகக் கொண்டு தனது கவிதா ஆற்றலைச் சிறப்புறக் காட்டியுள்ள நூலாசிரியரின் இந்நூல், சகல தமிழ் பேசும் மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் நிச்சயம் பெறும்.'' என்று கூறியுள்ளார்.

அதுபோல இந்த நூலுக்கு நயவுரை வழங்கியுள்ள முன்னாள் அரசாங்க்க தகவல் திணைக்கள தகவல் அதிகாரியான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''இலக்கியத் தடத்தில் கால்பதித்து அதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் இளையவர்களில் முக்கியமான ஒருவராகவே தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவை நான் பார்க்கிறேன். ஒருசில கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு ஓய்ந்து போவோர்களாய் பல இளையவர்கள் இருக்கையிலே தான் சார்ந்த இலக்கியத் துறையில் ஒரு திடமான தடத்தைப் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் நிறையவே காணப்படுவதை நான் அறிவேன். இலக்கியத் துறையிலுள்ள மூத்தோருடன் அவருக்கு இருக்கும் தொடர்பு, அவர்களை அணுகும் முறை என்பனவுடன், இளையவர்களுடன் இருக்கும் சுமுக உறவு போன்றன இத்துறையில் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்வுடனும் ரிஸ்னாவை ஈடுபட வைக்கிறது என்று சொன்னால் அது பிழையல்ல. ஏறக்குறைய இலங்கையின் எல்லா பத்திரிகை, சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் தனது பதிவினைச் செய்துள்ள எச்.எப். ரிஸ்னா, கடல் கடந்தும் தன்னை நிலைப்படுத்தியுள்ளார். அவருக்கென்றே பல பிரத்தியேக அழகான வலைப்பதிவுகள் சர்வதேசமெங்கும் அவரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவரிடமிருக்கும் தேடல் முயற்சிகள் அவரை பண்படுத்திக் கொண்டிருக்கின்றன.''

கருத்துரை வழங்கியுள்ள சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா அவர்கள் ''எழுத்துக்களால் சமூகத்தை திருத்திவிட முடியும் என்று நம்புகிறவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறார்கள். எழுத்தின் சமூக பயன்பாடு பற்றி நிறைய வாதப் பிரதிவாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னா உன்னதமான நோக்கங்கள் நிறைந்தவராகக் காணக்கூடியதாய் உள்ளார். இவரது உறைப்பான வார்த்தைககள், உபதேசங்கள், போதனை கல்வி போன்றன நிச்சயம் சமுதாயத் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றன. நெருப்பு வாழ்க்கை, இதயமும் பழஞ்செருப்பும், பெரிய புள்ள, போலி மனிதர்கள், சீதனம் தின்னும் கழுகுகள், ஏழைத் தாய் போன்ற கவிதைகளில் பொதிந்துள்ள கருத்துச் செறிந்த அவரது உன்னத எழுத்துக்கள் இந்த எதிர்பார்ப்பிற்கு வலு சேர்க்கிறது எனலாம்'' என்று ரிஸ்னாவின் கவிதைகள் பற்றி சிலாகித்துள்ளார்.

'மழைக் குளிரில் தளிர் பறிக்கும் மலையக மாதருக்கு' இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இந்த நூலில் உள்ள 78 கவிதைகளில் சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.

சீற்றம் (பக்கம் 21) என்ற கவிதை வெள்ள அனர்த்தத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. அத்துடன் அந்த அனர்த்தம் மனிதனுக்குப் புகட்டக்கூடிய பாடங்களையும் இக்கவிதை கற்பிக்கின்றது. எமனைப் போல மழை பெய்து அதனால் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் அழிந்துவிட்டதாகக் கூறும் நூலாசிரியர் அவ்வாறு அனர்த்தம் ஏற்பட்ட வீடுகளுக்குள் சென்று திருடுவோரையும் இக்கவிதையில் சாடியிருப்பது அவ்வாறு நடப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் அமைந்துள்ளது.

கொல்லும் எமனாய் வானவெளி
துன்ப மழையைப் பொழிந்ததம்மா
சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
பார்த்திருக்க அழிந்ததம்மா!

வெள்ளம் என்ற சொல் கேட்டு
உள்ளம் தீயாய் எரிந்ததம்மா
கனவில் பூக்கும் தோட்டத்தில்
கல்லறை மட்டும் தெரிந்ததம்மா!

கூரை வரையும் நீர் வந்து
பதறச் செய்து வதைத்ததம்மா
ஓடி ஒழிய வழிகளின்றி
பின்னால் வந்து உதைத்ததம்மா!

எனது ஊரும் தலைநகரும் (பக்கம் 43) கவிதை சொந்த ஊரின் சிறப்புகளை எடுத்துக் காட்டுவதோடு, தலைநகரில் செயற்கை வாழ்க்கை வாழுகின்ற மனக்கிலேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. சொந்த ஊரிலிருந்து வருபவர்களுக்கு தலைநகரம் அபயமளித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றதென்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மன வாட்டத்தைக் கொடுப்பதும் உண்மையே. காரணம் வீட்டைவிட்டு தொழிலுக்காக, படிப்புக்காக என்று தலைநகரில் வந்தேறு குடிகள்தான் அதிகம். அவ்வாறு காலச் சக்கரத்தின் காய் நகர்த்தலுக்கு ஆட்பட்டு வந்தவர்களின் மனவோட்டத்தை, ஊர் பற்றிய பிரக்ஞையை இக்கவிதை மூலம் நன்கு உணரலாம்.

அங்கு...
நான் ஓடித் திரிந்த மேட்டுநிலம்..
குளிர் பூசும் காலநிலை..
பசுமைமிகு பச்சை மரம்..
அண்ணார்ந்து பார்க்க குன்றுகள்!
மொட்டை மாடியமர்ந்து
கிறுக்கிய கவிதை..
மரத்தடி நிழலின் ஈரலிப்பு..
பலாப் பழத்தின் வாசனை..
என் சமையலை ருசித்தவாறே
கலாய்த்த உறவுகள்..
அன்பின் உம்மா வாப்பா..
செல்லத் தங்கை.. சுட்டித் தம்பி!!!

இங்கு...
சுட்டெரிக்கும் சூரியன்..
பச்சையம் மறந்த பொட்டல் வெளி..
ஜீவிதம் கசக்கும் விடியல்கள்..
வாகனங்களின் தொடர் இரைச்சல்..
மூடியே கிடக்கும் ஜன்னல்கள்..
கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி..
நெருப்பு விலையாய் சாமான்கள்..
சுனாமி தந்த கடல் அல்லது கரை
செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்!!!

லயத்து வீடும் கரத்தை மாடும் (பக்கம் 66) என்ற கவிதை காலாகாலமாக மலையக மக்கள் படுகின்ற துயரத்தை பிரதிபலிக்கின்றது. கொழுந்து பறிக்கும் தொழிலைச் செய்பவர்கள் மழை வெயில் பாராது, கஷ்டப்படுகி;ன்றனர். ஆனாலும் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு ஷலயத்துக் காம்பறா| என்று சொல்லப்படும் சிறு அறையில் பல தலைமுறைகள் வாழ்ந்து வருகின்றார்கள். வாக்குகள் கேட்டு காலடி தேடிப் போகும் அரசியல்வாதிகள் கூட, அம்மக்களின் பிரச்சிகைளைத் தீர்த்து வைக்கப் பாடுபடுவதில்லை. ரொட்டியும் சம்பலும், தேயிலைச் சாயமும்தான் அவர்களது உணவு. இந்த அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையை இக்கவிதை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றமை சிறப்பம்சமாகும்.

கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு!

சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழாப் போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி!

மானியம், கடனுதவி
அர்த்தமெல்லாம் பிழச்சிப் போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சிப் போச்சி!

நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தொரே மாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி!

லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட நெலச்சிப் போச்சி!

குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!

இளம் தலைமுறை எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராக எச்.எப். ரிஸ்னாவைச் சொல்லலலாம். இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிளும் காலூன்றி வெற்றி பெறக்கூடிய திறமை இவருக்கு நிறையவே இருக்கின்றது. இவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது. சந்தக் கவிதைகளில் மனம் லயிக்கச் செய்யும் எழுத்தாற்றல் கைவரப் பெற்ற இவரது இலக்கியப் பணி தொடர்ந்தும் சிறப்பாக இடம்பெற வாழ்த்துகிறேன்!!!


நூல் - மழையில் நனையும் மனசு 
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222, 0719200580
மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com 
விலை - 400 ரூபாய்

No comments:

Post a Comment